Thursday, July 16, 2020

பழைய திருடனை விரட்ட புதிய யுக்தி (Pazhaiya Tirudanai Viratta Pudiya Yukti)

மூலம்: வித்வான் பி.ஜி. அனந்த

தமிழாக்கம்: ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


நம்மிடம் கெட்ட வழக்கங்கள், துர்குணங்கள் அனைத்தும் பல காலமாக இருப்பதுண்டு. சில நேரங்களில் வம்ச பரம்பரையாக வந்திருப்பதும் உண்டு. திடீரென நாம் அவைகளை  திருத்த முயற்சித்தால் அவ்வளவு சுலபமாக வளையாது. மாறாக "நாங்கள் பல காலமாக இங்கு இருப்பவர்கள். இத்தனை நாட்கள் வாளாவிருந்து இப்போது ஏன் ஆர்பாட்டம் செய்கிறீர்கள்" என்று  நம்மையே வினவும். இதற்கு ஸ்ரீ ரங்கமஹாகுரு  ஒரு சந்தர்பத்தை உதாரணமாக கூறினார்.


அவருடைய முன்னோர்களின் காலத்தில் ஒரு முறை காலரா வியாதி பரவியது. அப்போது வழக்கப்படி அனைவரும் கிராமத்தை விட்டு வெளியில் வாழத் தொடங்கினர். தற்காலிகமான ஏற்பாடு என்பதால் தென்னை, பாக்கு ஓலைகளினால் குடிசை அமைத்திருந்தனர்.


குருக்களின் முன்னோர் ஒருவரின் குடிசையில் ஓர் ஊறுகாய் ஜாடி இருந்தது. அதில் ருசியான ஊறுகாய் ‌நிறைந்திருந்தது. நாட்கள் செல்ல செல்ல ஜாடியில் உள்ள ஊறுகாய் எதிர்பார்ப்பை விட வேகமாக காலி ஆகத் தொடங்கியது. ஒரு நாள்  வீட்டார் பார்க்கும் போதே குடிசையின் சந்தில் ஒரு கை ஜாடியிலிருந்து ஊறுகாயை திருடிக் கொண்டிருக்கிறது! வீட்டார் திருடன் சிக்கினான் என சென்று பிடித்தார்களாம். சுவாரஸ்யம் என்னவென்றால் சிக்கிய ஆள் ஆச்சரியத்துடன் "எவ்வளவோ நாட்களாக நான் இங்கு ஊறுகாய் திருடுகிறேன், இன்று ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்" என்றானாம்! திருடனே எஜமானனை ஆக்ஷேபித்தான்!


அதனால்  துர்குணங்கள் பல நாட்கள்  நம்முள் தங்கி  விடாமல் கவனமாக  இருக்க வேண்டும். ஒருவேளை  நீண்ட காலமாக  ஊறி இருந்தால்  மிகவும் உபாயமாக வெளியேற்ற வேண்டும். வருடக்கணக்கில்  நாமே வளர்த்த நாய், பூனை இனி நமக்கு  தேவை   இல்லை  எனினும் திடீரென  அவைகளை  வெளியேற்ற  முடியாது. அவ்வாறு  செய்தால்  அது  நம் மனதிற்கும் துன்பத்தை  அளிக்கும்.


இவ்வாறு  உள்ள  போது  பல ஜென்மங்களாக ஊறியுள்ள தீய குணங்களை  அவ்வளவு  சுலபத்தில் வெளியேற்ற  முடியுமா? ஆனால்  அதற்கு  ஓர் உபாயம்  உண்டு. தேவையற்ற குணங்களை  வெளியேற்றி, தேவையான  ஆத்ம குணங்களை  உள்ளே கொண்டு வர வேண்டும்.


இயற்கையில் அதற்கு  இன்னுமொரு  உபாயம்  உண்டு. அதை ஓர்  உதாரணத்தின் மூலம்  காணலாம். இரவில்  அனைவரும்  உறக்கத்தில்  ஆழ்ந்திருக்கும் நேரம்  திருடன்  ஒருவன் வீட்டில்  நுழைகிறான் என  வைத்துக் கொள்வோம். திருடன்  வீட்டிற்குள் நுழைந்ததை  எஜமானன் அறிந்தான். அவன்  அறிந்தது திருடனுக்கும் தெரிந்து  விட்டால்  அப்போது  என்னவாகும்? எஜமானன் எதுவும் செய்யவில்லை  என்றாலும்  திருடன்   தப்பியோட முயற்சிப்பான். நம்  தேவையற்ற  துர்குணமும் அவ்வாறே. அது  இருப்பதை நாம்  உணர்ந்து  விட்டோமானால் தானாகவே அது  வெளியேறும். அதற்கு  சில காலம் தேவைப்படும்.


இது  நம் மனதிற்கு  உள்ள  ஒரு  திறன். நாம்  எது தேவையற்றது  என நினைக்கிறோமோ அது  வெளியேறி  எது  தேவையானது என்று  வரவேற்கிறோமோ அது உட்புகுந்து நிலைத்து  நிற்கும். ஆகையால்  நமக்குள்  உள்ள  தேவையற்ற  தீயகுணங்கள்  எவை என்பதை  உண்மையாக அறிய  வேண்டியது மிகவும்  முக்கியம். அறிந்த பின்  இது  எனக்கு நிச்சயம்  தேவையற்றது என உறுதி  செய்து கொள்வது  அடுத்த நடை. 'இறைவனே! தேவையற்ற  இக்குணத்திலிருந்து என்னை காப்பாற்று'  என உரக்க  ப்ரார்த்தித்தால் நிச்சயம் அக்குணம் நம்மிடம்  தங்காது.  இம்முயற்சியை நாம் அனைவரும்  செய்து  தேர்ச்சி  பெறுவோம்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.