Thursday, July 9, 2020

கங்கையின் பிறப்பில் கற்கும் பாடம் (Kankaiyin Pirappil Karkum Paṭam)

மூலம்: சுப்ரமண்ய சோமயாஜி 
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

ஸகர சக்ரவர்த்தியின் அசுவமேத குதிரை தொலைந்து போயிற்று. குதிரையை கொண்டு வராமல் யாகம் பூர்த்தி ஆகாது. ஸகரன் தன்னுடைய அறுபதாயிரம் மகன்களையும் குதிரையை தேடுவதற்கு அனுப்பினான். குதிரை மஹாத்மாவான கபில மகரிஷியின் ஆச்ரமத்தில் நின்றிருப்பதை அந்த அரசகுமாரர்கள் கண்டனர். கபிலர் ஆழ்ந்த தவத்தில் திளைத்திருந்தார். அவருக்கு  இது எதுவும் தெரியவில்லை. ஆனால் மதத்தில் திளைத்திருந்த  அரச குமாரர்கள் கபிலரே குதிரையை திருடியவர் என்று எண்ணி அவரை கொல்வதற்கு பாய்ந்து வந்தனர். சிறந்த தவசீலரும், ஸத்வ குண சீலருமான கபிலரை இவ்வாறு காரணமின்றி அவமானம் செய்ததால் இயற்கையே அவர்களின் உடலில் அக்னியை ஏற்படுத்தியது. கபிலர் கண்களை திறந்த உடன் அவர்கள் அனைவரும் சாம்பலாயினர்.

இங்கே தன் புத்திரர்கள் திரும்பி வராததை கண்டு சகரன் தன் பேரனான மகாத்மா அம்சுமந்தனை அனுப்பினான். அம்சுமான் கபிலரின் ஆச்ரமத்தின் முன்புறம் குதிரையையும், சாம்பல் மேட்டையும் கண்டு மகாத்மாவான கபிலரை மிக்க கௌரவத்துடன் வணங்க கபிலர் நடந்ததை கூறி அம்சுமானின் சிறிய தகப்பனார்களை உய்விக்க கங்கையை பூமிக்கு கொண்டு வருவது ஒன்றே வழி என உரைத்தார். அம்சுமான் கபிலரின் அனுமதியுடன் குதிரையை  கொண்டு சென்றான்.  அச்வமேதயாகம் பூர்த்தி அடைந்தது. கபிலரின் உத்தரவின்படி பல ஆண்டுகளாக கங்கையை வருவிக்க தவமிருந்தும் அவன் வாழ்நாளில் அது ஈடேறவில்லை. அவனுக்கு பிறகு அவன் மகன் திலீபனும் கங்கைக்காக தவம் புரிந்தான். பிறகு திலீபனின் மகன் பகீரதனின் கோரமான தவம் கங்கையின் வருகைக்கு வழி வகுத்தது. விஷ்ணு பாதத்தில் உத்பத்தியாகி  ஹரனின் ஜடையில் தோன்றி இருவருடைய சக்தியையும்  தன்னுள்ளே கொண்டு பாகீரதியாகி தேவகங்கை பகீரதனின் முன்னோர்களை உய்வித்தாள்.

ஸ்ரீரங்கமகாகுரு கூறியது: பகீரதனின் தவத்தினால் கங்கை இறங்கி வந்தாலும் அவனுடைய முன்னோர்கள் மூவரின் தவமும் பகீரதனின் தவத்துடன் இணைந்திருந்தது என்பதை மறக்க முடியாது. ஒரு தடிமனான மரத்தை கோடலியால் 20 தடவைபிளக்கும் போது ஒவ்வொரு முறையும் அதன் இறுக்கத்தை தளர்த்தி கடைசி முறை அது பிளக்கப் படுகிறது. அவ்வாறே அம்சுமான், திலீபன் இவர்களின் தவமும் பகீரதனின் சாதனைக்கு துணை புரிந்தது. அவனுடைய தவமும் அத்துடன் இணைந்து கங்கையின் பிறப்பு எனும் மிகப்பெரிய செயல் சாத்தியமாயிற்று.

இக்கதையினால், அகங்காரம் சரிவிற்கு காரணம். அதனால் சகர குமார்கள் சாபத்திற்கு ஈடானார்கள். மகாத்மாக்களுக்கு இழைக்கும் அபசாரத்திற்கு இயற்கையே தண்டனை அளிக்கும். மகாத்மாக்களின் கருணை நற்பண்பு கொண்டவர்க்கு ‌‌சாத்யமில்லாத காரியத்தையும் சாதிக்க தூண்டும். கபிலரின் கட்டளையால் அக்காரியம் நிறைவேறியது. தலை முறைகளாக தொடர்ந்த தவத்தினால் அபூர்வமான மகத்தான செயலையும் சாதிக்க முடியும் எனும் அநேக பாடங்களை கற்கமுடியமல்லவா? கபிலர், அம்சுமான், திலீபன், பகீரதன், இறுதியில் புண்ய- பரிசுத்தமான பாகீரதி அனைவரும் நம் மனம் மற்றும் புத்திகளை தூய்மை படுத்தி உன்னதமான செயல்களுக்கு நம்மை தூண்டும்படி வேண்டுவோம்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.