Thursday, July 2, 2020

சிற்றின்பத்திற்காக பேறின்பத்தை இழக்கலாகாது (Cirrinpattirkaka Perinpattai Ilakkalakatu)

மூலம்: சுப்பிரமணிய ஸோமயாஜி
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ஒரு முறை ஒரு தவசி புனிதஸ்தலமான காசியில்  ஓடும் கங்கைநதியின் கரையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார். சிறிது தொலைவிலிருந்து ஒருவன் அவரை கவனித்த வண்ணம் இருந்தான். அவர் தவத்தில் மூழ்கி இரவு பகல் என நாட்கள் கடந்ததையே அறியவில்லை. பல நாட்கள் கடந்தும் அவர் இவ்வுலக நினைவை பெறவில்லை. அவரை கவனித்த வண்ணம் இருந்த நபர் அவருக்கு தக்க மரியாதை செலுத்தி ஆசி பெற விரும்பினார்.

அவர் கண்விழித்தவுடன் அவர் அருகில் சென்று கரம் குவித்து "ஐயா தாங்கள் எத்தகைய தியாகம் செய்திருக்கிறீர்கள். நெடு நாட்கள் தவத்தில் ஆழ்ந்து எல்லா உலக இன்பங்களையும் துறந்திருக்கிறீர்கள். தங்களை தரிசித்தது நான் பெற்ற பேறு "என்று வணங்கினான். துறவி இவ்வாறு பதிலளித்தார் "நான் பெரிய தியாகம் ஏதும் செய்துவிடவில்லை. மிகப்பெரிய இறைவனை அடையும் பொருட்டு அல்பமான சிற்றின்பங்களைத்தான் துறந்தேன். ஆனால் உன்னை பார். அல்பமான சிற்றின்பங்களை அடைய அத்துணை பெறிய இறைவனையே துறந்திருக்கிறாய்! எனவே உன் தியாகம்தான் உயர்ந்தது." எத்தகு உண்மையான கூற்று.

இது நம் அனைவருக்குமே பொருந்துமன்றோ?

நாம் நம் வாழ்கையில் அடையவேண்டிய உள்ளார்ந்த மகிழ்ச்சியும், அமைதியும் பெரும் பொருட்டு சிற்றின்பங்களை துறப்பதில்லை. சிற்றின்பங்களை அடையும் பொருட்டு நம் வாழ்க்கையின் குறிக்கோளையே துறந்து விடுகிறோம். ஒரு முதியவர் கூறினார் "ஒரு சிறிய பொருளை கண்ணிற்கு அருகாமையில் வைத்து  நோக்கும்போது அது பெரிய பொருளையே மறைத்து விடும். நம் விரலை கண்ணிற்கு மிக அருகாமையில் கொணரும்போது பெரிய மலைத்தொடரையும், பரந்த நீலவானையும் மறைத்துவிடும். அவ்வாறே நம் புலன்களின் இயல்பு என்னவெனில் அவற்றில் அதிகமாக ஈடுபட்டால்(அவைகளை வெகுஅருகாமையில் இருத்தினால்) அவற்றின் பின் ஒளிரும் பெரிய சைதன்யத்தையே(மூல ஜோதியையே) மறைத்துவிடும்.  அதற்காக புலன்களை உதாசீனப்படுத்த வேண்டும் என்பது  பொருளல்ல. புலன்களை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் அவசியம். சுவையான உணவுகளை ஏற்கலாம். அதே சமயம் அதிகமாக உண்டு அஜீர்ணத்தினால் பசி எடுக்கும் தன்மையையே இழந்துவிடுதல் தகாது.

ஸ்ரீஸ்ரீரங்கமஹாகுருவின் கூற்று:மனைவிமக்கள்பொன்பொருள் இவற்றிற்காக கண்ணீர் உக்க பழகியுள்ளோம்அவ்வாறே நம் வாழ்வின் வேரான இறைவனுக்காக கண்ணீர்விடவும் பழக வேண்டும்நம் பண்டைய முனிவர்கள் புலன்களின் இன்பத்திற்கும் ஆத்மனின் ஆனந்தத்திற்கும் இடையே சரியான விகிதாசாரத்தை வாழ்க்கையில் வகுத்துக்கொடுத்தனர்.  

இத்தகுவாழ்க்கை முறையை பின்பற்றியதால் உள்ளும், புறமும் மகிழ்ந்து சீர்மிகு வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்ததற்கு பாரதத்தின் தலைசிறந்த வரலாரே  தக்க சான்றாகும். இன்றும் நமது வாழ்க்கை  ஞானிகள் காட்டிய ஞானவொளியில் மலருமேயானால் அனைவரும் நிம்மதியான  வாழ்வு வாழலாமல்லவோ?

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.