Thursday, July 30, 2020

தண்டனை (Shikshe)

மூலம்: கே எஸ்  ராஜகோபாலன் 
தமிழாக்கம்: வனஜா 
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



பெற்றோர் தங்கள்  குழந்தைகளை  திருத்துவதற்காக சில சமயம் தண்டனை அளிக்கிறார்கள். பள்ளிகளிலும் மாணவர்கள் தவறு செய்யும்போது ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் தண்டிக்கிறார்கள்.  ஆயின் ஒரே மாதிரியான தவறுக்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான தண்டனை சரியல்ல. ஒரு பழமொழி அனைவரும் அறிந்ததே (A nod  for the wise and a rod for the fool). தடித்த  தோலுடைய எருமைக்கு வலுவான அடி விழுந்தால் மட்டுமே உறைக்கும். ஆனால் மென்மையான தோலுடைய பசுவிற்கு மெலிதாக தட்டுவதே  போதுமானதுஂ. அவ்வாறே சூழ்நிலையை பொறுத்து தண்டிக்கும் அளவும், விதமும் வேறுபடுகிறது

தண்டனையின் நோக்கம் தவறு செய்தவர் மனம் திருந்தவேண்டுமென்பதே.  ஒரே மாதிரியான தவறுக்கு பலவகையான தண்டனைகள் அறநூல்களில் கூறப்பட்டுள்ளன. மேலோட்டமாக பார்க்கையில் இது அநியாயமாக தோன்றக்கூடும். எனினும் நடுநிலையான மனமுள்ளவர்கள் விதவிதவிதமான தண்டனைக்கான கொள்கையை புரிந்து கொள்வர்.  வடமொழியில் உள்ள ஸிக்க்ஷா(ஏறக்குறைய தண்டனையை குறிக்கும் சொல்) கற்பித்தல் என்னும் அடிப்படையில் வந்ததுஂ(ஸிக்ஷ வித்யோபாதானே). இத்தகைய தண்டனை வரவேற்க கூடியதே. தண்டனை என்பது தவறு செய்தவனை பழிவாங்குதல் அல்ல. பதிலாக அவன் புரிந்து கொண்டு அதே தவறை எதிர்காலத்தில் செய்யாதிருக்கும்படி செய்வது.

ராமாயணத்தில் ஒரு சுவையான நிகழ்வு. விபீஷணன் தன் உற்ற நண்பர்களுடன் ராவணனை துறந்து ஸ்ரீராமனிடம் சரணடைய வருகிறான். ராமன் முக்கியமானவர்களின் கருத்தை  கேட்கிறான். "அரசாட்சியை அடையும் பொருட்டு தன் தமையனையே துறந்து வந்தவனை நம்பக்கூடாது" என்று தன் சகோதரனுடனேயே போர்புரிந்த சுக்ரீவன் கூறினான்! ராமனின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. "சுக்ரீவா, நீ சென்று அவனை அழைத்து வா. விபீஷணன் மட்டுமல்ல, ராவணனே வந்து  சரணடைந்தாலும் அடைக்கலம் அளிப்பேன்"  என்றான் ராமன். ராமனுக்கு ராவணன் மேல் எந்த முன்விரோதமும் இல்லைஂ. தன் தவறை உணர்ந்து மனம் திருந்தினால் அவனை தண்டிக்க வேண்டிய அவசியமில்லை என்பது ராமனின் கருத்துஂ. பாவியான ராவணனுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டுமா என்ற குழப்பம் விபீஷணனுக்கு ஏற்பட்டதுஂ. ராமன் அவனுக்கு அறிவுரை கூறினார் "விபீஷணா, இறுதி சடங்குகளை நிறைவேற்று. உன் சகோதரன் எனக்கும் சகோதரன் போன்றவனேஂ" ராமன் ராவணனை கொன்றதன் நோக்கம் அதர்மத்தை அழிக்க வேண்டுமென்பதே. எனவே ராவணன் மரண தண்டனை பெற்றான்.

அனைவருக்கும் தண்டனை அளிக்கும் சந்தர்ப்பம் கிட்டாதுஂ. ஆயினும் மற்றவர்களின் தவறுகளை நோக்கும் போது அவர்களுக்கு  அறிவுறுத்தும் வழிமுறைகளை நடுநிலையாக அணுகுவதை பழகவேண்டும்.

மஹாபாரதத்திலும்  ஸ்ரீகிருஷ்ணன்  துரியோதனனுடன் சமாதான உடன்படிக்கைக்கு முயல்கிறார். அவன் ஊசிமுனையளவு நிலத்தைக் கூட பாண்டவர்களுக்கு(தர்மத்திற்கு) அளிக்க மறுக்கிறான். சில நேரங்களில் மருந்துகள் பயனற்று போகும்போது மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கிறார். அவ்வாறே ஸ்ரீகிருஷ்ணன்  போர்தான் ஒரே தீர்வென எண்ணுகிறார்.

மனிதர்கள் சரியான அறிவில்லாததால் தவறு செய்கின்றனர். தவறிழைப்பவரின் மனதில் மாற்றம்  ஏற்பட்டால் மட்டுமே தண்டனைக்கு வெற்றிஂ. அத்தருணத்தில் தண்டனை என்பது அவர்களுக்கு பாதுகாப்பு.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.