Thursday, May 20, 2021

ஞானியை வழிபடுதல் இறைவனை வழிபடுவதற்கு ஒப்பாகுமா? (Jnaniyai vazhipadudal iraivanai vazhipaduvadarku oppaguma?)

மூலம்: சுமுக ஹெப்பார்

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



நம் கலாசாரத்தில்  குரு மற்றும் மூத்தோரை மதித்து  கௌரவிக்கும் நடைமுறை உள்ளது. நாம் அவர்களை சிறந்தவர்கள் எனவும் வழிபடுகிறோம். இத்தகைய "தனிமனித வழிபாடு" சமூகத்தில் கேள்விகுறியாகிறது. இதனை ஸ்ரீரங்கமஹாகுருவின்  விளக்கத்தின் மூலம் புரிந்து கொள்ள இயலும்.


               ஒருவரின் உறவினர் இல்லத்தில் சுப காரியம்  நடைபெற உள்ளது. குடும்பத்தில் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அன்றைய தினம் முக்கிய விருந்தினர் வேறு அவசர நிமித்தம் விழாவில் பங்கேற்க இயலவில்லை. அவர் செல்லாவிடில்  விருந்தளிப்பவர் ஏமாற்றமடைவார். எனவே தனக்கு பதிலாக தன் மகனை அனுப்பினார். விருந்தளித்தவரும் அவருக்கு பதிலாக(ப்ரதிநிதியாக) வந்த மகனை ஆதரவாக வரவேற்றார்.  சிறுவனாக கருதாமல் தந்தைக்கு அளிக்கும் அதே மரியாதையுடன் அவருக்கு ஏற்படுத்திய இருக்கையை அளித்தார். மகன் தந்தைக்குரிய பரிசுகளையும் பெற்று நல்ல முறையில் வழியனுப்பப்பட்டார்.


               இது அனைவரின் வாழ்விலும் உள்ள நடைமுறை. பிரதிநிதியாக விழாவில் பங்கேற்பவர் தன் தலைவனுக்குரிய அனைத்து மரியாதையையும் பெறுகிறார். அவ்வாறே இறைவழிபாடு போன்ற நிகழ்வுகளில் இறைவனே நிதி. இறைவனை உணர்ந்த ஒருவர் அவரின் ப்ரதிநிதியாக கருதப்படும் தகுதியை பெறுகிறார்.

           

 

இரும்புத்துண்டொண்று  எரியும் தணலின் மத்தியில் சேர்ந்ததென்றால் சற்று நேரத்தில் அத்துண்டும் தணலைப்போலவே காணும். இரும்புத்துண்டிற்கும் தணலுக்கும் வித்தியாசமே தெரியாதவாறு அத்துண்டு மாறுபட்டுவிடும். இவ்வாறே இறைவனை உணர்ந்த ஞானி முற்றிலும் இறைஉணர்விலேயே ஆழ்ந்து விடுகிறான். அவனின் உதிரம், மாம்சம்  முதலான ஸப்த தாதுக்களும்,   மனம்மெய்வாக்கு எனும் முக்கரணங்களும் இடையறாது இறைஉணர்வால் நிரம்பியிருக்கும்.  

 

ஏலக்காயை சுவைத்தவன் பேசமுற்பட்டால் அவ்வார்த்தைகளுடன் ஏலக்காயின்  நறுமணம் தானாகவே வெளிப்பரவும்.  அதே போன்றே ஞானியின்அனைத்து செயல்களிலும் இறைஉணர்வு மலர்ந்து வெளிப்படும்.


அத்தகைய ஒரு ஞானி கிடைக்க பெறும்போது அவர் இறைவனுக்கும் அடியவருக்கும் இடைமுகமாகசெயல்படுகிறார்.  அவர் தமக்கு அளிக்கப்படும் அனைத்தையும் இறைவனடி சேர்த்து, இறைவனிடமிருந்து பெருகும்  அருளை நமக்கு அளிக்கிறார். எனவே தான் இத்தகு ஞானியை வழிபடுதல் இறைவனையே வழிபடுதலுக்கு இணையாகும். அத்தகையவர் வழிபடுவதற்கு ஏற்றவராவார்.             எனவே ஞானியை வழிபடுவதை சாமானிய மனிதனை வழிபடுவது போன்று – தனிமனித வழிபாடாக- இலேசாக எண்ணக்கூடாது. அது நிதியெனவிளங்கும், அண்ட சராசரங்களுக்கும் மூலமாகிய பரம்பொருளுக்கு அவனின் ப்ரதிநிதியின் மூலம் செலுத்தும் வழிபாடாகும். பண்டைய காலத்தில் அனைத்து குருமார்களும் ஞானிகளாயிருந்தனர். எனவே நமது பண்பாட்டில் அவர்களை கௌரவித்து வணங்கும் பழக்கம் தோன்றியது. நம் பண்பாட்டில் இத்தகைய சிறந்த பழக்கங்களை நிறுவிய மஹாஞானிகளை சிரம் தாழ்த்தி வணங்குவோமாக.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.