Thursday, May 13, 2021

நமது கலாசாரத்தின் ஒட்டுண்ணி(parasite)களை பிரித்தெடுப்போம் (Namatu Kalacarattin Ottunni(Parasite)Kalai Pirittetuppom)

மூலம்: கே.எஸ்.ராஜகோபாலன் 
தமிழாக்கம்: மைதிலி ராகவன்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


விவசாயி ஒருவனின் தோட்டத்தில் செழித்து வளர்ந்த மாமரம் ஒன்றிருந்தது. அம்மரத்தின் மேல்  ஒரு காக்கை அமர்ந்திருந்தது. அது மரத்தின் மேல் எச்சமிட்டது. அந்த எச்சத்திலிருந்த வேப்பமரத்தின் விதை ஒன்று மரத்தின் மேல் விழுந்தது. காலப்போக்கில் பெய்த மழையினால் அவ்விதை மரத்தின் மேலே வளரத்தொடங்கியது. மாமரத்தின் வேரிலிருந்தே தண்ணீரை ஈர்த்துக்கொண்டு வேம்பு பெரியமரமாக வளர்ந்துவிட்டது. மாங்கனிக்கு பதிலாக வேப்பம்பழங்களையே வளரச்செய்தது அம்மரம். அத்தோட்டம் மாங்கனிகளுக்கே பெயர்பெற்றதாக இருந்ததால் விவசாயியின் பிள்ளைகள் வேப்பம்பழத்தையே மாம்பழம் என எண்ணத்தொடங்கினர்! இவ்வாறு வேரொரு மரத்தை அண்டி வளர்ந்து, தன்னை வளர்த்த மரத்தையே மறைத்துவிடும் மரம் 'ஒட்டுண்ணி'(parasite) எனப்படுகிறது.

         ஸ்ரீரங்கமஹாகுரு இந்த ஒட்டுண்ணியின் உவமையின் மூலம் இன்றைய காலகட்டத்தில் மக்கள் வஞ்சிக்கப்பட்டுவரும் வகையினை விவரித்தார்.

மரத்தின் மூலத்தை(வேரை) கூர்ந்து நோக்கியிருந்தால் தாங்கள் மாங்கனியென்று சுவைத்துக்கொண்டிருப்பது வேம்பு; இது ஒட்டுண்ணியின் விளைவு என்பதை அறிந்திருக்கலாம். இவ்வாறே நம் வாழ்க்கை எனும் மரத்தின் மீது அமர்ந்துள்ள கரிய காகம்  தமோகுணமான ஜடப்ரக்ருதி. காக்கைக்கு மாமரத்தின் மேல் அமரக்கிடைத்ததினால் வேம்பு மாவின் பெருமையை தனக்குரித்தாக்கி கொண்டது போல்,  தமோரூபமான ஜடப்ரக்ருதி பரமபுருடனின் இடத்தை தானே கவர்ந்துகொள்கிறது. மக்கள் மாயையில் மூழ்குகிவிடுகின்றனர்.

 நம் முனிவர்களின் பரம்பரையில் சரியான உண்மைகளே பிறந்துள்ளனவாயினும் இன்று அநேக ஒட்டுண்ணிகளினால் அவர்களின் சுயசிந்தனைகளுக்கு இடமற்ற நிலை உருவாகியுள்ளது. முனிவர்கள் கண்டறிந்த, உள்ளுறையும் பரமாத்மா எனும் சுடரையும், அதனை அடையுமாறு அவர்கள் வகுத்த வாழ்க்கைமுறையையும் நோக்கும் திறனுடையவர்கள் இருந்தால் மட்டுமே  முனிவர்களின் வழிமுறைக்கு ஒத்தவை-ஒவ்வாதவைகளை வேறுபடுத்தி கூற இயலும்.

 நவீன விஞ்ஞானத்தின் வரலாற்றை நோக்குகையில் புலப்படுவது யாதெனில், விஞ்ஞானரீதியான சிந்தனைகள், சோதனைகளினால் ஒரு காலத்தில் சரியென்று அங்கீகரிக்கப்பட்ட உண்மைகள் காலப்போக்கில் சரிந்து வீழ்ந்து, புது உண்மைகள் அவ்விடத்தை ஆக்ரமித்துக்கொள்கின்றன. இவ்வாறான மாற்றங்களை விஞ்ஞானிகள் வரவேற்கின்றனர். இவ்வாறே நாமும் விஞ்ஞான-கண்ணோட்டம் உள்ளவர்களே ஆயின் முனிவர்களின் கூறப்படுபவைகளில் எக்காலத்திற்கும் நிலைக்கும் உண்மைகளையும், உண்மையின் தோற்றத்தை மட்டுமே உள்ளவைகளையும் பிரித்துணரவேண்டும். இதற்கான முயற்சிகளுக்கு நவீன விஞ்ஞானகருவிகளை பயன்படுத்துவது மட்டுமேயன்றி நாமும் முனிவர்களைப்போன்று சுத்தமான ப்ரக்ருதி(ஆன்மீகத்திற்கேற்ற புலன்கள், மனம் முதலானவைகளை உட்கொண்ட உடல்)   உள்ளவர்களாக வேண்டும். மற்றும் நம்முள் ஒளிரும் பரத்தை நோக்குபவர்களாகவும் மாறவேண்டியது  இன்றியமையாததாகும்.

வெளியிலுள்ள சோதனைக்கூடங்களை அணுகாது, பரம்பொருளின் ஒளியில் இயற்கையை ஆராயந்து நோக்கியதே பண்டைய முனிவர்களின் ஆராய்ச்சியின் ரகசியம். இவ்வாறான மூலத்தை ஒட்டிய நோக்கை அடைந்தால் மட்டுமே முனிவர்களின் பரம்பரையில் பிறந்துள்ள நம் வாழ்க்கை ஒளிரும். 

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.