Thursday, August 6, 2020

உள் ஒளிரும் ப்ரம்மத்திற்கே மதிப்பு, வெளித்தோற்றத்திற்கல்ல (Ul Olirum Prammattirke Matippu, Velittorrattirkalla)

மூலம்: சுப்ரமண்ய சோமயாஜி
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஒருமுறை சீடர்களுடன்  கங்கைகரைக்கு நீராட செல்லும் போது ஒர் சண்டாளன்(மயானத்தை காப்பவன் ) அவனுடைய நான்கு நாய்களை  பிடித்தபடி எதிர்பட்டான். அவனுடைய தோற்றத்தைக் கண்டு அருவருப்புடன் சங்கரர் "ஓ சண்டாளனே விலகு" என்றார். அவன் அதை பொருட்படுத்தாமல் நகைத்ததால் வியப்புடன் மீண்டும்  கூறினார். சண்டாளனிடமிருந்து இச்சொற்கள் வெளிவந்தனஂ "ஓ. தவசியே,  இன்னும் உம்  மாயையிலிருந்து. வெளி வரவில்லையா?  விலகு என்று எதை குறிப்பிடுகிறீர்கள்? உடலென்றால் அது ஜடம்(உணர்வற்றது), நகர முடியாது. ஆத்மாவாயின்.அது எங்கும் நிறைந்தது. எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும்?" என்ன ஒரு அருமையான கேள்வி! உன்னதமான உண்மை  ஒரு சண்டாளனிடமிருந்து! உடனே சங்கரர் வியப்புடன் கூறினார் "நீ உண்மையைதான் உரைத்தாய். ப்ரம்ம ஞானத்தை அடைந்தவன் மட்டுமே இத்தகு ஆழமான பொருள் நிறைந்த  சொற்களை கூற இயலும். அத்தகு முற்றும் உணர்ந்த தவசீலர் அந்தணராயினும்,. சண்டாளனேயாயினும் அவரை  என் குருவாக கருதுகிறேன்" என்று கூறியவாறு வணங்கினார். பின்னர்  சண்டாளன் உருவில் நாய்களுடன் மறைந்திருந்த பரமசிவன் நான்கு வேதங்களுடன் அவருக்கு காட்சியளித்தார். சங்கராசார்யரின் வரலாற்றில் காணும் மர்மம் நிறைந்த சம்பவம் இது.

அனைத்து படைப்பின் பின்னணியில் விளங்குவதும், அனைத்தின் இருப்பிற்கு காரணமுமான சைதன்யமே ப்ரம்மம். வானொலி பெட்டியும், மின்விசிறியும் மின்சாரம்  தடைபடும்போது இயங்குவதில்லை. அவ்வாறே இறைவனின் ஆற்றல் கிட்டும்வரை உலகம் இயங்குகிறது. நிற்கும்போது அனைத்தும் முடிவிற்கு வந்துவிடுகிறது என்னும் ஸ்ரீரங்க மஹாகுருவின்  கூற்று கவனத்திற்குரியது. அத்வைத நிலையில் அனைத்தும் ப்ரம்மத்தால் நிறைந்திருக்கும்.  படைப்பு முழுவதும் நிறைந்திருக்கையில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எவ்வாறு நகர இயலும்? என்னும் அறிவின் பரீட்சை   சண்டாள வேடத்தில் வந்த இறைவனாலேயே நடத்தப்பட்டடது. சங்கரர் அவ்வுண்மைக்கு சரணடைந்து  அதன் பயனாக 'மனீஷாபந்சகம்'(maneesha panchaka) என்னும் வழிகாட்டும் தோத்திரத்தை இயற்றி இறைவனுக்கு அர்ப்பணித்தார். இச்சம்பவம் பகவத்பாதரின் நேர்மையான அறிவுடைமையை பறைசாற்றுகின்றது.

ஒரு சண்டாளன் இறுதி சத்யத்தினை நினைவுறுத்தியவுடன் அவனையும் குருவாக ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை. உள் ஒளிரும் ப்ரம்ம சத்யம் தான் மதிக்கப்பட வேண்டுமேயன்றி  அதனை உணர்ந்தவரின் வெளி தோற்றமும், உடையும் அல்ல. இப்பதிவால் அறிய வேண்டிய பாடம் இதுவே. பகவத்பாதரின் முதன்மையான குறிக்கோளும் இத்தத்துவத்தை நிலைநிறுத்துவதே. ஆதலால் அவருடைய வாழ்க்கை முழுதும் இத்தகு நிகழ்வுகள் அடங்கி இருந்தன. அனைத்தும் இவ்வுண்மையை தெளிவுபடுத்த வல்லவை. இது எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதை மறவாதிருப்போமாக.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.