Thursday, August 27, 2020

பெண்களுக்கு மட்டுமே அனுமதி (Pengalukku mattume anumadi)

 மூலம்: மைதிலி 

தமிழாக்கம் : ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


யதுவம்சத்தின்     ‌குலகுருவான கர்க்காசாரியார் ஸ்ரீ க்ருஷ்ணனின் ராஸக்ரீடையின்  ஒரு வினோதமான கட்டத்தை வர்ணிக்கிறார். க்ருஷ்ணபக்தரும், மஹாதபஸ்வியுமான ஒரு மகரிஷி கண்ணனை தரிசிக்க மிக்க ஆவலுடன் மகாதேவனுடன் ப்ருந்தாவனத்திற்கு வந்தார். ராஸக்ரீடையை கண்ணாற‌ கண்டு களித்து மகிழ வந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அங்குள்ள மரங்கள் கோபியர்களின்  வேஷம் கொண்டு காவல் காத்தனர். இவர்கள் இருவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. "ப்ருந்தாவனத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. ஸ்ரீக்ருஷ்ணன் மட்டுமே இங்கு புருஷன்(ஆண்). ஆகையால் நீங்களும் பெண் வேடம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும்" என்றனர். மேலும் "மானஸ  ஸரோவரத்தில் மூழ்கி பெண்உருவமடைந்து வாருங்கள்" என உபாயம் கூறினார்கள். அவர்களிருவரும் அவ்வாறே மானஸஸரோவரத்தில் மூழ்கி பெண் உருவமடைந்து வந்து ப்ருந்தாவனத்திற்கு சென்று ராஸக்ரீடையை கண்ணாற கண்டு களித்து ஆனந்த பரவசமானார்கள்.

மேற்கூறிய சம்பவம் மிக வினோதமானதாக தோன்றுகிறது. ஏன் பெண்களாகவே இருக்க வேண்டும்? மானஸஸரோவரத்திற்கு யாத்திரை சென்று வந்தவர்களில்  அநேக ஆண்கள் உண்டு. அவர்களில் யாரும் பெண்ணாக  மாறிய செய்தி இதுவரை அறியப்படவில்லை. ஆகையால் மேற்கூறிய சம்பவம் கற்பனை என்றே சொல்லலாமோ? புராணங்கள் போன்ற ரிஷிகள் இயற்றிய நூல்களில் அநேக சம்பவங்கள் தத்துவம் உள்அடங்கியவை. மிகவும் கடினமான தத்துவங்களை சுலபமாக புரியவைக்க அல்லது தத்துவத்தின்பால் மனத்தை ஈர்க்கும் கைகாட்டியாக கதைகளை இயற்றியதுண்டு.

மேற்கூறிய சம்பவமும் மிகவும் மேன்மையான விஷயத்தையே தெரிவிக்கிறது. இங்கு பெண் என்பது வெளித் தோற்றமன்று. இறைவன் ஒருவனே ஆண்-(புருஷன்)-பரமபுருஷன். மற்ற அனைவரும் அவனையே பதியாக(கணவனாக) தலைவனாக கருதி அவனிடத்தே லயிப்பது பெண்மையின் உணர்வு என்பது ஞானிகளின் கூற்று. அவ்வாறான நிலையை அடையும்போது உள்ளே உறையும் இறைவனின் தரிசனம் சாத்தியம் என்னும் உண்மையை  இக்கதை உரைக்கிறது.

மானஸஸரோவரம் என்பது இமாலயத்தில் உள்ள நீர்நிலை. வெளியில் காணும் இது நம் மனத்தின் ஆழத்தில் உள்ள ஒரு பரிசுத்தமான இடத்தின் வெளிஅடையாளம் என்பது ஞானிகளின் கருத்து. இத்தகு பெண்உணர்வை அடைந்தால் அனைவரும் இறைஉணர்வை அனுபவிக்க இயலும்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.