Thursday, August 20, 2020

தீர்கபந்து (Dhirgabandhu)

மூலம்: பி.ஜி. அனந்த 
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



பிறவிக் கடலை கடக்க துணை புரியம்  குரு(ஆசார்யர்) பல விதமான பெயர்களால்  அழைக்கப்படுகிறார். அவை வெறும் பெயர்களோ, ஒத்தசொல்லோ அல்ல. குருவின் சிறப்பான குணநலன்களையும் இயல்பையும்  எடுத்துக்காட்டும் பதங்கள். அவற்றில் ஒன்றுதான் 'தீர்க்கபந்து' (நிலையான உறவு).

உறவினன்
பந்து எனும் சொல் பிணைப்பு(கட்டு) என்பதை குறிக்கும் பந்தம் எனும் சொல்மூலம் ஏற்பட்டதுஂ.  இருவரிடையே  ஒரு பிணைப்பு அல்லது ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டவன் என்ற பொருளை குறிக்கிறது 'பந்து' என்ற சொல். சாதரணமாக இச்சொல் பிறப்பினால்   ஏற்படும்  சொந்தத்தை குறிக்கும். பிறப்பினால் ஏற்படும் உறவு ஆயுட்காலத்திலும் மற்றும் அதன் பிறகும் தொடரும். தசரதனுக்கும் ராமனுக்கும் இடையேயான தந்தை மகன் உறவு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் அறியப்படுகிறது.

சில உறவுகள் பிறப்பிற்கு பின் ஏற்பட்டாலும் ஆயுள் முழுவதும் நிலைத்திருக்கும். உதாரணமாக, கணவன்-மனைவி உறவு, சிறுவயது நட்பு போன்றவை. ஆசிரியர் மாணாக்கர் உறவும் இத்தகையதே. ஒரு மாணவன் தன்னை முழுமையாக  குருவிடம் ஒப்படைத்து அவர் ஏற்றுக்கொள்ளும் வரை அவர்களிடையே எந்த உறவும் இல்லைஂ. ஏற்றுக்கொண்டபின் என்றும் நிலைத்திருக்கும்.

குரு(ஆசார்யன்)
இவ்வுலகில் கற்பதற்கு அனேக விஷயங்கள் உள்ளன. இவ்வுலக விஷயங்களை கற்பிப்பவரை குரு எனறோ கற்பவரை சீடன் என்றோ  கூற இயலாதுஂ. குரு, சீடன் என்பவை   சிறப்பான பொருள் உள்ள பதங்கள். யாரொருவர் ஆன்மீக பாதையில் வழிநடத்தி இறைவனை காணச்செய்கிறாறோ அவரே குரு எனப்படுவார்.  யார் ஒருவன் இறைவனை அடைவதையே  குறிக்கோளாக கொண்டு குரு வழிகாட்டும் பாதையில் அயராது பயணிக்கிறானோ அவனே சீடன் எனப்படுவான். குருவின் மூலம் கிடைக்கப்பெறும் ஆழ்ந்த ஆன்மிக கருத்துக்களும், வழிகாட்டலுமே  வித்யை எனப்படும். இக்கருத்தையே பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் பகவத்கீதையில் குறிப்பிடுகிறான் "அத்யாத்ம வித்யா வித்யானாம்" "வித்யைகளனைத்திலும் நான் அத்யாத்ம வித்யை."

ஒரு ஜீவன் பிறவி தளையிலிருந்து விடுபட்டு முக்தி அடைவதையே இப்பிறவியில் குறிக்கோளாக கொண்டால்  அத்தகு ஆழ்ந்த ஆன்மீக பாதையில் வழிகாட்டும்படி குருவை பிரார்த்திக்கிறான். குருவானவர்  சீடனுக்கு அதற்குரிய  தகுதிகள் உள்ளனவா என ஆராய்ந்து ஏற்றுக்கொள்கிறார். அக்கணம் மிகவும் புனிதமானது. அப்போதிலிருந்து  குரு-சீடனிடையே  ஒரு ஆன்மீக பிணைப்பு உருவாகின்றது. சீடன் ஸாதனை புரிபவன், குரு சித்தி அடைந்தவர்,  ஆன்மீக பயணத்தின் உன்னத நிலையை எட்டியவர் என்பதை நினைவு கூர்தல் அவசியம்.  இருவரும் ஸாதனை புரிபவரே ஆயின் அவர்களில் ஒருவன் குருவாக இயலாது. நீச்சல் பயிலும் இருவரில் யாராவது ஒருவன் கற்றுக்கொடுக்க முயன்றால் கதி என்ன?!

தீர்க்கபந்து
ஒரு குருவானவர் ஒருவனை சீடனாக ஏற்றுக்கொண்டபின் அவன் குறிக்கோளை அடையும்வரை  அப்பிணைப்பு நிலைத்திருக்கும். குரு-சீடனிடையே இத்தகு ஆழ்ந்த பிணைப்பு  சீடன் பரம்பொருளின் ஞானத்தை அடையும் வரை ஒன்றல்ல, பல நூறு பிறவிகளாயினும் நிலைத்திருக்கும்.

மீன் தன் குஞ்ஜின் அழைப்பிற்காக ஆயிரம் மைல்களுக்கு நீந்தும் என கூறப்படுகிறது.  அவ்வாறே குரு தன் சீடனை காத்து வழிநடத்த நேரம் காலம் கடந்து செயல்படுவார். இவ்வாறு நீண்ட கால உறவுள்ள குரு சீடர்களால்  நன்றியுடன் "தீர்க்கபந்து" என அழைக்கபடுகிறார். உலகில் வேறு எந்த உறவும் குரு சீடனைப்போல் நீண்டகாலம் நிலைப்பதில்லை எனபது சிறப்பானது. கருணையே உருவான தீர்க்க பந்துவை மீண்டும் மீண்டும் தொழுவோமாக.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.