மூலம்: மைதிலி
தமிழாக்கம் : ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
ஸ்ரீ கிருஷ்ணனின் கதை மிகவும் இதமளிப்பதும், இனிமையுமாகும். அதிலும் அவனது குழந்தைபருவ விளையாட்டுக்கள் குறும்புக்கார குழந்தைகளையும் கவரும் சுவையான கதைகள். அவைகளில் மிகவும் பிரபலமானவை கண்ணனின் வெண்ணைய் திருட்டு. ஸ்ரீ கிருஷ்ணன் கோகுலத்தின் தலைவனான நந்தகோபன் மகனாக அவன் இல்லத்தில் வளர்ந்து வந்ததால் அவனுக்கு பால், தயிர், வெண்ணெய்க்கு குறைவே இல்லை. கோகுலத்திலுள்ள இடையர்களின் செல்லபிள்ளை ஆனதால் தன் வீட்டிலும், மற்றவர் வீட்டிலும் கேட்ட உடனே பால், தயிர், வெண்ணெய் கிடைப்பதில் எந்த தடையும் இருக்கவில்லை. இவ்வாறிருந்தும் அவன் சில நேரங்களில் திருடி உண்டதுண்டு! அதில் ஆச்சரியம் என்னவென்றால் இத்திருட்டு கதையை கேட்பதால் சகல பாவங்களும் தொலைந்து இறைபக்தி வளரும் என அதன் பலனையும் கூறுவதுண்டு. சிறுவயது முதலே திருடுவதால் உண்டாகும் கேடுகளை வீட்டில் பெரியோர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது வழக்கம். இவ்வாறு உள்ள போது கண்ணனின் திருட்டை மட்டும் கொண்டாடுவது ஏன்? அவன் அன்று வெண்ணெய் திருடினால் இன்று நம் குழந்தை வேறு பொருளை திருடலாம், அதில் என்ன தவறு? என்ற கேள்வி எழ வாய்ப்புண்டு
சரி-தவறுகளின் தீர்மானம்: எந்த ஒரு செயலையும் சரி அல்லது தவறு என தீர்மானிப்பது அதன் விளைவை பொறுத்து அன்றோ? பாமரர்களின் களவாடும் குணத்தை திருத்தாவிடில் காலப்போக்கில் அது தீங்கு விளைவிக்கும் வாய்ப்புண்டு. ஆனால் கண்ணனின் கள்ளத்தனத்தினால் ஏற்படும் விளைவுகளை பாமரர்கள் அறிய முடியாது. அவனுடைய ஸ்வரூபத்தை அறிந்த ஞானிகள் அது எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. மாறாக இறைஉணர்வை தூண்டுகிறது என உரைக்கின்றனர்.
மனத்தெளிவு - ப்ரசாதம் அழுக்கு நிறைந்த தண்ணீரில் அவ்வழுக்கை அகற்றினால் தண்ணீர் தெளிந்து உள்ளே உள்ள பொருள் காண்பதுண்டு. நம் மனமும் அவ்வாறே. அழுக்கு நிறைந்துள்ள போது உள்ளே சுடர் விடும் இறைவனை காண இயலாது. மனம் சுத்தமாகி புலன்களின் விகாரம் தொலையும்போது தெளிந்த நீரைப் போன்று உள்ளே உறையும் இறைவன் காண்பது உண்மை. ஞானிகளின் மனமும் அவ்வாறே தெளிவானது. அவ்வாறு தெளிந்த மனமுள்ளவர்(ஞானியானவர்) யாரேனும் ஒருவரையோ அல்லது ஒரு பொருளையோ தங்கள் அனுக்கிரக புத்தியினால் நினைக்கும் போது அது அவர்களின் தெளிந்த மனத்தினால் அந்த நபருக்கும் அல்லது பொருளுக்கும் மனப்ரசாதமாகிறது. ஞானிகள் ஒரு பொருளை பார்க்கும் போது வெறும் பொருளாக இருப்பது பிரசாதமாக மாறுபடுகிறது. அவர்களால் தொடப்பட்டால் மேலும் மேன்மை அடைகிறது. அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு மீதமுள்ளதை மற்றவர்க்கு வழங்கும் போது அது அனைத்திலும் மேன்மையான பிரசாதமாக விளங்குகிறது. இது ஞானிகளுக்கு மட்டுமே புரியும். பாமரர்களுக்கு புரியாது. இறைவனை உணர்ந்த ஞானிகளே இத்துணை அருள்புரியும் போது இனி இறைவனே அவதரித்து வந்தபோது அவனுடைய நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவுகளை(நன்மைகளை) எவ்வாறு கூற முடியும்?!. ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் நடைபெற்றது இவ்வாறான அனுக்கிரஹமே என்பது கிருஷ்ணனின் அவதார ரகசியத்தை அறிந்த ஸ்ரீரங்கமஹாகுரு அவர்கள் அருளிய விளக்கம். தாங்களே உவந்து அவனுக்கு பால், வெண்ணெய் அளித்தவர்களுக்கு அனுக்ரஹம் ஆயிற்றென்பதில் சந்தேகமில்லை. ஆனால் அறியாமையால் சில நேரங்களில் கொடாதவரின் இல்லத்தில் அவர்களை அனுக்ரஹிக்க வேண்டுமென்றே அங்கு திருடி தின்று மீதியை பிரசாதமாக அவர்களுக்கு அளித்த பரம கருணாமூர்த்தி அவன். இந்த ரகசியத்தை அறியாதவர்க்கு இது திருட்டு. அறிந்தவர்க்கு பரம அனுக்ரஹத்தின் செயல். இவ்வனுக்ரஹத்தின் செயலை செவிமடுத்து அவனுடைய பரிசுத்தமான நினைவில் திளைத்திருந்த ஸ்ரீ ரங்கப்ரிய ஸ்வாமிகளின் அனுபவமும் இதே. அவனுடைய மன நிறைவு நம்மையும் சூழ்ந்து பாவங்கள் தொலைந்து இறைபக்தி வளர காரணமாகிறது என்று இக் கதையை கேட்பதால் ஏற்படும் பலன் பாடப் படுகிறது.