மூலம் : சுப்பிரமணிய ஸோமயாஜி
தமிழாக்கம் : ஜானகி
தக்ஷ யாகத்தின் சந்தர்ப்பம். தக்ஷனின் ஆசை மகள் சதிதேவிக்கு தன் தந்தை ஓர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருப்பது தேவர்களின் வாயிலாக அறிய வருகிறது. இங்கு தக்ஷனுக்கு சிவனிடம் பகை. அதன் காரணம் வேடிக்கையானது. ஒரு முறை பிரம்மா ஏற்படுத்திய யாகத்தில் தக்ஷபிரஜாபதி வருகை தருகிறான். அவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரம்மனையும் சிவனையும் தவிர அனைவரும் எழுந்து நின்றனர். தன்னுடைய மருமகனான சிவன் எழுந்து நின்று தனக்கு மரியாதை செலுத்தவில்லை என கர்வியான தக்ஷனுக்கு மிகவும் கோபம். சிவன் தேவ தேவர்களின் தலைவன் மகாதேவன்.
அழிவற்றவன் பிறப்பற்றவன். அவனையே அனைவரும் வணங்க வேண்டும். உலக மக்களைப் போன்று சிவனும் எழுந்து நின்று தக்ஷனை வணங்குவது அவனுக்கே(தக்ஷனுக்கே) ஏற்றமன்று. மேலும் பிற்பாடு சிவனே சதிக்கு கூறியது போல் ஞானிகள் கௌரவம் செலுத்தும் விதமே மாறுபட்டது. அவர்கள் கௌரவத்தை இதயகுகையின் உள்உறையும் ஸ்ரீ வாசுதேவனுக்கே மனத்தினால் அர்பணிக்கிறார்கள். அதனால் உலகனைத்துக்கும் நன்மை உண்டு. ஆயின் தலைக்கனம் கொண்ட தக்ஷனுக்கு இது விளங்கவில்லை. தன் மூல ரூபமான சிவனையே வேறு விதமாக காண்கிறான். ஸ்ரீரங்க மஹாகுரு அவர்கள் கூறியது:- "வாழ்க்கை அடுக்கு அடுக்காக வளர்வதால் அடுத்து வருவது தனக்கு பின் உள்ளதை மறைக்கிறது.". இங்கு தக்ஷனின் உடல், அதை சார்ந்த அகங்காரம் மூலத்தில் உள்ள தன் சிவரூபத்தை மறக்கும்படி செய்தது. எனவே மகளான சதியையும் சிவனையும் யாகத்திற்கு அழைக்கவில்லை. ஆயினும் பெண்களுக்கு தாய் வீட்டு மோகம் (ஈர்ப்பு) இருப்பது இயற்கையே. இருவரையும் அழைக்காவிடினும் அங்கு செல்ல வேண்டும் எனும் ஆவல். இறைவனான மகாதேவனை பல பல விதமாக வேண்டினாள். தன் தீர்மானத்தை பலப்படுத்த 'தந்தை மனைக்கும் யாக சாலைக்கும் அழைப்பு இல்லாமலும் செல்வது தகும்' என்கிறாள்.
அதற்கு மகாதேவன் கூறும் பதிலானது எல்லா காலங்களுக்கும் ஏற்றது. "அழைப்பு இன்றியும் செல்லலாம் என்பது சரியே. ஆனால் அவ்வுறவினர்களின் பார்வை தீய அபிமானத்தினால் ஏற்படும் கர்வம், சினம் , பகை முதலியவை இல்லாமல் இருந்தால் மட்டுமே அவ்வாறு செல்லலாம். வித்யை, தவம், பொருள்(ஐச்வர்யம்) கவர்ச்சிகரமான தேகம், இளம் வயது மற்றும் நற்குணம் எனும் ஆறும் சத்புருஷர்களிடம்(சான்றோர்களிடம் ) நற்பண்புகளாக விளங்குகின்றன. ஆயின் தீயவர்களிடம் அவையே தீய குணங்களாக ஆகின்றன. அவைகளினால் தீயோரின் கர்வம் மேலோங்கி சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கிறது. அச்சமயம் சான்றோரின் மேன்மையை அறிய இயலாது. ஆகையால் யார் தன்னிடம் வருபவரை நேற்மையற்ற எண்ணத்துடன் காண்கிறார்களோ அத்தகையோரிடம் 'நம் உறவினர்தானே' என்று செல்வது தகாது. அவர்களின் இழிவான சொற்கள் பகைவரின் கூரிய அம்புகளை விட கொடியவை. இவை அனைத்தும் தக்ஷனின் அன்றைய மனநிலையை காட்டும் கைகண்ணாடியாக விளங்கியது.
ஆயினும் தாய் வீட்டு மோகம், சிவனின் உண்மைகளடங்கிய வார்த்தைகளையும் மீறி சதிதேவி அங்கு செல்ல வழி வகுத்தது. அங்கு தக்ஷனின் உதாசீனம், சிவனைப் பற்றிய அலட்சியம், கர்வம் முதலியவை அவளை இறுதியாக தன் உடலையே தீயில் அர்பணிக்க செய்தது நாம் அனைவரும் அறிந்ததே. இக் கதை நமக்கு அநேக பாடங்களை கற்பிக்கிறது. கர்வம் என்பது அனைத்து நற்குணங்களையும் அழிக்கக் கூடியது. தேகபற்று கூடாது. உறவினர் எனும் போது அவர்கள் எவ்வாறு இருப்பினும் சரியே எனும் மனநிலை தவறானது. மரியாதை என்பது உள்ளே உறையும் இறைவனுக்கே அன்றி உடலுக்கு அல்ல. ஞானிகளின் பரிந்துரைகளை என்றும் அலட்சியம்செய்வது தகாது. இவ்வாறான நற்குணங்களை அந்த பரமசிவன் நமக்கு அருளட்டும் என வேண்டுவோம்.