Thursday, April 9, 2020

நரஸிம்ஹ அவதாரம் கூறும் தத்துவம் (Narasimha Avataram Kurum Tattuvam)

மூலம்: சுப்ரஹ்மண்ய ஸோமயாஜி
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)  


ஹிரண்யகசிபுவின் அரசவை. தன் சொந்த மகனான ப்ரஹ்லாதனே தனக்கு விரோதி (என்பது அவனது எண்ணம்). விஷ்ணுவின் பெயரை உச்சரிப்பதை நிறுத்த மாட்டான். தாங்க முடியாத கடுங்கோபத்துடன் ஹிரண்யகசிபு வினவுகிறான் "எங்கிருக்கிறான் உன் நாராயணன்?" “எவ்விடத்தும் நிறைந்திருக்கிறான் தந்தையே" மகன் தனக்கே உரிய இயற்கையான பதிலளித்தான். "மிகுந்த கோபத்துடன் "இந்த தூணில்?" என்று வினவ சிறிதும் சலனமின்றி  "அங்கும் உள்ளான்" என்று சிறுவனின் பதில். மட்டற்ற கோபத்துடன் தூணை உதைத்த போது பேரொளியுடன் ஸ்ரீநரசிம்ஹ தேவனின் அவதாரம். ஹிரண்யகசிபுவின் இதயத்தை சீண்டு அவனை வதம் செய்கிறான்.  இப்புராணக்கதை நாமனைவரும் அறிந்ததே.

இக்கதையின் ஆழ்ந்த உட்கருத்தைக் குறித்து ஸ்ரீரங்கமஹாகுரு இவ்வாறு கூறியிருந்தார். ’தூண்’ என்பது நம்முடைய முதுகெலும்பை குறிக்கிறது. அதை அரக்க சக்திகள் கைப்பற்றும்போது அது ஹிரண்யகசிபுவின் அரசவைதூணாகிறது. ப்ரஹ்லாதரூபியான பரிஶுத்தனின் பக்தியின்  விளைவால் இறைவன் ஸ்ரீநரஸிம்ஹன் ஒளி மயமாக ஓங்காரத்தை கர்ஜித்த வண்ணம் அத்தூணை பிளந்து கொண்டு தைத்தியர்களுக்கு அதிபயங்கரமான உருவத்துடன் தோன்றினான். உள்ளத்தின் உள்ளும் வெளியுமற்ற இடைபட்ட வாசற்படியில் அமர்ந்து காலையும், மாலையும் (படைப்பு-அழிப்புகள்) இணையும் சந்த்யா காலத்தில் மெய்யறிவற்ற மூர்க்கனான அரக்கனின் இதயத்தை பிளந்து அவன் அறியணையில் ஏறி அமர்கின்றான். உண்மையில் அது பகவத்தியான சிம்ஹாசனமே. அரக்கர்களின் பிடியிலிருந்து அதனை விடுவித்து  தான் அமர்ந்து  தூய்மைபடுத்தி தேவர்களின் அரசு மீண்டும் உருவாகும்படி அருள்கிறான்.

விஷ்ணு என்றால் நிறைந்திருப்பவன், எல்லாவிடத்தும் நீக்கமற  நிறைந்துள்ள இறைவன். ’எங்கெங்கும் உள்ளான்’ என்ற அடியவனான (பக்தனான) ப்ரஹ்லாதனின் கூற்று அவனின் நிறைந்திருக்கும் தன்மையை உணர்த்தும் உண்மையான கூற்றாயிற்று. ஆயின் இவ்வுண்மையை உணராமல் தூணைப்போல் இருந்தது ஹிரண்யகசிபுவின் இதயம். அதனை  பிளக்கவே வேண்டியதாயிற்று. வெளித்தோற்றத்திற்கு இது கொடுமையானதாக காணலாம். நமக்கு மிகவும் கசப்பான மருந்து நமக்குள்ளிருக்கும்  வியாதியை நீக்கி நம்மை  நோயற்றவராக்கும் இனிமையை தன்னகத்தே கொண்டதல்லவா? .அவ்வாறே நம் வியாதிக்கு தக்க மருந்தை அளித்து நம்மை நலமடைய செய்தலும் இறைவனின் கருணையே.

நம் உள்ளத்தில் அரக்க குணம் நிறைந்துள்ளது. எனவே நம் இதயமும் ஹிரண்யகசிபுவை போல், அவன் அரசவை தூணைப்போல் இறுகி கடினமாயுள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை அறிய முடியாத, உணரமுடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். நமக்கு மகிழ்ச்சியின், நிம்மதியின் அனுபவத்தை உணர்த்தவே இரக்கமுள்ள பரம்பொருள் துறவிகள், முனிவர்கள், சான்றோர் ஆகியோரின் மூலம் நம் அறிவை தெளிவிக்க முயற்சிக்கிறான். உணர்ச்சியற்றிருக்கும் நம் இதயத்தை உண்மையுணரும்படி (கரைய)செய்யும்  செயல்  இந்நாட்டில் இடையறாது  நடைபெற்று வந்துள்ளது. பாரதநாட்டின் முனிவர்கள் அருளிய வாழ்க்கை முறை  நமக்கு  இந்த உன்னதமான அனுபவத்தின் அமுததாரையை ஊட்டவே ஏற்பட்டது என்பதை நாம் மறவாதிருப்போமாக.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.