Thursday, April 16, 2020

வெகு தொலைவில் இருந்தாலும் மிக அருகில் (Veku Tolaivil Iruntalum Mika Arukil)

மூலம்: மைதிலி
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


கர்க சம்ஹிதையில் ஓர் சம்பவம். ஸ்ரீ க்ருஷ்ணன் கோகுலத்தை அலங்கரித்த காலத்தில்  அனைத்து கோபிகைகளும் க்ருஷ்ண த்யானத்தில் திளைத்திருந்தனர். அதிலும் ராதை அவனிடம் ஒன்றிய மனத்துடன் முழுமையாக தன் மனதை கண்ணனுக்கே அர்பணித்து வாழ்ந்தவள். அவளை குறித்து கண்ணனும் மிகவும் மகிழ்ந்து தானும் எந்நேரமும் அவளை நினைவில் கொண்டிருந்தான்.

கண்ணன் பிற்காலத்தில் உடலளவில் அவளிடமிருந்து விலகி சென்றாலும் தன் பணிகளனைத்தையும் அவனுக்கே அர்பணித்து மனத்தளவில் எந்நேரமும் அவனுடனேயே வாழ்ந்தாள். அவளைக் குறித்து மிகவும் மகிழ்ந்த கண்ணன் தன் பத்தினிமார்களிடம் ராதையை புகழ்ந்த வண்ணமிருந்தான். இதை செவியுற்ற அவன் மனைவியர் கண்ணனின் புகழ்ச்சிக்குறிய ராதையை எவ்வாறேனும் ஒருமுறையாவது காண வேண்டும் என ஆர்வம் கொண்டனர். கூடவே தங்களின் க்ருஷ்ண பக்தியும் எவ்விதத்திலும் தாழ்ந்ததல்ல எனும் எண்ணம் ரகசியமாக உள்ளத்தில் உண்டாயிற்று.

பல நாட்களுக்கு பிறகு ஓர் சூர்யக்ரஹண சமயத்தில் தன் பரிவாரத்துடன்  கண்ணன் கோப-கோபியரை சித்தாஸ்ரமம் எனும் இடத்தில் காண சந்தர்ப்பம் வாய்த்தது. கண்ணன் தன் பத்தினியருக்கு ராதையை அறிமுகம் செய்வித்தான். அவர்கள் நெடு நேரம் அவளுடன் அளவளாவினர். எந்நேரமும்  கண்ணனிடமே நிலைத்திருந்த  மனநிலை உள்ள ராதையை கண்டு அவர்களுக்கு ஆச்சரியமும் ஆனந்தமும் ஏற்பட்டது.

இரவில் அனைவரும் ஓய்வெடுக்க சென்றனர். தன்அறைக்கு வந்த ருக்மிணி கண்ணன் இன்னும் உறங்காததற்கு காரணத்தை வினவினாள். "ராதைக்கு தினமும் பால் அருந்திய பின்னர் உறங்கும் பழக்கம். இன்று அவளுக்கு யாரும் பால் தராததால் உறங்கவில்லை. ஆகையால் எனக்கும் உறக்கமில்லை" என்றான் கண்ணன்.

உடனே ருக்மிணி முதலானோர் ராதைக்கு பால் கொடுத்து திரும்பினர். கண்ணன் இப்போது சயனித்திருந்ததை கண்ட  ருக்மிணி அவனுக்கு பாதசேவை புரியும் போது "சுவாமி தங்கள் பாதங்களில் கொப்புளங்கள் உள்ளனவே" என பதறினாள்." ராதைக்கு மிகவும் சூடான பாலை நீங்கள் அருந்த செய்தீர்கள். அவள் தன் இதயத்தில் எந்நேரமும் என் பாதங்களை சுமந்தவள். கொப்புளங்கள் அந்த பாலின் வெப்பத்தின் விளைவு தான்" என்றான் கண்ணன்.

உடலளவில் தொலைவில் இருப்பினும் மனத்தளவில் மிக அருகில் அவனிடமே ஒன்றிய மனத்தவளான  ராதையின்  மகத்தான பக்தி ருக்மிணியின் மனத்தை தொட்டது. கண்ணனின் ராதையை குறித்த புகழ்ச்சி வீணல்ல என்பதை உணர்ந்து முழுமனத்துடன் அவளை மனதார வணங்கினாள்.

பக்தியுடன் அழைத்தால் இறைவன் என்றும் தொலைவில் இல்லை. புரந்தர தாசரின் பாடலை நினைவு கூறலாம்: "எங்கிருக்கிறானோ ரங்கன் எனும் சந்தேகம் வேண்டாம். எங்கு பக்தர்கள் அழைத்தால் அங்கேயே உள்ளான்." அவனுக்கு கேட்கும் வகையில் அழைக்கும் முறையை அறிய வேண்டும். அவ்வளவே. எங்கும் உறைபவன் ஆதலால் அழைக்க உரத்த குரல் தேவையில்லை, அவனில் லயிக்கும் மனமே தேவையானது என்பதை தெளிவு படுத்தினான் கண்ணன்.

எந்நேரமும் இறைவனின் சிந்தனையுடன செய்யும் பணிகளை அவனுக்கே அர்பணித்து அதன் பலனையும் இறைவனின் பிரசாதமாக ஏற்பது அவனிடமே நம்மை கொண்டு சேர்க்கும் என்பது ஸ்ரீரங்க மஹாகுரு அவர்களின் அறிவுரை. கர்ம யோகத்தின் மர்மம்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.