மூலம்: வித்வான் நரசிம்ஹ பட்டர்
தமிழாக்கம்: ஜானகி
ஸ்ரீமத்ராமாயணத்தில் ஓர் சம்பவம். ஸ்ரீராமனுக்கு பத்னியின் பிரிவு ஏற்பட்டுள்ளது. ராவணன் சீதையை அபகரித்திருக்கிறான். சுக்ரீவனுடன் நட்பு கொண்டால் சீதையை தேடும் பெரும் காரியம் சாத்யமாகும் என கபந்தன் கூறுகிறான். சுக்ரீவனின் நட்பை பெறுவதற்கு ராமன் முடிவெடுத்து அவன் வாசம் புரிந்த ரிஷ்யமூக மலைக்கு வருகிறான். அங்கு சுக்ரீவன் முதலான வானரர்கள் வாலியே இவ்வேடம் தரித்து வந்துள்ளான் என அஞ்சுகிறார்கள். அப்போது பகுத்தறிவாளனான அனுமன் சுக்ரீவனுக்கு இவ்வாறு தைரியம் கூறுகிறான். "நஹி அபுத்திம் கதோ ராஜா சர்வ பூதானி ஸாஸ்திஹி". என்றால் புத்தியற்ற அரசன் குடிகளை காப்பவனன்று.
எது நமக்கு 'இது இவ்வாறு தான்" என நிச்சயமான அறிவை அளிக்கிறதோ அதை புத்தி என கூறலாம். ஒரு விஷயத்தில் இவ்வாறான திடமான அறிவு ஏற்பட பகுத்தறிவு தேவை. எது சரி அல்லது தவறு, எது வாழ்க்கைக்கு பொருந்தும் அல்லது பொருந்தாது, தீயவையிடத்தில் பற்றற்று இருப்பது, நல்லவற்றில் பற்றுடன் இருப்பது பகுத்தறிவு எனப்படும். இப் பகுத்தறிவினால்தான் புத்திக்கு நிர்ணயிக்கும் திறன் உண்டாகிறது. பகுத்தறிவு புத்தியின் சிறந்த குணமாகும். பகுத்தறிவு இல்லாத போது புத்தியை அவிவேகம் எனும் இருள் சூழ்கிறது. பகுத்தறிவில்லாத அரசன் குடிகளை காக்க தகுதியற்றவன்.
அரசன் பகுத்தறிவுடன் திகழ்ந்தால் குடிமக்கள் நிம்மதியாக வாழலாம். அவர்களுக்கு அவனே வழிகாட்டி. அரசனின் ஒவ்வொரு செயலும் மொழியும் குடிகளால் அனுசரிக்க படுகிறது. ஆகையினால் தான் "நா விஷ்ணு: ப்ருதிவீபதி:" எனும் சொல் வழங்கி வருகிறது. விஷ்ணு அல்லது விஷ்ணுவின் அம்சம் அல்லாதவன் அரசனாக மாட்டான். ஸ்ரீரங்க மஹாகுரு அரசனைப் பற்றிய மர்மத்தை விவரித்தது எவ்வாறெனில் "நா விஷ்ணு: ப்ருதிவீபதி:" – "விஷ்ணு எனப்படும் தத்துவம் எவ்வாறு உலகை ஆள்கிறதோ அதை அனுசரித்து பின்பற்றுபவனே பாரதத்தின் மனதிற்குகந்த அரசனாக திகழ்கிறான். விஷ்ணு தத்துவத்தை அனுசரிப்பது ரிஷி அல்லாதவனுக்கு சாத்யமாகாது. ஆகையினாலேயே 'ராஜரிஷி'எனும் சொல்லால் இதிகாச புராணங்கள் அவனை(அரசனை) அடையாளம் காட்டுகிறது".