Thursday, March 26, 2020

உணவை ஏற்பதற்கு வேண்டிய முன்-நிபந்தனை (Unavai Erpatarku Ventiya Mun-Nipantanai)

மூலம் : அனந்த பி.ஜி
தமிழாக்கம் : வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


உணவு என்பது அவரவரின் விருப்பம் மற்றும் வசதியை பொருத்தது. அவ்வாறாயினும் பாரதத்தின் சமய நூல்கள் இது குறித்த அநேக விதி மற்றும் தடைகளை கூறியுள்ளன.  அவற்றில் யார் அளிக்கும் உணவை ஏற்கலாம், யார் உணவை மறுக்க வேண்டும், எத்தகைய சமயங்களில் ஏற்கலாம் முதலிய விவரங்களும் அடங்கியுள்ளன. இதை குறித்து மஹாபாரதத்தில் ஒரு சுவையான கதை உண்டு.

பாண்டவர்கள் வனவாஸம் முடித்து வந்த பிறகு அவர்களுக்குரிய அரசுரிமையை அளிக்க துரியோதனன் மறுக்கிறான். அதனால் போரை தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. போரினால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் மரணங்களை குறித்து நன்கறிந்த தர்மராஜன்  போரின்றி வேறு மார்க்கத்தில் அரசுரிமை பெற இயலுமா என சிந்திக்கின்றான். சமாதானத்திற்காக ஸ்ரீக்ருஷ்ணனை தன் தூதுவனாக அனுப்புகிறான். க்ருஷ்ணனின் வருகையையும்  அதற்கான காரணத்தையும் அறிந்த கௌரவன் க்ருஷ்ணனை  விருந்தோம்பலால் மகிழ்வித்து தன் பக்கம் சேர்த்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறான். அதற்காக க்ருஷ்ணனுக்கு விருப்பமான பலவகை உணவுகளை தயாரிக்கின்றான்.

ஆனால் பக்தப்ரியனும் எளியோனுமாகிய  பகவான் தன் தூயபக்தனாகிய விதுரனின் இல்லத்திற்கு செல்கின்றான். அங்கு மிக்க அன்புடன் விதுரன் அளித்த கனிகள், பால் முதலியவற்றை ஏற்று மனதிருப்தி அடைகிறான்.

மறுநாள் கௌரவர்களின் சபைக்கு பாண்டவ தூதனாக  வந்தபோது முன்தினம் தான் க்ருஷ்ணனுக்காக தயாரித்திருந்த விருந்தை பற்றி கூறி   துரியோதனன் க்ருஷ்ணனை எள்ளிநகையாடுகிறான். "நீ எவ்வாராயினும்  தாழ்ந்த குலத்தவன். எனவேதான் உன்னை  போன்றே தாழ்ந்த குலத்தவனான விதுரனின் இல்லத்தில் உணவை ஏற்றுக்கொண்டாய். சரியாகி விட்டது. உனக்கெதற்கு அரண்மனை விருந்து?" என்று.

அதற்கு க்ருஷ்ணன் அளித்த பதில் மிக அருமையானது. "துர்யோதனா, யாராயினும் அன்புடன் அளிக்கும் உணவை மட்டுமே ஏற்க வேண்டும். அல்லது அன்புடனில்லாவிடினும் நாம்  தவிர்க்கமுடியாத வறுமை நிலையில் இருப்பின் அப்போது  கிட்டும் உணவை ஏற்கலாம். ஆனால் நீயோ அன்புடன் என்னை உபசரிக்கவில்லை. அன்பில்லாவிடனும் ஏற்கும்  தவிர்க்கமுடியாத நிலைமையும் எனக்கிருக்கவில்லை" என்றான். இது எக்காலத்திற்கும் பொருந்தும் பேச்சல்லவோ?

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.