பரந்த எண்ணம் கொண்ட வேதவியாசர் கூறியதை அவருக்கு மிகவும் ப்ரிய சீடரான ஜைமினிகள் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் எழுதிக் கொண்டிருந்தார். புலன்களை கட்டுப்படுத்துவது எத்துணை கடினம் என்பதை அறிந்த வியாசர் "பலவானிந்த்ரிய க்ராமோ, வித்வாம்சமபி கர்ஷதி" (புலன்களின் சேர்க்கை பண்டிதர்களையும் கவர்ந்திழுக்கும் திறனுள்ளது) என்று உரைத்தார். இவ்விடத்தில் ஜைமினிக்கு இது எவ்வாறு சாத்தியமாகும்?புலன்கள் சாதாரண மனிதர்களை ஈர்த்து பலமிழக்கச் செய்யும். ஆனால் விசேடமான சாதனை படைத்த பண்டிதர்களை வழுக்கி விழ செய்ய முடியாதல்லவா என தோன்றியது. உடனேயே ஜைமினி 'வித்வாம்ஸமபிகர்ஷதி' என வியாசர் கூறியதை 'வித்வாம்ஸம் நாபகர்ஷதி' (பண்டிதர்களை கவர இயலாது) என மாற்றினார். வியாசரும் ஏதும் அறியாதவர் போல் மௌனம் அடைந்தார்.
அன்றொரு நாள் மழை பெய்து கொண்டிருந்தது. மிகவும் அமைதியான சூழல். ஜைமினிகள் சந்த்யா காலத்தின் கடமைகளை நிறைவேற்றி நிம்மதியாக அமர்ந்திருந்தார். எதிரில் அக்னி தேவன் ஒளி வீசிக்கொண்டிருந்தான். பரம்பொருளை பிரதிநிதிக்கும் தீபச் சுடர் விளக்கு கம்பத்தில் பிரகாசித்த வண்ணமிருந்தது. அச்சமயம் பெண் ஒருத்தியின் முறையீடு கேட்டது. வாயிலில் மழையில் நனைந்த வண்ணம் பெண் ஒருத்தி நின்றிருந்தாள். அவள் அங்கிருந்தவாறே மழை நிற்கும் வரை ஆச்ரமத்தில் தனக்கு தங்குவதற்கு இடம் கிடைக்குமா என மகரிஷிகளை வினவினாள். ஜைமினி ரிஷிக்கும் அப்பெண்ணின் நிலைமை கண்டு மிக்க இரக்கம் ஏற்பட்டது. உடன் அவர் அவளுக்கு அனுமதி வழங்கினார். பிறகு அவளை அந்த அக்னி குண்டதிற்கு எதிரில் அமரச்செய்தார். வர வர அந்த அழகான பெண்ணைப் பார்த்து அவருடைய மனம் சலனம் அடைந்தது. அவர் அப்பெண்ணை தன்னுடைய மனைவி ஆகும்படி வேண்டினார். அப்போது அப்பெண் தன்னை கைகளில் சுமந்து மூன்று முறை அக்னியை வலம் வந்தால் திருமணத்திற்கு தன்னுடைய சம்மதம் உண்டு என்றாள். ஜைமினியும் அவ்வாறே செய்ய கடைசி முறை வலம் வரும் போது 'வித்வாம்ஸம் நாபகர்ஷதி' ? எனக் கேட்டாள். என்னே ஆச்சரியம்! அவர் கைகளில் பெண்ணுக்கு பதிலாக இருந்தவர் வேதவியாசர். ஜைமினிக்கு தக்க பாடம் கற்பிக்க வியாசர் நடத்திய பரிசோதனை இது.
புலன்களை அடக்குவது சுலபமல்ல. ஸ்ரீ குருவின் அனுக்கிரகம், வழி நடத்தல், விடாது செய்யப்படும் பயிற்சி இவைகளுடன் கூடி இருக்க வேண்டும். "ஜீவனம்(வாழ்கை) என்பது 'ஜீவன்' இருந்தால் தானே? ஜீவன் தனக்கு ஏற்றாற் போல் புலன்களை வைத்துக் கொள்ளும் போது தான் 'ஜீவனம்'" என்பது ஸ்ரீரங்க மஹாகுருவின் எச்சரிக்கை.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்