மூலம்: சுப்ரமண்ய சோமயாஜி
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணனும், பலராமனும் இடையர் சிறுவர்களுடன் கானகம் சென்றபோது அனைவரும் பசியால் தூண்டப்பட்டு உண்பதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கண்ணனை வேண்டினார்கள். அவரும் "தூரத்தில் ஆச்ரமத்தில் முனிவர்கள் ஓர் யாகத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள். அங்கே சென்று கண்ணனும் பலராமனும் கூறினார்கள் என வேண்டி உணவு எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். இடையர்களும் கண்ணனுக்காக உணவு வேண்டினார்கள். ஆயின் அம்முனிவர்களோ சொர்கத்தை அடைய (இறைவனை அடைய அல்ல) அங்கீரஸயாகத்தில் திளைத்திருந்தனர். இடையர்களுக்கு உணவும் கொடாமல் கர்வத்துடன் பதிலும் கூறாது இருந்தனர். இடையர்கள் திரும்பி வந்து நடந்ததை விவரித்தனர். கண்ணனோ "மீண்டும் அங்கே சென்று முனிபத்னிகளிடம் எனக்காக உணவை வேண்டுங்கள்" என்றார். இம்முறை இடையர்களுக்கு ஏமாற்றமில்லை. எந்நேரமும் கிருஷ்ணனின் லீலைகளை செவிமடுத்து முனிபத்னிகளின் உள்ளம் கிருஷ்ண மயமாக இருந்தது. இடையர்கள் சென்றவுடன் சுத்தமான பாத்திரங்களில் அனைத்து வித உணவுகளையும் எடுத்துக் கொண்டு கண்ணனிடம் ஓடோடி வந்தனர். 'நதிகள் கடலரசனை சேரும் ஆர்வத்துடன் ஓடோடி வருவது போன்று' என ஸ்ரீ சுகர் கூறுகிறார். அங்கே கண்ணனுக்கும் அவனுடைய தோழர்களுக்கும் மன நிறைவு ஏற்படும் வரை உணவு படைக்கின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்து விஷயங்களையும் மறப்பது போன்று கிருஷ்ணதரிசனத்தினால் அனைத்து துன்பங்களையும் தொலைத்தனர்.
"யாகம் பூர்த்தியாக உங்கள் கணவர்களிடம் செல்லுங்கள்" என கண்ணன் அவர்களுக்கு விடையளித்தார். அச்சமயம் அவர்களின் கூற்று மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்து. "இறைவனிடம் வந்த பிறகு மீண்டும் இல்லறத்திற்கு திரும்ப செல்வது என்ன நியாயம்? உனக்காக உறவுகளை எல்லாம் விட்டு வந்துள்ளோம். அவர்களுடைய கட்டளையை மீறி உன்னிடம் வந்த எங்களை மறுபடியும் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்?" எனக்கூற கண்ணன் "அவர்கள் முன்னைவிட உங்களை அதிக கௌரவத்துடன் காண்பார்கள். உங்களுடைய கடமைகளை பூர்த்தி செய்யுங்கள். எங்கிருந்தாலும் மனதில் மட்டும் என்னையே சிந்தியுங்கள். என்னையே வந்து அடைவீர்கள்" என உறுதி கூறிய பின் அவர்கள் திரும்பிச் சென்றனர். அங்கே முனிவர்களும் தம் அறிவின்மைக்காக வருந்தி இவர்களை கௌரவித்தனர். மேலும் "நம்முடைய கல்வி, சாஸ்திர ஞானம், சாதனை அனைத்தும் ஒழியட்டும். இறைவனே கூறியும் அதை அறியும் திறனை நம் தலை கனத்தினால் இழந்துவிட்டோம். நம் மனைவிகளே பாக்கியசாலிகள். எவ்விதமான சாஸ்திர பயிற்சியும் இல்லாவிடினும் பக்த சிரோமணிகளானதால் இறைவனை காணும் பேறு பெற்றனர்" என வருந்தினர்.
இக் கதை நமக்கு பக்தியின் உன்னத நிலை அனைத்திற்கும் மேலானது என உரைக்கிறது. "இறைவனை எல்லா ஜீவிகளும் கணவனை(பதியை) மனைவி பின்பற்றுவது போன்று அனுசரிக்க வேண்டும். ஸ்ரீபதியையே பற்றி அவனுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்" எனும் ஸ்ரீரங்க மஹாகுருவின் கூற்று இங்கே நினைவில் கொள்ளத்தக்கது. யாகப்பொருட்கள், அக்னி, தேவதைகள் அனைத்தும் கிருஷ்ண மயமே. அவ்வாறான பரம்பொருளே நேரில் தோன்றி கேட்டாலும் நம் கர்வம் கண்களை மறைப்பதுண்டு. அனைத்து படிப்பறிவும் இறைவனை அடைவதற்கே என்பதை மறக்கும் போது நமக்கும் அம்முனிகளைப் போன்றே நிகழலாம் அன்றோ? முனிபத்னிகளை போன்று அவனிடம் பக்தி கொண்டவர்களாக திகழ்வோமாக.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.