Wednesday, March 11, 2020

நமக்குள்ளே இருக்கும் எலியின் கதை (Namakkulle Irukkum Eliyin Katai)

மூலம்: Dr மோஹன் ராகவன்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

 ஒரு முனிவர் குளத்தில் அர்க்யம் அளித்துக்கொண்டிருந்தார். திடீரென பருந்தொன்று அவர் தலைக்குமேல் பறந்து சென்றது. அதன் கூர்மையான அலகிலிருந்து  தப்பி கீழே விழுந்த எலியொன்று முனிவரின்  கரத்தை அடைந்தது. மிகவும் இரக்ககுணம் கொண்ட முனிவர் அச்சத்தில் நடுங்கிய எலியை காப்பதாக வாக்களித்து மந்திர சக்தியால் எலியை பெண்ணாக மாற்றினார். அவளை தன் வளர்ப்பு மகளாக காத்து வந்தார். அநேக ஆண்டுகள் கடந்தபின் பருவ வயதடைந்த தன் மகளுக்கு மணமுடிக்க எண்ணி தகுந்த வரனை  தேடத்தொடங்கினார். தன் தவத்தின் பலத்தால் ஆதவனை அழைத்து மகளிடம் "ஒளி படைத்தவனும், உலகிற்கு ஒளி அளிப்பவனுமாகிய ஆதவனை மணந்து கொள்வாயா?" என்று வினவினார். மகள் ஏற்கவில்லை. "என்னால் இவனை காணவே முடியவில்லை. கண்கள் கூசுகின்றன என்றாள்."
ஆதவன் முனிவருக்கு ஒரு  யோசனை கூறினார். "மேகங்களின் அரசன் என்னையே மறைப்பவன். என்னை விட சிறந்தவன். எனவே அவனை அழையுங்கள்" என்றான். மேகராஜா வந்தான்.  பெண்ணோ சம்மதிக்கவில்லை. 'வாயு பகவான் மேலும் வலிமையுள்ளவன். மேகங்களையே விரட்டி விடுவான்' என்று வாயுவை அழைத்தார். "இவன் ஓரிடத்தில் நிற்பதேயில்லையப்பா" என்று மகள் நொண்டி சாக்கு கூறினாள். வாயுதேவனை தடுத்து நிறுத்தும்  மலையரசனை காண்பித்து மணமுடிக்க கோரினார் முனிவர். மகள் மறுத்துவிட்டாள். மலையரசன் புன்னகையுடன் "என்னிலும் வலிமை மிக்கவன் ஒருவனே. அவனே எலிகளின் அரசன். என்னையே குடைந்து விடுவான். அவனே பொருத்தமான வரன்" என்றான். எலியரசன் வரும்போதே  மகள் நாணத்துடன் "தந்தையே நான் சம்மதிக்கிறேன். அதற்கு தகுந்த உருவத்தை அளியுங்கள்" என்றாள். முனிவரும். தபோபலத்தால் அவளை மீண்டும் எலியாக்கி  அனுப்பி வைத்தார்.
இக்கதை நம் நிலைமையையே எடுத்துக்காட்டுகிறது. ஏதோ வினைப்பயனால் நமக்கு இம்மானிடபிறவி கிட்டியுள்ளது. இம்மனித உடலில் முதுகெலும்பு என்னும் மலையரசன் உள்ளான். அதனுள் ப்ராண சக்தியாக இறைவன் இருக்கின்றான். அப்ராணசக்தி மேல்நோக்கி சென்றடைகையில் ஒளிரும் ஞான சூரியனும் உண்டு. அமுத கிரணங்களை பொழியும் சமயங்களும் உண்டு. இவை தவத்தின் பயனால் உள்ளத்தினுள் உணரக்கூடிய  மிகவும் மகிழ்ச்சியான உணர்வுகளென்று ஸ்ரீரங்க மஹா குரு கூறியிருந்தார். ஆயின் இவை அனைத்தையும் விடுத்து  நம்முள்ளிருக்கும் எலி எலியையே ஏற்கிறது. மூஷகன்(எலி) என்னும் சொல்லின் மூலமான 
'முஷ்' என்னும் சொல் 'களவு' என்னும்  பொருளை குறிக்கிறது. நம் புலன்களே அந்த திருட்டு எலிகள். காணக்கூடாததை கள்ளதனமாக காணும் கண்கள், கேட்க கூடாதவற்றை கேட்கும் செவிகள், உண்ணக்கூடாதவற்றை சபலத்தால் தின்றுவிடும் நாவு.  புலனடக்கத்தை கெடுத்து எலிகள் நமக்குள்ளே  உணர கூடிய தெய்வீக இன்பத்தை அடையவிடாது, வஞ்சிக்கின்றன. ஆனால் இடர்களை களையும்  வினாயகன் இவற்றை கண்டறிந்து அடக்கி தன்னுடன் இருத்திக்கொள்கிறான்.  அப்பொழுது தான் அனைத்து தவம்-பூஜை-ஜபங்களும் பலிக்கும். இக்காரணத்தினாலேயே வினாயகருக்கு முதல் பூஜை. இந்த வினாயகர் நம் அனைவரின் வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கட்டும்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.