மூலம்: சௌமியா பிரதீப்
தமிழாக்கம் : ஸி. ஆர். ஸ்ரீதர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த சமயம். ஒரு நாள் பாண்டவர்கள் மற்றும் திரௌபதியின் உணவு ஆன பிறகு, பத்தாயிரம் சீடர்களுடன் பாண்டவர்களின் குடிலுக்கு முனிவர் துர்வாசர் வருகை தந்தார். தருமபுத்திரன்
அளவு கடந்த பக்தியுடன் அவரை வரவேற்று அவரின் நலம் விசாரித்தான். தூர்வாசர் தாம் நதியில் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வருவதற்குள், தமக்கும் தம் சீடர்களுக்கும் உணவு தயாரித்து வைக்குமாறு கூறிவிட்டு நதிக்குச் சென்றார். பாண்டவர்களுக்கு சூரியதேவனால் கொடுக்கப்பட்ட அட்சய பாத்திரத்தில், திரௌபதி உணவு உண்ட பின், மீண்டும் உணவு தயாராவதற்கு மறு நாள் காலை சூரியோதயம் வரை பொறுத்திருக்க வேண்டும். வந்துள்ள விருந்தினரை உணவுடன் உபசிரிப்பது எவ்வாறு? துர்வாச முனிவரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று யோசித்தவாறே, தருமபுத்திரன் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையை திரௌபதிக்கு தெரிவித்தான். அப்பொழுது திரௌபதி ஒரு வினாடி யோசித்து, தங்களுக்கு ஆபத்து காலங்களில் கை கொடுத்து உதவுபவனான ஸ்ரீ கிருஷ்ணனிடமே சரணடைந்தாள். அவளுடைய வேண்டுதலை செவி மடுத்து அவள் எதிரில் காட்சியளித்த ஸ்ரீ கிருஷ்ணன், தனக்கு சிறிது உணவளிக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது திரௌபதி, அட்சய பாத்திரத்தின் அடித்தளத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரே ஒரு பருப்பை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் தூய மனதுடன் சமர்ப்பித்தபொழுது இறைவனும் அதனை ஏற்று முழு மனநிறைவு அடைந்தான். அப்பொழுது நதிக்கரையில் அனுஷ்டானங்களை மேற்க்கொண்டிருந்த துர்வாசருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவால் வயிறு நிரம்பியதைப்போன்ற அனுபவம் ஏற்பட்டது. ஏனென்றால் வயிற்றில் உள்ள வைச்வானர வடிவமானது சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவேயல்லவா? அவனே, திரௌபதி பக்தியுடன் அர்ப்பணித்த உணவால் முழு மன நிறைவு அடைந்ததால், அவனையே பூஜிக்கும் தூர்வாசரும் அவருடைய சீடர்களும் பூரண திருப்தியடைந்து, பாண்டவர்களை வாழ்த்தி, அவ்விடமிருந்து புறப்பட்டு சென்றனர்.
இறைவன் "ஒரு இலையையோ, ஒரு பூவையோ, ஒரு பழத்தையோ அல்லது ஒரு சொட்டு நீரையோ பக்தியுடன் சமர்ப்பித்தால் நான் பூரண திருப்தி அடைகிறேன்" என்று கீதையில் கூறியுள்ளவாறு எப்பொழுதும் மனநிறைவு கொண்டவனான இறைவனுக்கு, பக்தர்கள் அளிக்கும் பொருளின் அளவைவிட அவர்களிடமுள்ள அர்ப்பணிப்பு உணர்வே மிகவும் பிரியமானது. விதுரன் அர்ப்பணித்ததைப்போல், சபரி அளித்ததைப்போல் சுத்தமான உணர்வை மட்டும் அவன் விரும்புகின்றான், மற்றும் ஏற்றுக் கொள்கிறான். இறைவனுக்கு, இறைவடிவம் கொண்ட ஆசாரியர்களுக்கு, பெரியோர்களுக்கு அல்லது இறைவன் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு ஒரு பொருளை சமர்ப்பிக்கும்பொழுது, ஒட்டுதல் இல்லாத, எளிமையான மற்றும் தூய்மையான மனமே முக்கியமானதாகும். அவ்வாறு இருந்தால் மட்டும் அது உண்மையான அர்ப்பணமாகும். "விண்வெளியில் செல்லும்போது தங்கக்கட்டியும், பருத்தியும் ஒன்றேபோல் ஆகிவிடுகின்றன. இரண்டும் தத்தம் எடையை இழந்து ஒரே மாதிரி ஆகிவிடுகின்றன. அவ்வாறே இறைவனுக்கு சுத்தமான உணர்வுடன் அர்ப்பணிக்கப்பட்டபொழுது நயாபைசா மற்றும் ஒரு தங்கக் குவியல் இரண்டிற்கும் ஒரே வடிவம். இரண்டும் தத்தம் மதிப்பை இழந்து பிரம்ம ரூபத்தை(இறைவடிவத்தை) பெற்று விடுகின்றன" என்னும் ஸ்ரீரங்கமஹாகுருவின் வாக்கு இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.