Thursday, March 17, 2022

நம்முள் ஒளிரும் ஒளியை மறவாமலிருப்போம் (Nammul olirum oliyai maravaamaliruppom)

மூலம்: சுப்ரமண்ணிய சோமாயாஜி 

தமிழாக்கம்: ஸி. ஆர். ஸ்ரீதர்

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


 


     கடோபனிஷத்தின் ஒரு பகுதி இவ்வாறுள்ளது:-  ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில், இறைவன் தேவர்களுக்கு வெற்றியை வழங்கினான். வெற்றியடைந்த தேவர்கள் மிக்க பெருமிதமடைந்தார்கள். மற்றும் அப்பெருமை தம்மையே சார்ந்தது என்னும் இறுமாப்பு அடைந்தார்கள். இவ்வாறு உள்ளபொழுது ஒரு சமயம், ஆகாயத்தில் அவர்கள் என்றும் காணாத யக்ஷன் ஒருவனை கண்டனர். இந்த யக்ஷன் யாராக இருக்கும் என்னும் கேள்வி அவர்களுக்கு எழ, தங்களிடையில் முக்கியமான ஒருவனான அக்னிதேவனை, அந்த யக்ஷன் யாரென்று அறிந்துவர அனுப்பினார்கள். அக்னிதேவன் அந்த யக்ஷனின் எதிரில், அவனுடைய ஒளியின் பிரபாவத்தால் ஒன்றும் பேச இயலாமல் வாயடைத்து நின்றான். 


                 அப்பொழுது அந்த யக்ஷனே அக்னி தேவனை நோக்கி "நீ யார்? உன்னுடைய வல்லமை என்ன?" என்று வினவினான். அதற்கு அக்னிதேவன் "நான் அக்னி. என்னுடைய சக்தியால் இவ்வுலகிலுள்ள எப்பொருளையும் சுட்டெரிக்க வல்லவன்" என்று தன் வலிமையை சாற்றினான். அப்பொழுது யக்ஷன் "அப்படியென்றால் இந்த புல் குச்சியை சுட்டெரி" என்றான். எவ்வளவோ முயன்றும் அக்னியால் அந்த புல் குச்சியை சிறிதும் எரிக்க முடியவில்லை. அவன் வெட்கமடைந்து திரும்பிச் சென்றான்.


              அடுத்து வாயுதேவனின் முறை. யக்ஷன் வாயுவினிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அதற்கு வாயுதேவன் தன்னைப் பற்றி இவ்வாறு கூறிக்கொண்டான். "நான் வாயு. என்னுடைய வேகத்தால் உலகில் உள்ள  அனைத்து பொருள்களையும் இட மாற்றம் செய்ய வல்லவன்." யக்ஷன் மறுபடியும் அந்த புல் குச்சியைக் காட்டி, "உன்னுடைய ஆற்றலால் இதை பறக்கச் செய் பார்க்கலாம்" என்றான். தன்னுடைய மொத்த சக்தியை உபயோகித்தும்  வாயுவினால் அந்த புல் குச்சியை அசைக்கக் கூட முடியவில்லை. அவனும் வெட்கத்துடன் திரும்பினான்.


                 அப்பொழுது இந்திரனே யக்ஷனருகில் வந்தபொழுது, யக்ஷன் மறைந்துவிட்டான். இந்திரனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டாலும் அங்கேயே நின்று தியானத்திலாழ்ந்தான். அப்பொழுது யக்ஷன் இருந்த இடத்தில் தங்கப்பதுமையாக, சிவனின் மறு பாதியான உமாதேவி காட்சி அளித்தாள். அப்பொழுது இந்திரன் அவளை தலையால் வணங்கி, "யக்ஷன் யார்?" என்று வினவுகின்றான். அப்பொழுது ஜகதம்பாள் கூறுகின்றாள்: "அந்த யக்ஷன் இறைவனே. உங்கள் அனைவரின் தற்பெருமையை விலக்கவே யக்ஷனின் வடிவில் காட்சியளித்தான். எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் பின் நின்று இயக்கும் சக்தி அவனே. அவனால்தான் நீங்கள் வெற்றி அடைந்தீர்கள். அதை மறந்து, வெற்றி உங்களதுதான் என்ற அகம்பாவத்தை வெளிப்படுத்தினீர்கள். அதனால்தான் உங்களை நல்வழிப்படுத்த அவன் பரீட்சிக்க வேண்டியதாயிற்று" என்றாள். தேவர்கள் அனைவரும் தமது தவற்றை உணர்ந்து இறைவனுக்கு தலை வணங்கினர். 


இறைவனின் சக்தியால்தான் படைப்பில் அனைத்தும் நடைபெறுகின்றன என்பதை விளக்கும் ஒர் அழகிய கதையாகும் இது. தற்பெருமை வழி தவறவைக்கின்றது. "நான்" அல்லாததை "நான்" என நினைக்கச் செய்கின்றது. அவ்வாறாகும்பொழுது சத்தியத்தின் பாதை தவறுகின்றது. தேவர்களுக்கு இவ்வாறு  கற்பிக்காவிடில் அத்தகைய தற்பெருமை மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு அவர்களும் அசுரராகிவிடுவர் என்றே, இறைவன் அவர்களை அனுக்ரஹித்து பாடம் கற்பித்தான். இக்கதை, தேவர்களை ஒரு சாக்காக கொண்டு நம் அனைவருக்கும் ஒரு பாடமாக அருளப்பட்டுள்ளது. நாம் அனைவரும் நமக்குள் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொண்டால், நம் வாழ்விலும் இவ்வாறு தற்பெருமை அடைந்த நிகழ்ச்சிகள் புலப்படும். எல்லாவற்றின் பின் உள்ள இறைவனுடைய உண்மையான சக்தியையும், மகத்துவத்தையும் மறந்து, நம் பெருமையிலேயே திளைக்கிறோம்.


 இதையே யமதர்மராஜா நசிகேதனுக்கு உபதேசிக்கிறான் - 


ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம், நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: |

 தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாந்தி//


 என்றவாறு, "சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்னல், அக்னி இவை அனைத்தும் இறைவனிடமிருந்தே ஒளியைப் பெற்று ஒளியால் மிளிர்கின்றன" என்று மூல ஒளிமயமான அவ்விறைவனே சுட்டிக் காட்டப்படுகிறான். 


இறைவனின் ஸ்வரூபத்தை  நம் மனக்கண்முன் காட்டும் உபனிஷத்தின் நடை மிகவும் மர்மமாகவும், அழகாகவும், எளிதாகவும் உள்ளது. இங்கு ஸ்ரீரங்க மஹாகுருவின் இவ்வாக்கு நினைவில் கொள்ளத்தக்கது - "ஆகாயத்தில் உள்ள சூரியன் மிக தூரத்தில் இருந்தாலும், பூமியிலுள்ள பூக்கள் அவனால் மலர்கின்றன. அவ்வாறே இப்பூக்கள், சூரியன் மிகவும் தூரத்தில் உள்ளான் என்று யோசிக்க வேண்டியதில்லை. அவ்வாறே ஞானசூரியனின் அனுக்ரஹத்தால் ஜீவமலர்கள் எவ்வளவுதான் தூரத்தில் இருந்தாலும் மலர்வது உண்மை என்பது நிச்சயம்." நம் வாழ்வின் பின்னணியில் ஒளிவீசும் இறைவனின் மகிமையை நாம் அனைவரும் அறிவோமாக.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.