Showing posts with label author_crsreedhar. Show all posts
Showing posts with label author_crsreedhar. Show all posts

Tuesday, May 10, 2022

நல்வழிக்காக கதைகள் (Nalvzhikkaga kadhaigal)

மூலம்: சௌமியா பிரதீப் 

தமிழாக்கம் : ஸி. ஆர் ஸ்ரீதர்

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


          மஹிலாரோப்யம் என்னும் நகரத்தில் அமரசக்தி என்னும் சூரனான ஒரு அரசன் இருந்தான். அவனுடைய மூன்று ஆண் பிள்ளைகளும் நியாயம் நீதி அற்றவர்களாக, முட்டாள்களாக இருந்தனர். அதனால் சிந்தனைக்குள்ளான அரசன் தன்  மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி, தன் மகன்கள் புத்திசாலிகளாக ஆகவும், நியாயம், நீதிகளை அறியவும் வழிகளைகண்டுபிடிக்குமாறு கூறினான். அப்பொழுது  விஷ்ணுசர்மா என்னும் அறிஞர் அரசனுடைய மூன்று மக்களையும், ஆறு மாதங்களில் அறிஞர்கள் ஆக்குவதாக நம்பிக்கையளித்து அவர்களை அழைத்துச் சென்றார். அவர்களுக்கு நீதியை போதிக்கும் ஐந்து தந்திரங்களை உள்ளடக்கிய கதைகளை மனதில் நன்றாக பதியுமாறு கூறி அவர்களை அறிஞர்களாக்கினார். அதுதான் இன்றைக்கும் "பஞ்ச தந்திரங்கள்" என்ற பெயரில்  பல விதங்களிலும் உபயோககரமான புத்தகமாக உள்ளது.


              மக்களை நல்வழிப்படுத்த, கதைகள் மிக முக்கியமான பாத்திரங்களாகின்றன. பாரதத்தின் புராண இதிஹாசங்களிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகள் உலக வாழ்க்கை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அறிவை, அதாவது, யாருடன் எத்தகைய விவகாரத்தில் ஈடுபடலாம் என்னும் அறிவை தருகின்றன. அதோடு பற்பல நீதிகளையும் கற்பித்து மக்களிடம் நற்குணங்களை வளர்த்து அவர்களை தேசத்தின் நல்ல குடிமக்களாக்க உதவுகின்றன.


          ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்கள் முழுமையாக பிரம்மாண்டத்திலும்(அண்டம்), பிண்டாண்டத்திலும்(சரீரம்) முற்றிலும் பரவியுள்ளன. இம்முக்குணங்களின் செய்கையின்றி படைப்பின் சுழற்சி ஏற்படுவதே இல்லை. இயற்கையின் சமநிலை காப்பாற்றப்படுவதற்கு முக்குணங்கள்  மிகவும் தேவையானவை. பொறுமைக்கும், சமாதானத்திற்கும் ஸத்வ குணம் அவசியமானது. காரியங்கள் நடைபெறுவதற்கு ரஜோ குணம் தேவை. சோம்பேரித்தனத்தை உண்டாக்கும் தமோகுணத்தை தூங்குவதற்கு உதவியாக பயன் படுத்தவேண்டும். ஸத்வ குணத்தை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்து,  அதன் கீழ் ரஜஸ்ஸும், தமஸ்ஸும் செயல்படும்படி பார்த்துக்கொண்டால் அப்பொழுது  அறத்தின் வழியான வாழ்க்கை அமையும். அவ்வாறான ஸத்வ குணத்தில் முழு கட்டுப்பாட்டை அடைவதற்கு நல்ல விஷயங்களை செவியால் கேட்டுக்கொண்டிருப்பது அவசியம். இளம் வயது மக்களுக்கு, "இராமனைப்போல் நடந்துகொள்ள வேண்டும், இராவணனைப்போல் நடக்கக் கூடாது" என்பன போன்ற நல்ல விஷயங்களை தத்துவங்களுடன் எடுத்துரைத்தால், அவர்களை நல்வழியில் முன்நடத்தி நெறிமுறைகள் கூடியவர்களாக ஆக்கலாம். அன்னையான ஜீஜாபாய் கூறிக்கொண்டிருந்த மஹாபாரத கதைகளை செவிமடுத்து சிவாஜி மஹாராஜா வளர்ந்ததன் விளைவு, பாரத தேசம் அத்தகைய ஒரு அறநெறியைக் கடைப்பிடித்த அரசனைக் காண முடிந்தது.


       வேதங்களில் உரைக்கப்பட்ட நுணுக்கமான அறநெறிகளை புராணங்கள், இதிகாசங்கள் , மற்றும் காவியங்களில் கதை வடிவத்தில் பிணைத்து, மகரிஷிகள் உலகத்திற்கு வழங்கியுள்ளார்கள். அந்த கதைகள்தான் சிறு குழந்தைகளுக்கு விளங்குமாறு விலங்குகள்- பறவைகளின் கதைகள் மூலம் "  பஞ்ச தந்திரம்"  முதலியவைகளில் சித்தரிக்கப் பட்டுள்ளன. "மகரிஷி தன் மட்டத்திலேயே தான் இருந்துவிட்டால் உலகத்தார்க்கு அவை யாவும் விளங்காது. உலகத்தார் அந்த மட்டத்திற்கு ஏற முடியாது. சிறு குழந்தைகளுக்கு நாம் அழைத்து ஏதாவது கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நாம் அக்குழந்தைகளின் மட்டத்திற்கே இறங்கி பேசவேண்டுமே தவிர, நம் மட்டத்திலேயே இருந்து, நம் சுருதியிலேயே, நம் மொழியின் கம்பீரத்துடனேயே பேசுவதாக இருந்தால் குழந்தைகள் நம் அருகிலேயே வரமாட்டார்கள்" என்னும் ஸ்ரீரங்கமஹாகுரு அவர்களின் வாக்கின்படி, குழந்தைகளுக்கு வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் உள்ள நல்ல விஷயங்களை கதைகளின் மூலம் அளிக்க முயற்ச்சி செய்வோமாக.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Tuesday, May 3, 2022

வாழ்க்கை என்னும் சறுக்கு மரம் (Vazhkai ennum sharukku maram)

மூலம்: சுப்ரமணிய சோமாயாஜி

தமிழாக்கம்: ஸி ஆர் ஸ்ரீதர்

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




          அது ஒரு மென்மையான சறுக்கு மரம். மற்றும், அதன் மேலிருந்து அடிவரை எண்ணை தடவியுள்ளனர். அதன் மேல் பாகத்தில் ஒரு பொன்முடிப்பு. போட்டியாளர்கள் அந்த சறுக்கு மரத்தின் கீழிருந்து மேல் ஏறி அந்த பொன் முடிப்பை தமதாக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏறும்பொழுது மரத்தில் வழுக்கிக்கொண்டு இருப்பது மட்டுமன்றி, கீழே உள்ள மக்கள் அவன் மீது தண்ணீர் இரைப்பார்கள். இவ்வனைத்து எதிர்ப்பு சூழ்நிலைகளையும் மீறி அந்த பொன் முடிப்பை தமதாக்கிக்கொள்வதே போட்டி. அனைவர் சேர்ந்து  ஒரு குழுவாக முயல்கின்றார்கள். ஒருவர் உச்சியை அடைந்து வெற்றியடைகின்றார். இத்தகைய போட்டி கோகுலாஷ்டமிக்கு மறுநாள் நடைப்பெற்றுவது வழக்கம். 


       இது பாரதீயமான  ஒரு விளையாட்டு. வெளிப்பார்வைக்கு ஒரு போட்டி, மனமகிழ்ச்சி அளிப்பது. ஆனால் இதற்குள் வாழ்க்கையின் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது என்பதை ஸ்ரீரங்கமகாகுரு விளக்கியுள்ளார் -  இவ்வாழ்க்கை ஒரு சறுக்கு மரம். இவ்வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் நம்மை எக்காலமும் கீழே இழுத்துக்கொண்டே இருக்கும். நம் இந்திரியங்கள் நம்மை நம் வாழ்வின் மிக உன்னதமான நிலையில் உள்ள அப்பொன்முடிப்பென்னும் உயரிய இன்பத்தின் மட்டத்திற்கு ஏற விடுவதில்லை. இவ்விளையாட்டு நம் வாழ்வின் குறிக்கோளை நினைவூட்டுவதாகவே உள்ளது. ஒவ்வொரு வினாடியும் வழுக்கிக்கொண்டிருக்கும்  இந்த வாழ்க்கை என்னும் சறுக்கு மரத்தை லாகவமாக ஏறி, அதன் நுனியில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் இறைப்பொக்கிஷம் என்னும்  ஆனந்தத்தை அடைந்து மகிழ்வடைய வேண்டும். இத்கைய ஒரு கடினமான சாகசத்திற்கு நம்மை தயார் செய்வதற்காகவே நம் பண்டைய மகரிஷிகள், பாரதீயத்திற்கே உரிய சில வித்யைகள், கலைகள் ஆசார விசாரங்கள் முதலியவற்றை கருணையுடன் நமக்கு வழங்கியுள்ளார்கள். வாழ்க்கையின் தளைகளிலிருந்து விடுபடுவதற்காக சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியுள்ளது. 


சங்கரபகவத்பாதர் தம் லக்ஷ்மீந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தில் உரைத்தபடி :


அந்தஸ்ய மே ஹ்ருதவிவேக மஹா தனஸ்ய 

சோரைர்மஹாபலிபிரிந்த்ரிய நாமதேயை:

மோகாந்தகாரகுஹரே வினிபாதிதஸ்ய  

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மமதேஹி கராவலம்பம் ||


      "லக்ஷ்மீந்ருஸிம்ஹனே! மிக்க பலசாலிகளாகிய இந்திரியங்களென்னும் திருடர்களால், என் அறிவாற்றல் கொள்ளையடிக்கப்பட்டதால் குருடனாகி, ஆசையென்னும் இருள் சூழ்ந்த கிணற்றில் விழுந்துள்ள என்னை, உன் உதவிக்கரத்தை அளித்து காப்பாற்றுவாயாக" என்று வேண்டுகின்றார்.


          சறுக்குமரத்தில் நாம் வழுக்கிவிழாமல் மேலேறும்படி உதவ நம் வாழ்க்கை அமைப்பில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி உள்ளார்கள். ஸ்ரீரங்கமஹாகுரு அவர்களின் கூற்று - "நதி குளம் முதலியவற்றிலிருந்து நீர் நிறைந்த பாத்திரங்களை தலைமேல் சுமந்துவரும் பெண்கள், அப்பாத்திரங்களை சுமப்பது மட்டுமன்றி வேறு பல விஷயங்களையும் பேசிக்கொண்டு வருவதுண்டு. ஆனால் தலைமேல்  உள்ள நீர் நிறைந்த குடத்தை மறப்பதில்லை. அதற்கு பாதிப்பு இல்லாமல் அவர்கள் பேச்சும் உடல் அசைவும் இருக்கும். அதே போல நம் தலை மீது வீற்றிருக்கும் பூரணமான இறைவனை மறவாமல், அதற்கு பாதிப்பு ஏற்படாமல் மற்ற வெவ்வேறு வேலைகளை செய்ய வேண்டும்". அவ்வாறே மற்றொரு மர்மமான விஷயத்தையும் ஸ்ரீரங்கமஹாகுரு  கூறியுள்ளார்: "சந்தை வியாபாரத்திற்கு வந்திருப்பது சரிதான். வியாபாரத்தில்  உற்சாகமிழக்க தேவையில்லை. ஆனால் வியாபாரத்தின் உற்சாகத்தில்,  தான் வீட்டை சென்று அடைவதை மாத்திரம் மறக்கக்கூடாது". இந்திரிய வாழ்க்கையை புறக்கணிக்குமாறு ரிஷிகள் எங்கும் கூறவில்லை. ஆனால்  ஆன்மீகஜீவனத்திற்கு உதவும்படி இந்திரிய வாழ்க்கையை நடத்தும் உபாயத்தை காட்டிதந்துள்ளனர். நாம் அவர்களின் பாதையை பின்பற்றி நடந்தால் இந்திரியங்களோடு கூடிய வாழ்வும், இறைநிலையோடு கூடிய வாழ்வும் இன்பமயமாக விளங்கும்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம். 

Thursday, March 31, 2022

அர்ப்பணிக்க தூயமனம் தேவை (Arpaninkka Tuya Manam Tevai)

மூலம்: சௌமியா பிரதீப் 
தமிழாக்கம் : ஸி. ஆர். ஸ்ரீதர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


 
         பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த சமயம். ஒரு நாள் பாண்டவர்கள் மற்றும் திரௌபதியின் உணவு ஆன  பிறகு, பத்தாயிரம் சீடர்களுடன் பாண்டவர்களின் குடிலுக்கு முனிவர் துர்வாசர் வருகை தந்தார். தருமபுத்திரன் 
அளவு கடந்த பக்தியுடன் அவரை வரவேற்று அவரின் நலம் விசாரித்தான். தூர்வாசர் தாம் நதியில் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வருவதற்குள், தமக்கும் தம் சீடர்களுக்கும் உணவு தயாரித்து வைக்குமாறு கூறிவிட்டு நதிக்குச் சென்றார். பாண்டவர்களுக்கு சூரியதேவனால் கொடுக்கப்பட்ட அட்சய பாத்திரத்தில், திரௌபதி உணவு உண்ட பின், மீண்டும் உணவு தயாராவதற்கு மறு நாள் காலை சூரியோதயம் வரை பொறுத்திருக்க வேண்டும். வந்துள்ள விருந்தினரை உணவுடன் உபசிரிப்பது எவ்வாறு? துர்வாச முனிவரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று யோசித்தவாறே, தருமபுத்திரன் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையை திரௌபதிக்கு தெரிவித்தான். அப்பொழுது திரௌபதி ஒரு வினாடி யோசித்து, தங்களுக்கு ஆபத்து காலங்களில் கை கொடுத்து உதவுபவனான ஸ்ரீ கிருஷ்ணனிடமே சரணடைந்தாள். அவளுடைய வேண்டுதலை செவி மடுத்து அவள் எதிரில் காட்சியளித்த ஸ்ரீ கிருஷ்ணன், தனக்கு சிறிது உணவளிக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது திரௌபதி, அட்சய பாத்திரத்தின் அடித்தளத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரே ஒரு பருப்பை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் தூய மனதுடன் சமர்ப்பித்தபொழுது இறைவனும் அதனை ஏற்று முழு மனநிறைவு அடைந்தான். அப்பொழுது நதிக்கரையில் அனுஷ்டானங்களை மேற்க்கொண்டிருந்த துர்வாசருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவால் வயிறு நிரம்பியதைப்போன்ற அனுபவம் ஏற்பட்டது. ஏனென்றால் வயிற்றில் உள்ள வைச்வானர வடிவமானது சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவேயல்லவா? அவனே, திரௌபதி பக்தியுடன் அர்ப்பணித்த உணவால் முழு மன நிறைவு அடைந்ததால், அவனையே பூஜிக்கும் தூர்வாசரும் அவருடைய சீடர்களும் பூரண திருப்தியடைந்து, பாண்டவர்களை வாழ்த்தி, அவ்விடமிருந்து புறப்பட்டு சென்றனர். 

இறைவன்  "ஒரு இலையையோ, ஒரு பூவையோ, ஒரு பழத்தையோ அல்லது ஒரு சொட்டு நீரையோ பக்தியுடன் சமர்ப்பித்தால் நான் பூரண திருப்தி அடைகிறேன்" என்று கீதையில் கூறியுள்ளவாறு எப்பொழுதும் மனநிறைவு கொண்டவனான இறைவனுக்கு, பக்தர்கள் அளிக்கும் பொருளின் அளவைவிட அவர்களிடமுள்ள அர்ப்பணிப்பு உணர்வே மிகவும் பிரியமானது. விதுரன் அர்ப்பணித்ததைப்போல், சபரி அளித்ததைப்போல் சுத்தமான உணர்வை மட்டும் அவன் விரும்புகின்றான், மற்றும் ஏற்றுக் கொள்கிறான். இறைவனுக்கு, இறைவடிவம் கொண்ட ஆசாரியர்களுக்கு, பெரியோர்களுக்கு அல்லது இறைவன் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு ஒரு பொருளை சமர்ப்பிக்கும்பொழுது, ஒட்டுதல் இல்லாத, எளிமையான மற்றும் தூய்மையான மனமே முக்கியமானதாகும். அவ்வாறு இருந்தால் மட்டும்  அது உண்மையான அர்ப்பணமாகும். "விண்வெளியில் செல்லும்போது தங்கக்கட்டியும், பருத்தியும் ஒன்றேபோல் ஆகிவிடுகின்றன. இரண்டும் தத்தம் எடையை இழந்து ஒரே மாதிரி ஆகிவிடுகின்றன. அவ்வாறே இறைவனுக்கு சுத்தமான உணர்வுடன் அர்ப்பணிக்கப்பட்டபொழுது நயாபைசா மற்றும் ஒரு தங்கக் குவியல் இரண்டிற்கும் ஒரே வடிவம். இரண்டும் தத்தம் மதிப்பை இழந்து பிரம்ம ரூபத்தை(இறைவடிவத்தை) பெற்று விடுகின்றன" என்னும் ஸ்ரீரங்கமஹாகுருவின் வாக்கு இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Thursday, March 17, 2022

நம்முள் ஒளிரும் ஒளியை மறவாமலிருப்போம் (Nammul olirum oliyai maravaamaliruppom)

மூலம்: சுப்ரமண்ணிய சோமாயாஜி 

தமிழாக்கம்: ஸி. ஆர். ஸ்ரீதர்

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


 


     கடோபனிஷத்தின் ஒரு பகுதி இவ்வாறுள்ளது:-  ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில், இறைவன் தேவர்களுக்கு வெற்றியை வழங்கினான். வெற்றியடைந்த தேவர்கள் மிக்க பெருமிதமடைந்தார்கள். மற்றும் அப்பெருமை தம்மையே சார்ந்தது என்னும் இறுமாப்பு அடைந்தார்கள். இவ்வாறு உள்ளபொழுது ஒரு சமயம், ஆகாயத்தில் அவர்கள் என்றும் காணாத யக்ஷன் ஒருவனை கண்டனர். இந்த யக்ஷன் யாராக இருக்கும் என்னும் கேள்வி அவர்களுக்கு எழ, தங்களிடையில் முக்கியமான ஒருவனான அக்னிதேவனை, அந்த யக்ஷன் யாரென்று அறிந்துவர அனுப்பினார்கள். அக்னிதேவன் அந்த யக்ஷனின் எதிரில், அவனுடைய ஒளியின் பிரபாவத்தால் ஒன்றும் பேச இயலாமல் வாயடைத்து நின்றான். 


                 அப்பொழுது அந்த யக்ஷனே அக்னி தேவனை நோக்கி "நீ யார்? உன்னுடைய வல்லமை என்ன?" என்று வினவினான். அதற்கு அக்னிதேவன் "நான் அக்னி. என்னுடைய சக்தியால் இவ்வுலகிலுள்ள எப்பொருளையும் சுட்டெரிக்க வல்லவன்" என்று தன் வலிமையை சாற்றினான். அப்பொழுது யக்ஷன் "அப்படியென்றால் இந்த புல் குச்சியை சுட்டெரி" என்றான். எவ்வளவோ முயன்றும் அக்னியால் அந்த புல் குச்சியை சிறிதும் எரிக்க முடியவில்லை. அவன் வெட்கமடைந்து திரும்பிச் சென்றான்.


              அடுத்து வாயுதேவனின் முறை. யக்ஷன் வாயுவினிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அதற்கு வாயுதேவன் தன்னைப் பற்றி இவ்வாறு கூறிக்கொண்டான். "நான் வாயு. என்னுடைய வேகத்தால் உலகில் உள்ள  அனைத்து பொருள்களையும் இட மாற்றம் செய்ய வல்லவன்." யக்ஷன் மறுபடியும் அந்த புல் குச்சியைக் காட்டி, "உன்னுடைய ஆற்றலால் இதை பறக்கச் செய் பார்க்கலாம்" என்றான். தன்னுடைய மொத்த சக்தியை உபயோகித்தும்  வாயுவினால் அந்த புல் குச்சியை அசைக்கக் கூட முடியவில்லை. அவனும் வெட்கத்துடன் திரும்பினான்.


                 அப்பொழுது இந்திரனே யக்ஷனருகில் வந்தபொழுது, யக்ஷன் மறைந்துவிட்டான். இந்திரனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டாலும் அங்கேயே நின்று தியானத்திலாழ்ந்தான். அப்பொழுது யக்ஷன் இருந்த இடத்தில் தங்கப்பதுமையாக, சிவனின் மறு பாதியான உமாதேவி காட்சி அளித்தாள். அப்பொழுது இந்திரன் அவளை தலையால் வணங்கி, "யக்ஷன் யார்?" என்று வினவுகின்றான். அப்பொழுது ஜகதம்பாள் கூறுகின்றாள்: "அந்த யக்ஷன் இறைவனே. உங்கள் அனைவரின் தற்பெருமையை விலக்கவே யக்ஷனின் வடிவில் காட்சியளித்தான். எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் பின் நின்று இயக்கும் சக்தி அவனே. அவனால்தான் நீங்கள் வெற்றி அடைந்தீர்கள். அதை மறந்து, வெற்றி உங்களதுதான் என்ற அகம்பாவத்தை வெளிப்படுத்தினீர்கள். அதனால்தான் உங்களை நல்வழிப்படுத்த அவன் பரீட்சிக்க வேண்டியதாயிற்று" என்றாள். தேவர்கள் அனைவரும் தமது தவற்றை உணர்ந்து இறைவனுக்கு தலை வணங்கினர். 


இறைவனின் சக்தியால்தான் படைப்பில் அனைத்தும் நடைபெறுகின்றன என்பதை விளக்கும் ஒர் அழகிய கதையாகும் இது. தற்பெருமை வழி தவறவைக்கின்றது. "நான்" அல்லாததை "நான்" என நினைக்கச் செய்கின்றது. அவ்வாறாகும்பொழுது சத்தியத்தின் பாதை தவறுகின்றது. தேவர்களுக்கு இவ்வாறு  கற்பிக்காவிடில் அத்தகைய தற்பெருமை மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு அவர்களும் அசுரராகிவிடுவர் என்றே, இறைவன் அவர்களை அனுக்ரஹித்து பாடம் கற்பித்தான். இக்கதை, தேவர்களை ஒரு சாக்காக கொண்டு நம் அனைவருக்கும் ஒரு பாடமாக அருளப்பட்டுள்ளது. நாம் அனைவரும் நமக்குள் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொண்டால், நம் வாழ்விலும் இவ்வாறு தற்பெருமை அடைந்த நிகழ்ச்சிகள் புலப்படும். எல்லாவற்றின் பின் உள்ள இறைவனுடைய உண்மையான சக்தியையும், மகத்துவத்தையும் மறந்து, நம் பெருமையிலேயே திளைக்கிறோம்.


 இதையே யமதர்மராஜா நசிகேதனுக்கு உபதேசிக்கிறான் - 


ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம், நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: |

 தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாந்தி//


 என்றவாறு, "சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்னல், அக்னி இவை அனைத்தும் இறைவனிடமிருந்தே ஒளியைப் பெற்று ஒளியால் மிளிர்கின்றன" என்று மூல ஒளிமயமான அவ்விறைவனே சுட்டிக் காட்டப்படுகிறான். 


இறைவனின் ஸ்வரூபத்தை  நம் மனக்கண்முன் காட்டும் உபனிஷத்தின் நடை மிகவும் மர்மமாகவும், அழகாகவும், எளிதாகவும் உள்ளது. இங்கு ஸ்ரீரங்க மஹாகுருவின் இவ்வாக்கு நினைவில் கொள்ளத்தக்கது - "ஆகாயத்தில் உள்ள சூரியன் மிக தூரத்தில் இருந்தாலும், பூமியிலுள்ள பூக்கள் அவனால் மலர்கின்றன. அவ்வாறே இப்பூக்கள், சூரியன் மிகவும் தூரத்தில் உள்ளான் என்று யோசிக்க வேண்டியதில்லை. அவ்வாறே ஞானசூரியனின் அனுக்ரஹத்தால் ஜீவமலர்கள் எவ்வளவுதான் தூரத்தில் இருந்தாலும் மலர்வது உண்மை என்பது நிச்சயம்." நம் வாழ்வின் பின்னணியில் ஒளிவீசும் இறைவனின் மகிமையை நாம் அனைவரும் அறிவோமாக.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம். 

Thursday, February 17, 2022

உடலும் ஆலயமும் - 2 (Udalum Alayamum - 2)

  • மூலம்: கஜானன பட்டா
  • தமிழாக்கம்: ஸி. ஆர். ஸ்ரீதர்
  • மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


ஆலயம்  - மனித உடலின் நகல் 

இந்த மனித இயந்திரத்தை  கவனித்த  யோகிகள், இதனுள் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் ஸஹஸ்ராரம் என்னும் ஏழு மையங்களை தரிசித்தனர். இந்த  ஏழு  மையங்கள்  ஏழு வாயில்களாக  விளங்கி, உள் ஒளிரும்  இறைவனுடைய தரிசனத்திற்கு வழி செய்து கொடுக்கின்றன. இந்த ஏழு மையங்களில் மூன்று மையங்கள் மிகவும்  முக்கியமானவைகளாகும். இவற்றில்  ஒன்று  முதன்மையானதாகும். 

இவ்வாறான உள் அமைப்பை அடையாளமாக கொண்டு, ஆலயங்களிலும் முறையே ஏழு  வாயில்கள், மூன்று வாயில்கள், ஒரு வாயில் என்னும்  முறையிலான  அமைப்பை ஏற்படுதினர்.

முதுகெலும்பின் அடையாளமாக ஒரு த்வஜஸ்தம்பம், இறைவனின் எதிரில் ஒருவருக்கு உண்டாகும் மேல்முகநோக்கின்  அடையாளமாக ஒன்று-மூன்று-ஐந்து மற்றும் ஏழு கலசங்களின்  அமைப்பு, ஆலயத்தின் சுற்றிலும் முறையே பௌதிகம், தைவிகம், ஆத்யாத்மிகங்களாகிய சிற்பங்கள், அந்தரங்கத்தில்   நடைபெறும்  ஸத்பக்திகளின்  மோதல் மற்றும்  ஸத்சக்திகளின் வெற்றியைக்குறிக்கும்  கதைகளின் கல்வெட்டுக்கள், அறுபத்திநான்கு ஆயகலைகளின் வெவ்வேறு  சுவடுகள் - இவை அனைத்தும் மனித உடலின் உள்கட்டமைப்பை ஒத்திருக்கின்றன. ஸ்தம்பங்ககளின் எண்ணிக்கை  இருபத்தி  நான்கு, முப்பத்தி ஆறு, அறுபத்தி  நான்கு, தொண்ணூற்றி ஆறு, நூற்றி எட்டு, ஆயிரத்தி எட்டு என்று இவ்வாறு படைப்பின் விரிவிலுள்ள தத்துவங்களின் பிரதிநிதியாக  வந்துள்ளன.

படுத்துள்ள நிலையில் உள்ள  ஒரு  மனிதஉடலுக்கு ஒப்பிடும்போது  பாதங்களே  முன்வாசல், ஜனனேந்த்ரியம் த்வஜஸ்தம்பம், வயிறே பலிபீடம், இதயமானது நவரங்கம், கழுத்து ஸுகநாஸி, தலை கர்ப்பக்ருஹம், ப்ரூமத்யத்தின் ஆக்ஞாசக்ரஸ்தானமே மூலபீடம். செங்குத்தான நிலையில் உள்ள மனிடஉடலுக்கு ஒப்பிட்டு  பார்த்தோமானால் பாதங்களே நிதிகும்பம்,  நாளங்களே முழங்கால்கள், அஸ்திவாரங்களே தொடைகள், இடுப்பு மற்றும்  வயிற்றுப்பகுதிகளே  சுவர்கள், தோளே வலபி, கைகள் ப்ராகாரங்கள், நாக்கானது மணி, இதயமே இறைவனின் சிற்பம், கழுத்தே விமானம், தலையே சிகரம், ஸஹஸ்ராரம் எனப்படும்  ப்ரம்மரந்த்ரமே கலசங்களாகி உள்ளன.

 இனி, தத்வமயமாய் யோகத்தின் ஒருங்கிணைப்பான சக்ரமயமாயும் ஒரு ஒற்றுமையை காணலாம். ஐந்து வகையான கோசங்களின் பார்வையில் நோக்கினால் வெளிப்ராகாரம் அன்னமயமாகவும், உள் ப்ராகாரம்  ப்ராணமயமாகவும், நவரங்கசுற்று மனோமயமாகவும், உள் ப்ராகாரம்  விஞ்ஞானமயமாகவும் மற்றும் கர்ப்பக்ரஹம் ஆனந்தமய கோசமாகவும் கூறப்படுகிறது.

ஆலயம் என்பது நம் பண்டைய மஹரிஷிகளின் தவத்தின் பயனாய் யக்ஞம்-தானம்-தவம், ருதம்-ஸத்யம்-தர்மம், உலகவாழ்க்கையின் செழிப்பு-ஆன்மீகவளர்ச்சி, மற்றும் நான்கு வகையான புருஷார்த்தங்களின் அடிப்படையில் சிற்ப பூஜை வடிவில் பரவியுள்ளது. ஆலயம்  என்னும் தத்துவம்  தர்மம், பிரம்மம், ரஸம் என்னும் மூன்று சிறப்பான வழிகளால் கூறப்பட்டு, க்ஷேத்ரம்-தீர்த்தம்-யாத்திரையாகி, ஜீவனை தேவனாக்கும் உன்னதமான உறுதியான சங்கல்பத்துடன் கூடியுள்ளது. இது தேச காலத்திற்கு உட்பட்டு மாறுபடும்  பிண்டாண்டத்தில்,  மாறுபடாத பிரம்மாண்டத்தைக் காணும்  ஒரு  முயற்சியாக உள்ளது.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Thursday, February 3, 2022

உடலும் ஆலயமும் - 1 (Udalum Alayamum - 1)

மூலம்: கஜானன பட்டா 
தமிழாக்கம்: C R ஸ்ரீ தர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


இறைவனின் மகத்தான படைப்பை பிரம்மாண்டம் என்று கூறினால், அதன் சுருக்கமான வடிவாகிய மனித உடலை பிண்டாண்டம் என்று கூறியுள்ளனர். மிகப் பரந்த உருவமுள்ள ஒரு மரத்தின் அனைத்து பாகங்களும் அதன் விதையில் அடங்கி இருப்பது போல் பிரம்மாண்டத்தில் உள்ள அனைத்து தத்துவங்களும் பிண்டாண்டத்தில் அடக்கம். ஜடப்பொருளான இவ்வுடலில் சைதன்யத்தை  கண்டுகொண்ட நம் முன்னோர்களான மகனீயர்கள் பௌதிகம், தைவிகம் மற்றும்  ஆத்யாத்மிகம் என்னும் மூன்று மட்டங்களின் சத்தியத்தை அறிவதற்கு ஏற்ற ஒரு தெய்வீகமான கருவியாக இவ்வுடலை கண்டனர். அவர்கள் கண்ட இவ்வுடலாகிய கருவியை வர்ணிக்கும் முறை இவ்வாறுள்ளதென சாற்றினர் :

      இம்மனித உடல், விரிவான படைப்பையும், படைப்பின் தொடக்கத்தில் ஒளிரும் பேரொளியையும் அறிந்துகொள்ள  ஒரு கருவியாக உள்ளது. உலகில், தூரத்தில் உள்ள ஒரு பொருளை  அறிய தொலை நோக்கி உள்ளது போல், நுணுக்கமான பொருளை  அறிய நுண்ணோக்கி உள்ளது போல், அனைத்து சத்திய-ருதங்களை  அறியும்  தொலை நோக்கியாகவும்,  நுண்ணோக்கியும், ஊடுருவிப் பார்க்க வல்லதாகவும் உள்ள கருவி நமது உடலேயாகும். அவைகளைப் பற்றிய விரிவான அறிவை சாதாரணமான மனிதனுக்கும் அறிவுறுத்தும் வகையில், இந்த உடலின் ஒரு நகலாக ஆலயங்களை உருவாக்கினர். அப்பொழுதிலிருந்தே இந்த ஆலய வழிபாட்டு கலாசாரம் வளர்ந்து வந்தது. ஆகையால் தான் "தேஹோ தேவாலய:ப்ரோக்த: ஜீவோ ஹம்ஸ: ஸநாதன:" என்னும் கூற்றும் வழக்கில் வளர்ந்து வந்தது. எக்காலத்திலும் திகழும் பேரொளியான இறைவனின் தரிசனத்திற்கான ஓர் இடமாக இவ்வுடலைக் காண முடிந்தது.


தசத்வார புரம் தேஹம்  தச நாடீ மஹாபதம் |

தசபிர் வாயுபிர்  வ்யாப்தம் தசேந்த்ரிய பரிச்சதம்  ||

தேஹம் விஷ்ண்வாலயம் ப்ரோக்தம்

ஸித்திதம் ஸர்வ தேஹிநாம்  |

தேஹம் சிவாலயம் ப்ரோக்தம்

 ஸித்திதம் ஸர்வ  தேஹிநாம்  ||

 

      நாம் நம் முகத்தையே கண்ணாடியில் கண்டு ஆனந்தப்  படுகிறோம்.                       அவ்விதம் நம்மையே நாம்  காண்பது என்றால், கேவலம்  இந்த வெளி உடலை அல்ல. இந்த வெளிப்போர்வையின் பின் உள்ள நுணுக்கமான மற்றும் பரரூபமான இறைவன் வரை நம்மை பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு  பார்ப்பதை சுயபரிசோதனை என்னலாம். இந்த சுய-ஆத்ம பரிசோதனையை நமக்குள்ளேயே நாம் செய்து கொள்ள முடியும். ஆனால் அனைவருக்கும் அவ்வகையான திறமை இராது. அதற்காக, ஒரு அறம் செறிந்த மெருகேற்றினால் அது சாத்தியமாகலாம். அத்தகைய மெருகு ஒரு ஆலயத்திலிருந்து கிடைக்க வேண்டியுள்ளது.


இம்மைக்கும் மறுமைக்குமான பாலம் - ஆலயம்

இவ்வுடலின் மூலம் ஆத்ம  சுய பரிசோதனை செய்து அந்த அனுபவத்தை பெறுவதற்கான உபாயமாக ஆகமசாஸ்திரம் (ஆகதம்-கதம்-மதம்) உருக்கொண்டது.  இந்த சாஸ்திரம் ஆராதனம், உற்சவம் முதலிய முறைகளால் உள்உறையும் ஆனந்தத்தை அனுபவிக்க ஒரு பாலமாயுள்ளது. ஆலயத்திலுள்ள  அர்ச்சா விக்ரஹம் ஆத்மனுடைய நிலையில் (பிரதிநிதியாய்) உள்ளது. முக்குணங்களின் பிரதிநிதியாய் மூவர்ணத் திரையை விலக்கி இறைவனுடைய தரிசனத்தை செய்விக்கவும், அந்த  ஆனந்தத்தை நோக்கி  வழி காட்டவும் வல்லமையுடைய ஒரு அர்ச்சகர் தேவை. அவ்வாறிருந்தால்  சிலையும் சங்கரனாகிவிடும். இவ்வாலயம் நம்மை இம்மை இன்பத்திலிருந்து மேலுலக இன்பத்திற்கு கொண்டு செல்லும் ஒரு பாலமாகவும்  உள்ளது. "அடையாளச் சின்னமான மோதிரம் இல்லாததால் துஷ்யந்தனுக்கு இன்பமயமான நிமிடம் விஷமயமான நிமிடமாயிற்று. பிறகு அடையாளச் சின்னம் கிடைத்தவுடன் விஷநிமிடம் இன்பமயமான நிமிடமாக மாறிற்று. அவ்வாறே இவ்வுலகில் உள்ளோரை வைகுண்டத்திற்கும், கைலாசத்திற்கும் அழைத்துச் செல்லும் ஒரு அடையாளச்(நினைவு) சின்னமே ஆலயமாகும்" என்னும்  மஹாயோகியான ஸ்ரீரங்கமஹாகுருவின் வாக்கு இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Thursday, December 9, 2021

அவதாரம் (Avataaram)

மூலம்: தாரோடி சுரேஷ் 
தமிழாக்கம்: ஸி. ஆர். ஸ்ரீ தர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ஸ்ரீ ராமன்ஸ்ரீ கிருஷ்ணன்மற்றும் பல மஹாபுருஷர்களை அவதார புருஷர்களென்று வழிபடும் பரம்பரை நம் நாட்டில் உள்ளதுஅவர்களுடைய புண்ணிய கதைகளை திரும்ப திரும்ப கேட்டு பேறுபெற்றவராக    விரும்புவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காததுமொத்தத்தில் அவதாரங்களைப் பற்றிய சிந்தனை நம் நாட்டு மக்களின் வாழ்வில் பிரிக்க இயலாத ஒன்றாகும்.

               ஆனால் அவதாரங்களைப் பற்றிய உண்மையைக் குறித்தே கேள்விகள் எழாமல் இல்லை:

1.     உலகம் முழுவதும் பரந்து நிறைந்துள்ள இறைவனைக் குறித்து அவதாரம் என்பது சரியல்லஅவதாரம் என்றால் இறங்கி வருதல் என்பதாகும்.

2.      அவ்வாறு இறங்கி வந்தால் அவன் முன்பு இருந்த இடம் வெற்றிடமாக மாறி விடுமாஅவன் இல்லாத இடமே இல்லைஅப்படியென்றால் அவன் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இறங்கி வருவது என்பது அர்த்தமற்றது அல்லவாஅப்படியாக இறைவனுக்கு வருவது போவது என்பன இல்லை.

3.     அவதாரம் என்றால் மனிதன் முதலிய பிறப்புகளை மேற்கொள்வதுஆனால் அவ்வாறு கூறுவது பாரதீயரின் சாஸ்திரீயமான சிந்தனைக்கே எதிர்மறையானதுஏனென்றால் பிறப்பு இறப்புகள் என்பன மனிதனின் குறைபாடுகள்அவதாரம் என்பதை ஒப்புக்கொள்வது இறைவனிடம் குறைபாடுகள் உள்ளனவென்று குற்றம் சாட்டியது போன்றதாகும்அது சரியன்று. 'அவிகாராய சுத்தாயஎன்று இறைவனைப்  போற்றுகிறோம்.

4.     ,இறைவன் அனைவருள்ளும் உறையும் அந்தர்யாமிஆகையால்தீயவர்களை அழிக்கவும், அதர்மத்தை ஒழிக்கவும் அவதாரம் செய்துதான் ஆகவேண்டும் என்பதில்லைஇறைவன் உள்உறைந்தவாறே தீயவர்களின் மனதில் மாற்றம்  உண்டாக்க வல்லவன்ஆகையால் அவதாரத்தின் தேவையே இல்லையல்லவா?

5.     அத்தகைய மேம்பட்ட மஹான்களை நாம் பின்பற்ற ஏற்றவற்களாகக் கருதி கௌரவித்து, அவர்கள் வழியைக் கடைபிடித்தால் போதுமானதாகாதா என்பது சிலருடைய வாதம்.

      ஆனால் இறைவனின் தன்மையை அளப்பதற்குநம் புலன்களுக்கு அப்பாற்பட்ட பார்வை தேவை என்பது ரிஷிகளின் அனுபவத்தால் கண்டறியப்பட்ட உண்மை. 'த்ருச்யதே ஞான சக்ஷுர்பிதபச்சக்ஷுர்பிரேவச……….

மேலும் நேரடியான அனுபவம்யுக்திவாதம் மற்றும் அனுபவித்தவர்களின் வாயிலாகவந்த விவரம்  முதலியவற்றை   ஆதாரமாகக்கொண்டே  நாம் சாதாரணமாக உண்மையை அறிந்துகொள்கிறோம்.

           அவதாரத்தின் விஷயத்தில் ஞானிகளின் அனுபவபூர்வமான கூற்றுஅவ்வனுபவத்தை சார்ந்த யுக்திஇவ்விரண்டையும் ஆதாரமாகக் கொண்ட சான்றோற்களின் உண்மைக் கூற்றுகளையும் நம் நாட்டின் பண்டைய நூல்களில் ஏராளமாக காணலாம்மற்றும் வெவ்வேறு காலகட்டங்களிலும், தேசங்களிலும் அவதார புருஷர்களின் தரிசனத்த்தின்  அனுபவங்கள் சாதனையாளர்களிடம் கண்டதாக இதிஹாஸங்கள் கூறுவது உண்டு.

            இந்த பின்னணியில் மேறக்கூறிய கேள்விகளுக்கு உரிய விடைகளைக் காண முயல்வோம் இறைவனுக்கு பாரமார்த்திகமாக ஏறுதல் இறங்குதல் ஏதும் கிடையாதுஅவன் எப்பொழுதும் எங்கும் நிறைந்த முழுமையானவன்கர்மவசத்தால் ஏற்படும் பிறப்பும் அவனுக்கு உண்மையில் கிடையாதுஅவனுடைய அவதாரம் என்று கூறுவது ஒரு வித மேலோட்டமான பொருள்.   அவன் தன்னுடைய நிச்சயத்திற்கு ஏற்பஎப்பொழுது இங்குள்ள ஜீவிகளுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறானோ அப்பொழுது அது அவனுடைய 'அவதாரம்' என்று அழைக்கப்படுகிறதுஇவ்வாறு இறைவனுடைய அவதாரம் தன்னுடையதேயான   வெளிப்படுத்தலேயன்றி உண்மையில் இறங்குவதல்லஆகையால் 'அவதாரம்' என்பதனால் அவனுடைய முழுமையான தன்மைக்கும்பரந்து இருக்கும் தன்மைக்கும் எவ்வித குறைபாடும் இல்லை.

                  பிறப்பு-இறப்புகளை குறைபாடுகள் என்று கூறும் சாஸ்திரங்கள் இறைவனை அஜாயமானோ பஹுதா விஜாயதே – என்றால் 'பிறப்பு என்பது இல்லாமலே பிறக்கிறான்'  என்று கூறுகின்றனஎன்றால் அவன் தன் ஸங்கல்பத்திற்கேற்ப தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறானேயன்றி பல ஜன்மங்களின் கர்மங்களின் காரணத்தினால் அல்லஆகையால் குறைபாடுகள் என்பது அவனுக்கு பொருந்தாது.

                            அந்தர்யாமியாக இருந்து தன்னுடைய ஸங்கல்பத்தை நிறைவேற்றிக்கொள்ளுதல்எல்லாம்வல்ல இறைவனால்  முடியாததல்ல. அவ்வாறே பக்தர்களின் உள் மற்றும் வெளிக் கண்களுக்கு காட்சியளித்து, கண்களுக்கு விருந்தாகி,  பரமானந்தத்திற்கு காரணமாகி அவர்களுக்கு உயர்ந்த நிலையை அளிக்கும் சுதந்திரம் அவனுக்கு இல்லையா?

                   அவதாரபுருஷர்கள் உபாசகர்களின் தியானத்திற்கு உரியவர்களாக விளங்கி போகத்தையும், மோக்ஷத்தையும்  அளிக்கும் வல்லமை படைத்தவர்களாயிருப்பர்அவதாரத்திற்கு முன்பும்அவதார காலத்திலும்அவதாரத்தை முடித்துக்கொண்ட  பின்னரும் அவர்களுடைய சக்தியின் பெருமை ஒரே அளவிலிருக்கும்ஆனால் அதுவே ஒரு ஜீவி தன் சாதனையால் சித்திகளை அடைந்தால் அந்த அளவிலான சாமர்த்தியம் இராதுமற்றும்  சிறந்த முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய  நாயகனான ஒருவனை எவராவது கடைப்பிடித்தால்அவர்கள் கேவலம் அறத்தின் வழி மட்டும்தான்  நடக்கலாம்.

                 இவ்வாறாகஅவதாரத்தைப் பற்றிய கருத்துக்கள், புலன்களுக்கு அப்பாற்பட்ட அனுபவம்பெற்ற ஞானியர்களால்    பாரதீயரின் வாழ்க்கையை முற்றிலும் சூழ்ந்துள்ளது.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.