மூலம்: சௌமியா பிரதீப்
தமிழாக்கம் : ஸி. ஆர் ஸ்ரீதர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
மஹிலாரோப்யம் என்னும் நகரத்தில் அமரசக்தி என்னும் சூரனான ஒரு அரசன் இருந்தான். அவனுடைய மூன்று ஆண் பிள்ளைகளும் நியாயம் நீதி அற்றவர்களாக, முட்டாள்களாக இருந்தனர். அதனால் சிந்தனைக்குள்ளான அரசன் தன் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி, தன் மகன்கள் புத்திசாலிகளாக ஆகவும், நியாயம், நீதிகளை அறியவும் வழிகளைகண்டுபிடிக்குமாறு கூறினான். அப்பொழுது விஷ்ணுசர்மா என்னும் அறிஞர் அரசனுடைய மூன்று மக்களையும், ஆறு மாதங்களில் அறிஞர்கள் ஆக்குவதாக நம்பிக்கையளித்து அவர்களை அழைத்துச் சென்றார். அவர்களுக்கு நீதியை போதிக்கும் ஐந்து தந்திரங்களை உள்ளடக்கிய கதைகளை மனதில் நன்றாக பதியுமாறு கூறி அவர்களை அறிஞர்களாக்கினார். அதுதான் இன்றைக்கும் "பஞ்ச தந்திரங்கள்" என்ற பெயரில் பல விதங்களிலும் உபயோககரமான புத்தகமாக உள்ளது.
மக்களை நல்வழிப்படுத்த, கதைகள் மிக முக்கியமான பாத்திரங்களாகின்றன. பாரதத்தின் புராண இதிஹாசங்களிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகள் உலக வாழ்க்கை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அறிவை, அதாவது, யாருடன் எத்தகைய விவகாரத்தில் ஈடுபடலாம் என்னும் அறிவை தருகின்றன. அதோடு பற்பல நீதிகளையும் கற்பித்து மக்களிடம் நற்குணங்களை வளர்த்து அவர்களை தேசத்தின் நல்ல குடிமக்களாக்க உதவுகின்றன.
ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்கள் முழுமையாக பிரம்மாண்டத்திலும்(அண்டம்), பிண்டாண்டத்திலும்(சரீரம்) முற்றிலும் பரவியுள்ளன. இம்முக்குணங்களின் செய்கையின்றி படைப்பின் சுழற்சி ஏற்படுவதே இல்லை. இயற்கையின் சமநிலை காப்பாற்றப்படுவதற்கு முக்குணங்கள் மிகவும் தேவையானவை. பொறுமைக்கும், சமாதானத்திற்கும் ஸத்வ குணம் அவசியமானது. காரியங்கள் நடைபெறுவதற்கு ரஜோ குணம் தேவை. சோம்பேரித்தனத்தை உண்டாக்கும் தமோகுணத்தை தூங்குவதற்கு உதவியாக பயன் படுத்தவேண்டும். ஸத்வ குணத்தை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்து, அதன் கீழ் ரஜஸ்ஸும், தமஸ்ஸும் செயல்படும்படி பார்த்துக்கொண்டால் அப்பொழுது அறத்தின் வழியான வாழ்க்கை அமையும். அவ்வாறான ஸத்வ குணத்தில் முழு கட்டுப்பாட்டை அடைவதற்கு நல்ல விஷயங்களை செவியால் கேட்டுக்கொண்டிருப்பது அவசியம். இளம் வயது மக்களுக்கு, "இராமனைப்போல் நடந்துகொள்ள வேண்டும், இராவணனைப்போல் நடக்கக் கூடாது" என்பன போன்ற நல்ல விஷயங்களை தத்துவங்களுடன் எடுத்துரைத்தால், அவர்களை நல்வழியில் முன்நடத்தி நெறிமுறைகள் கூடியவர்களாக ஆக்கலாம். அன்னையான ஜீஜாபாய் கூறிக்கொண்டிருந்த மஹாபாரத கதைகளை செவிமடுத்து சிவாஜி மஹாராஜா வளர்ந்ததன் விளைவு, பாரத தேசம் அத்தகைய ஒரு அறநெறியைக் கடைப்பிடித்த அரசனைக் காண முடிந்தது.
வேதங்களில் உரைக்கப்பட்ட நுணுக்கமான அறநெறிகளை புராணங்கள், இதிகாசங்கள் , மற்றும் காவியங்களில் கதை வடிவத்தில் பிணைத்து, மகரிஷிகள் உலகத்திற்கு வழங்கியுள்ளார்கள். அந்த கதைகள்தான் சிறு குழந்தைகளுக்கு விளங்குமாறு விலங்குகள்- பறவைகளின் கதைகள் மூலம் " பஞ்ச தந்திரம்" முதலியவைகளில் சித்தரிக்கப் பட்டுள்ளன. "மகரிஷி தன் மட்டத்திலேயே தான் இருந்துவிட்டால் உலகத்தார்க்கு அவை யாவும் விளங்காது. உலகத்தார் அந்த மட்டத்திற்கு ஏற முடியாது. சிறு குழந்தைகளுக்கு நாம் அழைத்து ஏதாவது கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நாம் அக்குழந்தைகளின் மட்டத்திற்கே இறங்கி பேசவேண்டுமே தவிர, நம் மட்டத்திலேயே இருந்து, நம் சுருதியிலேயே, நம் மொழியின் கம்பீரத்துடனேயே பேசுவதாக இருந்தால் குழந்தைகள் நம் அருகிலேயே வரமாட்டார்கள்" என்னும் ஸ்ரீரங்கமஹாகுரு அவர்களின் வாக்கின்படி, குழந்தைகளுக்கு வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் உள்ள நல்ல விஷயங்களை கதைகளின் மூலம் அளிக்க முயற்ச்சி செய்வோமாக.