மூலம் : ஶ்ரீ வரததேசிகாச்சார்ய ரங்கப்ரியர்
தமிழாக்கம் : திருமதி ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
(மூலம் : ஸ்ரீரங்கப்ரியர் தமிழாக்கம் : திருமதி வனஜா)
"அம்மா இனி உங்கள் பிள்ளைக்கு நீங்களே புத்தி புகட்ட வேண்டும். அவனுடைய குறும்புகளை தடுக்க இனி எங்களுக்கு சக்தி இல்லை. நாங்கள் சொல்வதை அவன் கேட்பதே இல்லை." கோகுலத்தில் பாலக்ருஷ்ணனின் தாயிடம் கோபிகைகள் புகார் அளித்தனர்.
"செய்த குறும்புகளை விவரமாக கூறினால் அன்றோ ஆராய்ந்து தண்டனை வழங்கலாம்" என யசோதை ந்யாய மூர்த்தியின் கம்பீரத்தோடு பகர்ந்தாள்.
"கூறாமல் கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்து அவேளைகளில் பசுக்களின் கயிற்றை அவிழ்த்து விடுகிறான். அவை பாலனைத்தையும் கன்றுகளுக்கு ஊட்டிவிடுகின்றன. பால் கறக்கச்செல்லும் எங்களுக்கு கிடைப்பது உதைதான்." கோபிகைகள் விவரித்தனர்.
தாய் மிகுந்த கோபம்கொண்டு அத்தருணத்தில் அங்கு வந்த கண்ணனை அதட்டி "குறும்பு பயலே!
நம் வீட்டு மானம் போகிறது. உன் இச்சைப்படி இவர்கள் வீட்டில் புகுந்து மாடுகளின் கயிற்றை அவிழ்க்கிறாயா?" என கேட்டாள்.
"ஆம் அம்மா நான் அவ்வாறு செய்வதுண்டு" தயங்காமல் பதில் அளித்தான். மகன் தவறே செய்தாலும் உண்மையையே உரைத்ததினால் தாய் பெருமிதம் அடைந்தாள்.
அவள் கோபமும் சிறிது தணிந்தது. "ஏனப்பா இவ்வாறு செய்கிறாய்" என வினவ "அதுவே என் இயற்கை குணம் அம்மா, நான் என்ன செய்ய" பாலக்ருஷ்ணன் புன்னகையுடன் பதிலளித்து அன்னையின் முகத்தையே உற்று நோக்கினான்.
அப்பார்வையின் பொற்கிரணங்கள் யசோதையின் அகக்கண்களைத் திறந்து அவனுடைய சொற்களின் உட்பொருளையும் உணர்த்தின. கண்களுக்கு விருந்தான ஆனந்தமூர்த்தியில் தன்மயமாகி தியானசமாதியில் மெய்மறந்தாள்.
நாம் அனைவருமே (ஜீவன்)பசுக்களே. இறைவன் நம் உலகவாழ்வின் பாசங்களை(கயிற்றை) அவிழ்த்து பேருதவிபுரிகிறான். புண்யம்-புருஷார்த்தம்-கீர்த்தி எதையும் வேண்டாதவன். ஆத்ம த்ருப்தன். எந்த லாபமும் இதனால் அவனுக்கு இல்லை. ஆயினும் ஏன் இந்த பரமோபகாரத்தை செய்கிறானெனில் அவன் குணமே அவ்வாறானது என இத்தத்துவத்தை குருவாதிராஜர் விவரிக்கிறார்.
இக்கருணையையே ஓர் ஹரிதாசர் "பக்தப்ரியனான உனக்கு கால வரையறை உண்டோ?" என போற்றுகிறார்.