Tuesday, May 3, 2022

வாழ்க்கை என்னும் சறுக்கு மரம் (Vazhkai ennum sharukku maram)

மூலம்: சுப்ரமணிய சோமாயாஜி

தமிழாக்கம்: ஸி ஆர் ஸ்ரீதர்

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




          அது ஒரு மென்மையான சறுக்கு மரம். மற்றும், அதன் மேலிருந்து அடிவரை எண்ணை தடவியுள்ளனர். அதன் மேல் பாகத்தில் ஒரு பொன்முடிப்பு. போட்டியாளர்கள் அந்த சறுக்கு மரத்தின் கீழிருந்து மேல் ஏறி அந்த பொன் முடிப்பை தமதாக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏறும்பொழுது மரத்தில் வழுக்கிக்கொண்டு இருப்பது மட்டுமன்றி, கீழே உள்ள மக்கள் அவன் மீது தண்ணீர் இரைப்பார்கள். இவ்வனைத்து எதிர்ப்பு சூழ்நிலைகளையும் மீறி அந்த பொன் முடிப்பை தமதாக்கிக்கொள்வதே போட்டி. அனைவர் சேர்ந்து  ஒரு குழுவாக முயல்கின்றார்கள். ஒருவர் உச்சியை அடைந்து வெற்றியடைகின்றார். இத்தகைய போட்டி கோகுலாஷ்டமிக்கு மறுநாள் நடைப்பெற்றுவது வழக்கம். 


       இது பாரதீயமான  ஒரு விளையாட்டு. வெளிப்பார்வைக்கு ஒரு போட்டி, மனமகிழ்ச்சி அளிப்பது. ஆனால் இதற்குள் வாழ்க்கையின் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது என்பதை ஸ்ரீரங்கமகாகுரு விளக்கியுள்ளார் -  இவ்வாழ்க்கை ஒரு சறுக்கு மரம். இவ்வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் நம்மை எக்காலமும் கீழே இழுத்துக்கொண்டே இருக்கும். நம் இந்திரியங்கள் நம்மை நம் வாழ்வின் மிக உன்னதமான நிலையில் உள்ள அப்பொன்முடிப்பென்னும் உயரிய இன்பத்தின் மட்டத்திற்கு ஏற விடுவதில்லை. இவ்விளையாட்டு நம் வாழ்வின் குறிக்கோளை நினைவூட்டுவதாகவே உள்ளது. ஒவ்வொரு வினாடியும் வழுக்கிக்கொண்டிருக்கும்  இந்த வாழ்க்கை என்னும் சறுக்கு மரத்தை லாகவமாக ஏறி, அதன் நுனியில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் இறைப்பொக்கிஷம் என்னும்  ஆனந்தத்தை அடைந்து மகிழ்வடைய வேண்டும். இத்கைய ஒரு கடினமான சாகசத்திற்கு நம்மை தயார் செய்வதற்காகவே நம் பண்டைய மகரிஷிகள், பாரதீயத்திற்கே உரிய சில வித்யைகள், கலைகள் ஆசார விசாரங்கள் முதலியவற்றை கருணையுடன் நமக்கு வழங்கியுள்ளார்கள். வாழ்க்கையின் தளைகளிலிருந்து விடுபடுவதற்காக சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியுள்ளது. 


சங்கரபகவத்பாதர் தம் லக்ஷ்மீந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தில் உரைத்தபடி :


அந்தஸ்ய மே ஹ்ருதவிவேக மஹா தனஸ்ய 

சோரைர்மஹாபலிபிரிந்த்ரிய நாமதேயை:

மோகாந்தகாரகுஹரே வினிபாதிதஸ்ய  

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மமதேஹி கராவலம்பம் ||


      "லக்ஷ்மீந்ருஸிம்ஹனே! மிக்க பலசாலிகளாகிய இந்திரியங்களென்னும் திருடர்களால், என் அறிவாற்றல் கொள்ளையடிக்கப்பட்டதால் குருடனாகி, ஆசையென்னும் இருள் சூழ்ந்த கிணற்றில் விழுந்துள்ள என்னை, உன் உதவிக்கரத்தை அளித்து காப்பாற்றுவாயாக" என்று வேண்டுகின்றார்.


          சறுக்குமரத்தில் நாம் வழுக்கிவிழாமல் மேலேறும்படி உதவ நம் வாழ்க்கை அமைப்பில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி உள்ளார்கள். ஸ்ரீரங்கமஹாகுரு அவர்களின் கூற்று - "நதி குளம் முதலியவற்றிலிருந்து நீர் நிறைந்த பாத்திரங்களை தலைமேல் சுமந்துவரும் பெண்கள், அப்பாத்திரங்களை சுமப்பது மட்டுமன்றி வேறு பல விஷயங்களையும் பேசிக்கொண்டு வருவதுண்டு. ஆனால் தலைமேல்  உள்ள நீர் நிறைந்த குடத்தை மறப்பதில்லை. அதற்கு பாதிப்பு இல்லாமல் அவர்கள் பேச்சும் உடல் அசைவும் இருக்கும். அதே போல நம் தலை மீது வீற்றிருக்கும் பூரணமான இறைவனை மறவாமல், அதற்கு பாதிப்பு ஏற்படாமல் மற்ற வெவ்வேறு வேலைகளை செய்ய வேண்டும்". அவ்வாறே மற்றொரு மர்மமான விஷயத்தையும் ஸ்ரீரங்கமஹாகுரு  கூறியுள்ளார்: "சந்தை வியாபாரத்திற்கு வந்திருப்பது சரிதான். வியாபாரத்தில்  உற்சாகமிழக்க தேவையில்லை. ஆனால் வியாபாரத்தின் உற்சாகத்தில்,  தான் வீட்டை சென்று அடைவதை மாத்திரம் மறக்கக்கூடாது". இந்திரிய வாழ்க்கையை புறக்கணிக்குமாறு ரிஷிகள் எங்கும் கூறவில்லை. ஆனால்  ஆன்மீகஜீவனத்திற்கு உதவும்படி இந்திரிய வாழ்க்கையை நடத்தும் உபாயத்தை காட்டிதந்துள்ளனர். நாம் அவர்களின் பாதையை பின்பற்றி நடந்தால் இந்திரியங்களோடு கூடிய வாழ்வும், இறைநிலையோடு கூடிய வாழ்வும் இன்பமயமாக விளங்கும்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.