மூலம்: திரு. சாயாபதி
தமிழாக்கம் : திருமதி வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
அவனுக்கு 'மனிதநேயமே இல்லை. மனித தன்மையே அற்ற மிருகம் அவன்' எனும் பேச்சுக்களை நாம் தினந்தோறும் கேட்கிறோம். நம்மை சூழ்ந்துள்ள சமூகத்தை கெடுக்கும் வகையில் செயல்படுவதை காணும்போது கடுங்கோபத்தில் உதிர்க்கும் சொற்கள் இவை. மனிதனிடம் இயற்கையாக உள்ள கருணை, பாசம், கொடை முதலியவற்றை மனிததன்மை என்று தீர்மானிக்கிறோம். ஆனால் ஆராய்ந்து பார்க்கையில் இன்பதுன்பங்களில் பங்கேற்பதும், பகிர்தலும் மனிதனுக்கு மட்டுமே உரியதல்ல. காகம் ஒன்று வலியால் துடிக்கும்போது உதவிக்காக அதை சுற்றியும் கூடி துயரத்தில் பங்கேற்கும் காக்கை கூட்டத்தையே காண்கிறோம். உயிரை பணயமிட்டு தன் இனத்தை காக்கும் யானையின் தியாகம், நாய், குதிரை முதலிய வளர்ப்பு பிராணிகள் தன் எஜமானனிடம் காட்டும் மனபூர்வமான
நெருக்கம் முதலியவை சாமானிய மனிதனிடமும் காணுவது அரிதாக உள்ளது.
நாம் சிறப்பானது என்று கருதும் குணங்களை மிருகங்களிடமும் இயல்பாக காணும்போது அதனை 'மனிதநேயம்'-மனிதனின் சிறப்புகுணம் என்று எவ்வாறு கூற இயலும்?
அவ்வாறெனில் மிருகங்களிலிருந்து வேறுபட்டு மனிதனிடம் மட்டுமே உள்ள சிறப்புதான் என்ன?
இயற்கையோடு இணைந்து உணவு, இருப்பிடம், இனப்பெருக்கம் என்று வாழும் கலை மனிதனைப்போல் விலங்குகளுக்கும் உள்ளது.
ஆனால், வாழ்க்கையில் மறைந்து உள்நின்று வழிநடத்தும் ஒளியின் அறிவை அடையும் மனம் மிருகங்களிடம் காணக்கிடைப்பதில்லை. அதை தவிர மற்ற எல்லா கலைகளும், விசித்திரங்களும் விலங்குகளின் வாழ்வில் ஆச்சர்யமூட்டும் வகையில் உள்ளன.
வாழ்க்கையில் வெளியில் தெரியாமல் மறைந்திருந்து புலன்கள், மனம், புத்தி இவற்றை வழிநடத்தும் அந்தராத்மாவை அறிவதே மனிதனை விலங்குகளைவிட மேல்நிலைக்கு உயர்த்திய சாதனை. அதுவே மனிதனுக்கு மனிதநேயத்தை தரும். அந்த உள்ளுணர்வை புரிந்துகொண்டால் அதன் மூலம் மனம், புத்தி, புலன்கள் பக்குவமடைந்து நற்குணங்களை உடையவனாவான். ஸத்ய தரிசனத்தினால் மலரும் அந்த நற்குணங்களின் மணமே மனிதநேயத்தின் சாரமாகும்.