Thursday, February 3, 2022

உடலும் ஆலயமும் - 1 (Udalum Alayamum - 1)

மூலம்: கஜானன பட்டா 
தமிழாக்கம்: C R ஸ்ரீ தர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


இறைவனின் மகத்தான படைப்பை பிரம்மாண்டம் என்று கூறினால், அதன் சுருக்கமான வடிவாகிய மனித உடலை பிண்டாண்டம் என்று கூறியுள்ளனர். மிகப் பரந்த உருவமுள்ள ஒரு மரத்தின் அனைத்து பாகங்களும் அதன் விதையில் அடங்கி இருப்பது போல் பிரம்மாண்டத்தில் உள்ள அனைத்து தத்துவங்களும் பிண்டாண்டத்தில் அடக்கம். ஜடப்பொருளான இவ்வுடலில் சைதன்யத்தை  கண்டுகொண்ட நம் முன்னோர்களான மகனீயர்கள் பௌதிகம், தைவிகம் மற்றும்  ஆத்யாத்மிகம் என்னும் மூன்று மட்டங்களின் சத்தியத்தை அறிவதற்கு ஏற்ற ஒரு தெய்வீகமான கருவியாக இவ்வுடலை கண்டனர். அவர்கள் கண்ட இவ்வுடலாகிய கருவியை வர்ணிக்கும் முறை இவ்வாறுள்ளதென சாற்றினர் :

      இம்மனித உடல், விரிவான படைப்பையும், படைப்பின் தொடக்கத்தில் ஒளிரும் பேரொளியையும் அறிந்துகொள்ள  ஒரு கருவியாக உள்ளது. உலகில், தூரத்தில் உள்ள ஒரு பொருளை  அறிய தொலை நோக்கி உள்ளது போல், நுணுக்கமான பொருளை  அறிய நுண்ணோக்கி உள்ளது போல், அனைத்து சத்திய-ருதங்களை  அறியும்  தொலை நோக்கியாகவும்,  நுண்ணோக்கியும், ஊடுருவிப் பார்க்க வல்லதாகவும் உள்ள கருவி நமது உடலேயாகும். அவைகளைப் பற்றிய விரிவான அறிவை சாதாரணமான மனிதனுக்கும் அறிவுறுத்தும் வகையில், இந்த உடலின் ஒரு நகலாக ஆலயங்களை உருவாக்கினர். அப்பொழுதிலிருந்தே இந்த ஆலய வழிபாட்டு கலாசாரம் வளர்ந்து வந்தது. ஆகையால் தான் "தேஹோ தேவாலய:ப்ரோக்த: ஜீவோ ஹம்ஸ: ஸநாதன:" என்னும் கூற்றும் வழக்கில் வளர்ந்து வந்தது. எக்காலத்திலும் திகழும் பேரொளியான இறைவனின் தரிசனத்திற்கான ஓர் இடமாக இவ்வுடலைக் காண முடிந்தது.


தசத்வார புரம் தேஹம்  தச நாடீ மஹாபதம் |

தசபிர் வாயுபிர்  வ்யாப்தம் தசேந்த்ரிய பரிச்சதம்  ||

தேஹம் விஷ்ண்வாலயம் ப்ரோக்தம்

ஸித்திதம் ஸர்வ தேஹிநாம்  |

தேஹம் சிவாலயம் ப்ரோக்தம்

 ஸித்திதம் ஸர்வ  தேஹிநாம்  ||

 

      நாம் நம் முகத்தையே கண்ணாடியில் கண்டு ஆனந்தப்  படுகிறோம்.                       அவ்விதம் நம்மையே நாம்  காண்பது என்றால், கேவலம்  இந்த வெளி உடலை அல்ல. இந்த வெளிப்போர்வையின் பின் உள்ள நுணுக்கமான மற்றும் பரரூபமான இறைவன் வரை நம்மை பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு  பார்ப்பதை சுயபரிசோதனை என்னலாம். இந்த சுய-ஆத்ம பரிசோதனையை நமக்குள்ளேயே நாம் செய்து கொள்ள முடியும். ஆனால் அனைவருக்கும் அவ்வகையான திறமை இராது. அதற்காக, ஒரு அறம் செறிந்த மெருகேற்றினால் அது சாத்தியமாகலாம். அத்தகைய மெருகு ஒரு ஆலயத்திலிருந்து கிடைக்க வேண்டியுள்ளது.


இம்மைக்கும் மறுமைக்குமான பாலம் - ஆலயம்

இவ்வுடலின் மூலம் ஆத்ம  சுய பரிசோதனை செய்து அந்த அனுபவத்தை பெறுவதற்கான உபாயமாக ஆகமசாஸ்திரம் (ஆகதம்-கதம்-மதம்) உருக்கொண்டது.  இந்த சாஸ்திரம் ஆராதனம், உற்சவம் முதலிய முறைகளால் உள்உறையும் ஆனந்தத்தை அனுபவிக்க ஒரு பாலமாயுள்ளது. ஆலயத்திலுள்ள  அர்ச்சா விக்ரஹம் ஆத்மனுடைய நிலையில் (பிரதிநிதியாய்) உள்ளது. முக்குணங்களின் பிரதிநிதியாய் மூவர்ணத் திரையை விலக்கி இறைவனுடைய தரிசனத்தை செய்விக்கவும், அந்த  ஆனந்தத்தை நோக்கி  வழி காட்டவும் வல்லமையுடைய ஒரு அர்ச்சகர் தேவை. அவ்வாறிருந்தால்  சிலையும் சங்கரனாகிவிடும். இவ்வாலயம் நம்மை இம்மை இன்பத்திலிருந்து மேலுலக இன்பத்திற்கு கொண்டு செல்லும் ஒரு பாலமாகவும்  உள்ளது. "அடையாளச் சின்னமான மோதிரம் இல்லாததால் துஷ்யந்தனுக்கு இன்பமயமான நிமிடம் விஷமயமான நிமிடமாயிற்று. பிறகு அடையாளச் சின்னம் கிடைத்தவுடன் விஷநிமிடம் இன்பமயமான நிமிடமாக மாறிற்று. அவ்வாறே இவ்வுலகில் உள்ளோரை வைகுண்டத்திற்கும், கைலாசத்திற்கும் அழைத்துச் செல்லும் ஒரு அடையாளச்(நினைவு) சின்னமே ஆலயமாகும்" என்னும்  மஹாயோகியான ஸ்ரீரங்கமஹாகுருவின் வாக்கு இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.