Tuesday, March 8, 2022

ஒப்பற்றமஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு - பாகம் - 11(Oppatra Mahaapurushar Srirangamahaa Guru - Part - 11)

தமிழாக்கம்:  ஶ்ரீமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




 தமிழாக்கம்  : திருமதி ஜானகி


மஹாகுரு வாழ்க்கையின் மூலமான இறை ஒளியை அடைந்து அதனுடைய முழுமை, சாந்தி மற்றும் ஆனந்தத்தை அனுபவித்தவர். அந்த ஒளியிலிருந்து தோன்றி இலை, பூ, பழத்துடன் கூடி செழிப்பாக வளர்ந்த நாகரீகமெனும் ப்ரம்மாண்டமான மரத்தையும் கண்டார். நாகரீகத்தின் வெவ்வேறு பாகங்களனைத்தும் தமக்கு வேர் போல இருக்கும் பேரொளியுடன் தொடர்புகொண்டவாறு அமைவது சாத்தியம் என்பதை பரிசோதித்து அறிந்தார்.

இன்று உலகெங்கும் பரவி வெளிப் பார்வைக்கு அற்புதமாக காணப்படும் ஒரு நாகரீகத்தை நம்மை சுற்றி காண்கிறோம். ஆனால்  மேற்கூறப்பட்டுள்ள சிறப்பான கலாச்சாரத்தின் அடிப்படை இந்நாகரீகத்தில் காணப்படுவதில்லை. வாழ்க்கையை பரிபூரணமாக்கும் பரம்பொருளின் நினைவு அதில் இல்லை. அதில் பல குறைகள் காணப்படுவதற்கு காரணம் அப்பரம்பொருளுடன் ஒன்றிணையாமல் வெளிக் கண்ணோட்டத்தில் மட்டுமே வளர்ந்திருப்பதுதான். மஹா குருவின் கலாச்சாரத்தைப் பற்றிய கண்ணோட்டம் பழமையான  பாரத மஹரிஷிகளின் மனோதர்மத்தை ஒத்திருந்தது.


ஆன்மீக கலாசாரம் நாகரீகமாக வளர்ந்துள்ள விதம்:

        பூஜையில் மணியோசை செய்வது நமது பரம்பரையில் வந்துள்ள வழக்கம். யோகியின் ஆன்மீகப்பயணத்தில் ப்ராணன் சுஷும்னா நாடியில்  நுழையும்பொழுது  மணியோசை கேட்கப்படுகிறது என்பது சாஸ்திரவாக்கியம். யோகிகளின் இதயத்தில் கேட்கப்படும் அந்த ஒலியை அவ்வாறே வெளிப்படுத்துவதற்கேற்ற  பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மணியையே பூஜையில் உபயோகப்படுத்த வேண்டுமென்பது சாஸ்த்ரங்களின் கருத்து. அதனால் நாதயோகத்தை லட்சியத்தில் கொண்டு மணியின் உருவம், எடை மற்றும் அதில் உலோகங்களின் கலவை எந்த விகிதத்தில் இருக்க வேண்டுமென்பதும் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

             லட்சணங்களுடன் கூடிய மணியை தயாரிப்பதற்கு ஒரு சிறந்த கலைஞனின் அவசியம் எவ்வாறோ அவ்வாறே அது சரியாக தயாரிக்கப்பட்டுள்ளதா என சோதித்தறிய அருகிலேயே ஒரு நாதயோகியும் இருக்க வேண்டும். ஆன்மீக பூமியில் தோன்றிய கலாச்சாரம் உலகில் ஒரு நாகரீகமாக உருக்கொண்டதற்கு இது ஓர் மேன்மையான எடுத்துக்காட்டாகும்.

(தொடரும்)