மூலம் : ஸ்ரீ ரங்கபிரிய ஸ்ரீ ஸ்ரீ:
தமிழாக்கம்: ஶ்ரீமதி ஜானகி, வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
குரு சிஷ்யரின் உரையாடல்
பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீரங்கப்ரிய ஸ்வாமிகளின் நேரடி பதிவு
தமிழாக்கம் - திருமதி மைதிலி ராகவன்
பாகம் - 1
ஸ்ரீரங்கமஹாகுரு என்ற மஹாயோகியும் ஞானியும் ஆன ஆசார்யரிடம் அமர்ந்திருந்த அவரது சீடர்களில் ஒருவர் தமது சந்தேகத்தை விண்ணப்பித்துக்கொண்டார்.
"ஸ்வாமி, அரி, அரன், அயன் இம்மூவரில் உயர்ந்தவர் யார்?"
ஆசார்யர்: உயர்ந்தவர் என்றால் வயதிலா? உருவத்திலா? பலத்திலா? ஐஶ்வர்யத்திலா?
எதிர்பாராத இந்த கேள்வியால் வந்த சிரிப்பை சீடர் அடக்கிக்கொண்டாராயினும் தனது கேள்வியை தானே சரியாக புரிந்துகொள்ளாததால் உடனே விடை கூற இயலவில்லை. குருவின் கேள்வி வினோதமாக தோன்றினாலும் கேள்வி கேட்பவருக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சியை உணர்த்துவதாக இருந்தது. சற்று பொறுத்து சீடர் பதிலளித்தார்.
சீடர்: "மூவரில் முக்கியமானவர் யார் என்று கேட்டேன்"
குரு: (அருகில் இருந்த தென்னை மரத்தைக் காட்டி) இதில் முக்கியமான பாகம் எது?
சீடர்: வேர் தான் மரத்திற்கு உயிர்கொடுப்பது. அது தான் முக்கியம்.
குரு: அப்படியென்றால் முக்கியமென்று சமையலுக்கு வேரைக் கொண்டுகொடுத்தால் ஒப்புவார்களா?
சீடர்: இல்லை.
குரு: அங்கு முக்கியமானது எது?
சீடர்: தேங்காய்.
குரு: காய் முழுதுமா? அதில் எந்த பாகம்?
சீடர்: உள்ளே இருக்கும் பருப்பு.
குரு: ஆனால் அதுவே எல்லா சமயங்களிலும் உதவாது. கமண்டலம் செய்ய ஓடு மட்டுமே பயன்படும். அப்படியே வீடு கட்ட, அடுப்பு எறிக்க மரத்தின் தண்டு, பந்தலுக்கு கீற்று, தாகத்திற்கு இளநீர் இப்படி அனைத்து பாகங்களுமே முக்கியமல்லவா? அப்படியே மும்மூர்த்திகளில் மூவருமே முக்கியமானவர்கள்.
சீடர்: சாஸ்த்திரங்கள் இதையே சொல்லுகின்றனவா?
குரு: விஷ்ணு-, சிவ-, ப்ரம்ம-புராணங்கள் முறையே அம்மூவரை முக்கியமென்று கூறுகின்றன. அத்துடன் எல்லா புராணங்களும் அம்மூவரும் ஒன்றே என்றும் சொல்லுகின்றன.
சீடர்: அது எவ்வாறு பொருந்தும்?
குரு: தென்னைமரத்தில் ஒவ்வொறு சமயத்தில் ஒவ்வொன்று முக்கியமானாலும் எல்லா பாகங்களிலும் பொதுவாக உள்ளது எது?
சீடர்: தெரியவில்லை.
குரு: 'தென்னை' என்பது அனைத்திலும் இருப்பதனால் தான் 'தென்னை'மரம், 'தென்ன'ங்கீற்று முதலான பெயர்கள். இவை அனைத்தும் 'தென்னை'யின் வெவ்வேறு உருவங்கள், அதன் வளர்ச்சியே ஆகும். அதுவே அனைத்திலும் 'அந்தர்யாமி'யாக (உள் உறையும் பொருளாக) உள்ளது.
அவ்வாறே மும்மூர்த்திகளும் பரப்ரம்மத்தின் வெவ்வேறு உருவங்கள், அதன் வளர்ச்சிகள். பரப்ரம்மம் ஒன்றே மூன்று உருவங்களில் தன் தொழிலைச் செய்கிறது. அம்மூவரும் சமமாவதும் உண்டு, வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொருவர் முக்கியமாவதும் உண்டு, ஒருவருக்கொருவர் பணியாளராவதும் உண்டு, அரசராவதும் உண்டு.
{சீடரின் விண்ணப்பத்தின்படி இதற்கான சாஸ்த்திர உதாரணங்களையும் வழங்குகிறார் ஆசார்யர்}
(நாளை தொடரும்)