மூலம் : ஸ்ரீ ரங்கபிரிய ஸ்ரீ ஸ்ரீ:
தமிழாக்கம்: ஶ்ரீமதி ஜானகி, வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
குரு சிஷ்யரின் உரையாடல்
பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீரங்கப்ரிய ஸ்வாமிகளின் நேரடி பதிவு
தமிழாக்கம் - திருமதி மைதிலி ராகவன்
பாகம் - 2
சீடர்: தங்கள் உதாரணமும் விளக்கமும் நன்றாகப் புரிந்தது. மும்மூர்திகளுக்கும் வெவ்வேறு கட்டங்களில் முக்கியத்துவம் உண்டு என்பது சாஸ்த்திரங்களில் தெளிவாக உள்ளதா?
குரு: சாஸ்த்திரங்களில் கூறினாலும் இல்லாவிடினும் உண்மை இதுதான். {என்று கூறியதுடன் சாஸ்த்திர வாக்யத்தையும் கூறுகிறார்.}
சீடர் : சிவபுராணம், விஷ்ணுபுராணம் இரண்டையும் வ்யாஸர் எழுதி, ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொருவரை உயர்ந்தவர் என்று கூறினால் அது முரண்பாடாகத் தெரிகிறதே?
குரு: ஒருவரே இங்கு சிவன், அங்கு விஷ்ணு உயர்ந்தவன் என்றதால் அவரை அரசியலில் போன்று நடப்பவர் என்னலாகாது. இங்கும், அங்கும், எங்கும் இருப்பவை அனைத்தும் மறைந்தால் மிகும் 'அப்பனே' பரமாத்மா. அவனொருவனைத்தான் வியாசர் துதிப்பது.
சீடர்: பரமாத்மா ஒருவனே ஆனால் அவனுக்கு வெவ்வேறு பெயர்களெதற்கு?
குரு: ஒரு மாணவனுக்கு பள்ளியில் பரிசு கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பரிசு யாருக்குக்கிடைத்தது என்றால் 'என் மகனுக்கு' என்கிறார் அவனது தந்தை, 'என் தம்பிக்கு' என்கிறான் அண்ணன், 'என் நண்பனுக்கு' என்கிறான் அவனது நண்பன். பரிசு அடைந்தவன் ஒருவனே ஆயினும் மகன், தம்பி, நண்பன் முதலான 'நாமத்ரய மந்திர ஜபம்' (மூன்று வெவ்வேறு பெயர்கள்) எதற்கு? வெவ்வேறு உறவுமுறைகள் இருப்பதால். அதுபோலவே இறைவனுக்கு வெவ்வேறு தொழில்களிருப்பதால் அநேகமாயிரம் பெயர்கள்.
(சற்று பொறுத்து)
ஒருவனே நாடகத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறான். ஒவ்வொறு வேடத்திலும் வெவ்வேறு நிறங்கள். வெவ்வேறு ஆடை ஆபரணங்கள். தொழிலும் வெவ்வேறு. ப்ரம்மனின் வேடத்தில் சிவப்பு ஆடை-அலங்காரம், அது ரஜோகுணத்தின் போர்வை(கவசம்). விஷ்ணுவின் வேடத்தில் வெண்ணிற ஆடை அலங்காரங்கள். அது சத்துவ குணத்தின் கவசம். ருத்திரனின் வேடத்தில் கரிய நிற ஆடை அலங்காரங்கள். அது தமோகுணத்தின் கவசம்.
அந்த கவசங்களைக் களைந்தால் பரிசுத்தனான பரமாத்மா. அவனை வைணவர்கள் நாராயணன், பரமபுருஷன் என்கிறார்கள், சைவர்கள் சதாசிவனென்கிறார்கள், உபனிடதம் பரப்ரம்ம்ம் என்கிறது.
ப்ரம்மன், விஷ்ணு, ருத்திரன் வேடங்களில் இருக்கும்பொழுது ஆக்கல், காத்தல், அழித்தல் என்று வெவ்வேறு தொழில்கள். மூன்று வேடங்களிலிருப்பவனும், மூன்று தொழில்களை புரிபவனும் ஒருவனே இறைவனப்பா!
சீடர்: அப்படியென்றால் இது ஏன் எல்லா பக்தர்களுக்கும்
தெரிவதில்லை?
குரு: நாடகத்தில் நடிப்பவன் சிறப்பாக நடித்தால் வேடமணிந்தவன் யார் என்பதே தெரிவதில்லை!
சீடர்: ஆம். தெரிவதில்லை.
குரு: ஆனால் நடிப்பவனுடன் நன்றாகப்பழகியிருக்கும் உறவினன் ஒருவன் உன்னிப்பாக கவனித்தால் உண்மை விளங்கிவிடும். பகுத்தறிவுள்ளவர்களுக்கு தெரியும். ஒரு நாய் தன் எசமானன் எந்த வேடத்தில் இருந்தாலும் முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டு மகிழ்வுடன் வாலை ஆட்டுகிறது.
அவ்வாறே விவேகமுள்ள பக்தன் தன் ஸ்வாமி எந்த உருவத்தில் இருந்தாலும் தன் நாசாக்ர த்ருஷ்டியினால் அடையாளம் கண்டு களிக்கிறான். அவ்வாறு தன் வேடம் மாறியதால் தன் ப்ரபுவை அடையாளம் காணாத முட்டாளான பக்தன் ஒரு நாயைவிட கேவலமாவான்.
ஞானாசார்யர் வழங்கிய உதாரணம் அதி சுலபமாக இருந்தாலும் ஆழ்ந்த கருத்துள்ளதாக இருப்பதை அறிந்த சீடர்களின் மனம் ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் மலர்ந்தது. மேல்நோட்டத்திற்கு முரணாக காணும் மஹர்ஷிகளின் வாக்யங்களிலிருக்கும் ஒருமைப்பாட்டை சுலபமாக மனத்தில் பதியவைத்த இந்த விளக்கத்தை புத்தி, மனம், ஆன்மா அனைத்தும் ஒருங்கே அனுபவித்ததனாலுண்டான நன்றிப்பெருக்கோடு சீடர்கள் குருவை
வணங்கினர்.