ஶ்ரீரங்க ஸத்குரு என்ற மஹா புருஷர் 1913ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை மஹா பரணி நட்சத்திரத்தில் கர்நாடக மாநிலம், நஞ்ஜனகூடு தாலூகாவில் ஹெடதலை (Hedathale) என்னும் கிராமத்தில் ஒரு ஶ்ரீ வைஷ்ணவ குடும்பத்தில் தோன்றினார். இவருடைய திருநாமம் ஶ்ரீநிவாஸரங்காசார்யர். 'ரங்கஸாமி' என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவருடைய தந்தையார் ஶ்ரீ நல்லான் சக்ரவர்த்தி திருமலாச்சார்யார். இவர் விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர். தாயார் ஶ்ரீமதி ருக்மணி அம்மையார். மிகவும் கருணையுள்ளம் படைத்தவர். தன் தந்தையிடம் கற்று அறிந்த இயற்கை மருத்துவ முறையில் பல பேருக்கு வைத்தியம் செய்து உதவியவர்.
ஶ்ரீராமானுஜ ஸம்ப்ரதாயப்படி பக்தர்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காராதிகளை செய்வித்து வந்த இந்த வம்சத்தவர்கள் 'நல்லான் சக்ரவர்த்தி குருபீடம்' எனும் பெருமை அடைந்திருந்தனர். ஆர்ய பாரத மஹரிஷிகளின் ஹ்ருதய குகையில் தோன்றிய ஞானமனைத்தையும் தன்னுள் கொண்டு தன் மூதாதையர்கள் அடைந்த குரு சப்தம் உண்மையாகும்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆத்மஒளியை காண்பதற்கு வழி காட்டினார் ஶ்ரீரங்க மஹாகுரு.
இளமைப் பருவம்:-
சிறு வயது முதலே த்யானம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதற்காக தன்னுடைய உணவு, பேச்சுவார்த்தை முதலியவைகளில் மிகுந்த கட்டுப்பாட்டை கடைபிடித்தார். அதனால் சிநேகிதர்கள் இவருக்கு 'அந்தர்முகி' என்று பெயர் சூட்டினர். ஒரு சமயம் த்யானத்தில் மூழ்கும் விஷயம் பற்றிய பேச்சு வார்த்தை வந்த போது ஒருவர் 'உன்னால் த்யானத்தில் முழுகமுடியுமானால் இந்த முள் வேலியின் மேல் அமர்ந்து த்யானம் செய்து காட்டு' என கேலியாக சொன்னார்கள். அடுத்த கணமே இவர் சிறிதும் முன்பின் யோசிக்காமல் அதன் மேல் அமர்ந்து த்யானத்தில் ஆழ்ந்தார் !!
(தொடரும்)