Thursday, June 18, 2020

சித்திர/சிற்ப கலையின் உட்பொருள் (Cittira/Cirpa Kalaiyin Uṭporuḷ)

மூலம்: Dr. ஹர்ஷ சிம்ஹ 

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




நம் சித்தத்தை(மனதை)  கவர்வது சித்திரம். ஒரு கலைஞன் இயற்கை காட்சியை காண்கையில் அதன் அழகால் கவரப்பட்டு அந்த சூழ்நிலையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறான்.  சித்திரம் காண்பவரின் சித்தத்தை அந்த விஷயத்தின்பால் ஈர்த்து  அதன் சுவையை உணர்த்துவதால் அது  சித்திரம் எனப்படும். சிற்பங்களும் இவ்வாறான பயனையே அடையச் செய்வதால்  சிற்பங்களையும் சித்திரம் என்றே நமது சிற்பசாத்திரங்கள் கூறுகின்றன.


சித்திரத்திற்கான  பொருள் கலைஞனை பொறுத்தது. அவனது புலன்கள்,  மனநிலை முதலியவை  அவன் மனதில் உருவாக்கும் சித்திரத்தையே அவன் தூரிகை  வெளிகொணர்கிறது. அதை கூர்ந்து நோக்குபவனின் மனமும் இறுதியில் கலைஞனின் மனநிலையுடன் ஒன்றிவிடுகிறது.


இந்த ரகசியத்தை அறிந்த நம் பாரத நாட்டின் முனிவர்கள்  தாங்கள் இதயத்தில், தியானத்தில்  உணர்ந்த படைப்பின் தத்துவங்களையும்,  தேவதைகளின்  ரூபங்களையும்  சிற்பம் சித்திரங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள். இத்தகு சிற்பங்களில் மெய்மறந்து  அச்சுவையில் திளைப்போர்க்கு  அவற்றை காண்பதே தவத்தைப்போல் புனிதமான சாதனையாகிறது. இச்சிற்பங்கள் ரசிகனை(காண்போரை)  படைப்பின் மூலத்தில் உள்ள ஆனந்தமயமான இறைவனின் பால்  கொண்டு சென்று பூர்ண ஆனந்தத்தை நிறைக்கிறது. .


சிற்பம் என்பதன் பொருளே  ஸமாதி-எல்லையற்றவனுடன் மூழ்குதல். இறையுருவின் உருவம், பாவம்,  பார்வை, அழகு, புன்முறுவல், முகவசீகரம் இவையனைத்தும்  புலன்களுக்கு  குளுமை அளிப்பதுடன் மனதைஅழகின் மூலமான யோகானுபவத்தின் பால் கவர்ந்திழுத்துச் செல்கிறது.


ஆலயங்களில் மூல தெய்வத்தின்  சிலையுடன் வேறு  இயற்கை அழகுடன்கூடிய சித்திரங்களும், விலங்குகள், பறவைகள் மற்றும் உலகாயதமான உருவங்கள் கூட காணப்படுகின்றன. இது எவ்வாறெனில், நாம் ஜோக் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுப்பயணம் செய்வதானால் வழியில் இயற்கை எழில் மிகுந்த பசுமையான காடுகளையும், சுவையான உணவையும் பிரயாணத்தையும் ரசிப்பதில்லையா? இவை நீர்வீழ்ச்சியின் ஆச்சரியமான காட்சியின் நினைவுகளுடன் சேர்ந்து வரும் அரிய இனிய நினைவுகள். அது போன்றே கர்ப்பக்ருஹத்தில் உள்ள படைப்பின் கடவுளை கண்டு மகிழ்வதுடன்  வழியில் உள்ள அவனின் மற்ற படைப்புகளையும் கண்டு இன்புறுகிறோம். அவன் விஸ்தாரத்தை கண்டு மயங்குகிறோம்.


ஒரு ரசிகன் ஆறுதலளிக்கும் இயற்கை அன்னையின் பசுமை நிறைந்த வனத்தையும், உயர்ந்த மலை சிகரங்களையும், பரந்து விரிந்த கடற்கரையையும், ஒளி மிகுந்த நீல வானின் தாரகைகளையும் கண்டு மகிழ்கிறான். ஸ்ரீரங்கமஹாகுருவின் சிறந்த, உயரிய கருத்து:  "இறைவனின் புதிரான படைப்பில் அவன் முத்திரையும், கையொப்பமும் உள்ளதால் அவற்றை காண்கையில். மனம் மெதுவாகவும் நிச்சயமாகவும் அவர்கள் அறியாமலே அவர்பால் ஈர்க்கபடுகிறது. மனம் ஆழமான மௌனத்தில் மூழ்கி அளவற்ற பரமானந்தத்தின் ஒரு துளியை அனுபவிக்கின்றது." இக்கருத்தின்படி படைப்பனைத்தும் அவனின் சித்திரம், சிற்பம். ஒப்புவமையற்ற அவ்விறைவனே உண்மையான கலைஞன். மற்றும் பிற கலைஞர்களனைவருக்கும் முன்னோடி. உலகளாவிய அண்டமனைத்தையும் படைத்த இக்கலைஞனே நம் பாரத நாட்டின் அனைத்துக் கலைகளுக்கும் பிறப்பிடம்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.