மூலம்: கே.எஸ்.ராஜகோபால்
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
ஜய-விஜயர்கள் வைகுண்டத்தின் வாயில் காப்பவர்கள். ஒரு முறை சனகாதி முனிவர்கள் மகாவிஷ்ணுவை காண அங்கு வந்தனர். ஆணவம் கொண்ட வாயில்
காப்போர் அவர்கள் யாரென அறிந்தும் தடுத்து நிறுத்தினர். கோபபரவசரான சனகாதிகள் "நீங்கள் பரிசுத்தமான இவ்விடத்தில் இருக்க தகுதியற்றவர்கள். அரக்கர்களாக பிறவி எடுங்கள்" என சபித்தனர். மகாவிஷ்ணுவே அங்கு வந்து ஜய விஜயரை "நீங்கள் மூன்று பிறவிகளில் எனக்கு விரோதிகளாக இருந்து மீண்டும் என்னிடம் வருகிறீர்களா அல்லது ஏழு பிறவிகளில் நண்பர்களாக இருந்து வருகிறீர்களா" என வினவினார். அவர்கள் "மூன்று பிறவிகளில் விரோதிகளாக இருந்தே விரைவில் மீண்டும் வருகிறோம்" என்றனர். சனகாதி முனிவர்கள் கோபமுற்றதும் தவறே! அதை பற்றிய புத்திமதி வழங்க விஷ்ணு அவர்களை குறித்து "புலன்களை வென்ற தங்களை என் வாயில் காப்போர் உள்ளே அனுமதிக்காதது தவறு. அவர்களின் தவறுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்" என்றானாம். சனகாதிகளுக்கு தங்களின் தவறு புரிந்தது! இது பிரசித்தமான கதை.
விஷ்ணுபக்தரான ஜய-விஜயர்களுக்கு இறைவனை அகல முடியாது இவ்வாறு கூறியுள்ளனர் என பலரும் நினைக்கலாம். ஸ்ரீரங்க மஹாகுரு இக்கதையை மிகவும் அழகாக வர்ணித்துள்ளார். ஜய-விஜயர்களுக்கு இரண்டு வழிகள் இருந்தன - பகைவராக அல்லது நண்பர்களாக இருப்பது. அவர்கள் தேர்ந்தெடுத்தது பகைவர்களாக இருப்பதையே! அவ்வாறு செய்வதற்கு காரணம் அப்போதே சாபத்தால் பீடிக்கப்பட்டு அவர்களின் புத்தி நல்வழியில் செல்லாமல் தடுத்தது. இறைவனின் நண்பர்களாக ஏழு அல்ல நூறு பிறவிகளானாலும் வாழலாம். வைகுண்டத்திலிருந்த அவர்களுடைய மனம் எந்நேரமும் இறைவனிடமே இருந்திருக்க வேண்டும். போகட்டும்! சாபத்தினால் பூவுலகிற்கு வந்தாலும், அவர்களுடைய மனம் இறைவனையே நாடியிருந்தால் எங்கிருந்தால் என்ன? இதை அவர்கள் அறியவில்லை. "சொர்கம் அல்லது நரகம் எங்கிருந்தாலும், சுகம் அல்லது துக்கம் எதுவாயினும் எந்நேரமும் ஓ இறைவனே! உன் பதங்களின் நினைவு எனக்கு மறவாமல் இருக்க வேண்டும்" என வேண்டுவது பாரதீயர்களின் பண்பாட்டின் மேன்மை.
எப்பேற்பட்ட பக்தனே ஆயினும் பதவி, புகழாசை முதலிய சுயநலம் ஏற்பட்டால் வாழ்கையின் குறிக்கோளையே மறக்கும்படி செய்கிறது என்பதை உணர்த்துவதற்கு ஜய-விஜயர்களின் கதை வழிகாட்டியாகிறது. எந்நேரமும் இறைவனின் சிந்தனையிலுள்ள சான்றோருக்கே இவ்வாறு நேரும் எனில் மற்றவர்களின் கதி என்ன! இதற்காகவே சான்றோர்கள் "ப்ரத்யஹம் ப்ரத்யவேக்க்ஷேத நர: சரிதமாத்மன: கிம் நு மேபசுபிஸ்துல்யம் கிம் நு சத்புருஷைரிதி" என்று கூறுவது. (ஒவ்வொரு நாளும் மனிதன் தன் நடவடிக்கையை "நான் விலங்கை போல் வாழ்கிறேனா அல்லது நல்லோர் வழி நடக்கிறேனா என்று ஆராய வேண்டும்). விலங்கினங்கள் தம் இச்சைபடி செயல்படுகின்றன. மனிதன் பகுத்தறியும் தன்மை படைத்தவன். தீய குணங்களுக்கு அடிமையாவது, தீய நட்பினால் ஏற்படும் குறைபாட்டினால் ஒரு கணம் அதர்மத்தில் மனம் சென்றாலும் பகுத்தறிவினால் தன்னை சீர்திருத்திக் கொண்டு லட்சியத்தின் வழி அடி எடுத்து வைப்பதில் புத்திசாலித் தனம் உண்டு.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.