மூலம்: Dr.மோஹன்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
ஒரு முறை தேவமுனி நாரதர் ஸ்ரீக்ருஷ்ணனிடம் ஒரு வினோதமான கோரிக்கையை முன்வைத்தார். "க்ருக்ஷ்ணா, உன் மாயையை எனக்கு அறிமுகப்படுத்து." க்ருஷ்ணனும் புன்னகையுடன் ஒப்புக்கொண்டான். இருவரும் புனித யாத்திரை கிளம்பினர். நடைபயணத்தில் களைப்பாலும் தாகத்தாலும் க்ருஷ்ணன் ஓரிடத்தில் அமர்ந்தே விட்டான். நாரதரும் ஒப்புக்கொண்டு நீரை தேடி செல்கையில் ஒரு கிராமத்தில் கிணற்றில் நீர் இறைத்துக்கொண்டிருந்த யுவதியை கண்டு நீரளிக்க வேண்டினார். கையில் நீர் அருந்துகையில் அவள் அழகு அவர் மனதை கவர்ந்தது. 'என்னை மணம் புரிவாயா?' என்று வினவ அவள் நாணத்துடன் தன் தந்தையை கை காட்டினாள். அவர் தன் வீட்டோடு மருமகனாயிருக்க நிபந்தனை விதித்தார். நாரதரும் ஒப்பவே கோலாகலமாக திருமணம் நடந்தேறியது. தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். காலங்கள் உருண்டோட மக்கள் செல்வமும் கிட்டியது. குழந்தைகளின் மழலை, குடும்ப பராமரிப்பு, விவசாயம் என பயனின்றி காலம் கழிந்தது.
ஒரு மழை கால இரவில் கடும் மழையால் நதி வெள்ளம் ஊரையே சேதப்படுத்தியது. நாரதர் மனைவி மக்களை காக்க போராடி தோல்வியுற்றார். தன் கண் எதிரிலேயே குடும்பம் சிதறியதைக்கண்டு நதிக்கரையில் ஒரு மரத்தின் கீழமர்ந்து விக்கி விக்கி அழுத வண்ணம் இருந்தார்.
அப்போது "நாரதா" என்னும் பழகிய குரல் ஒலித்தது. தலை தூக்கி பார்க்கையில் நீர், ஊர் எதுவும் காணவில்லை.
ஒரு பாறைமேல் அமர்ந்த க்ருஷ்ணன் புன்னகையுடன் "நாரதா தண்ணீர் கொண்டு வந்தாயா" என்றான். நாரதருக்கு கணபொழுதில் அனைத்தும் விளங்கிற்று.
"உலகனைத்தும் பொய்தோற்றமென புரிந்து கொண்டேன் பரமாத்மா" என்றார்.
நமக்கும் இவ்வுலகிற்கும் உள்ள பிணைப்பு நம் புலன்களே. விழித்திருக்கையில் புலன்கள் அளிக்கும் செய்திகளின் ஆதாரத்தின் மேல் அறிவு உலகை பற்றிய கற்பனையை உருவாக்குகிறது. கனவுலகில் அறிவானது ஏற்கனவே சேகரித்த செய்திகளின் ஆதாரத்தில் மற்றொரு சொந்த உலகை கற்பனை செய்கிறது. கனவில் சிங்கத்தை கண்டால் இதய துடிப்பு அதிகமாகி ஓடுகிறோம்! ஆயின் கனவிலிருந்து விழித்தவுடன் அது பொய், மாயை என்று எண்ணுகிறது. விழிப்பு, கனவு, ஆழ்ந்த உரக்கம் (சுஷுப்தி) என்ற ப்ரபலமான மூன்று நிலைகளுடன் ஸமாதி என்னும் நான்காவது
நிலையும் உண்டு. அங்கு வெளிஉலகம் மறைந்து ஒளிமயமான உலகம் தோன்றுகிறது. அவ்வொளியின் அனுபவம் கோடி கோடி சூர்ய ஒளியுடன் இருப்பினும் தண்ணிலவைப்போலவே குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது என்று ஸ்ரீரங்கமஹாகுரு நினைவு கூர்ந்தார். அவ்வொளி மிகுந்த உலகு மிகவும் தெளிவாகவும், ப்ரகாசமாகவும் உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் புலன்களாலான இவ்வுலகு பனிபடர்ந்தாற்போல் உள்ளபடி தோன்றும். அத்தகு ஸமாதி நிலையில் எப்போதும் மூழ்கி இருந்த தவ முனிவர்கள் இவ்வுலகம் நிலையற்றது ப்ரம்மம் ஒன்றே உண்மை என்று கூறுகின்றனர்.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.