மூலம்: சுப்ரமண்ய சோமயாஜி
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
ஒருமுறை சில முனிவர்கள் தாருகாவனம் எனும் இடத்தில் ஒரு யாகம் செய்ய முடிவு செய்தனர். யாகங்கள் நடத்துவதே இறைவனை அடையும் பொருட்டு என்பதை மறந்து செயல்களை(கர்மங்களை) இயந்திர வகையில் செய்யத் தொடங்கினர். நம் அன்றாடச் செயல்களைப்போல் செயல்கள் புரிவதொன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. பகவான் நடராஜர் அவர்களுக்கு பாடம் கற்பித்து அறிவொளியூட்ட எண்ணினார். எனவே அவர் ஒரு அழகிய இளைஞனின் உருவில் தாருகாவனம் அடைந்தார். முனிவர்களின் தூயமனமுடைய மனைவிமார்கள் இளைஞனின் அழகால் கவரப்பட்டு தன்னிலை மறந்து அவரை சுற்றி நின்றனர். அவனே இறைவனான பரமசிவன் என்பதை அறியாவிடினும் அவருடைய இருப்பே அவர்களை தன்னிலை இழக்க செய்தது.
தங்களுக்கு யாகத்தில் உதவ வந்த மனைவிகள் இளைஞனை சுற்றி நிற்பதைக்கண்டு முனிவர்கள் சினம் கொண்டனர். தங்கள் தவத்தினின்று பெற்ற சக்தியினால் பல கொடிய விலங்குகளை உருவாக்கி அவ்விளைஞனின் பால் ஏவினர். ஆயின் அனைத்தும் வீணாயின. அவன் அவைகளை அழித்து தன்னை அலங்கரிக்க பயன்படுத்திக்கொண்டான். அரவங்கள் கங்கணம், தோள்வளைகளாயின, புலித்தோல் இடையில் தரிக்கும் உடையானது. முனிவர்கள் அடங்கா கோபத்துடன் அபஸ்மாரன் எனும் அரக்கனை உருவாக்கி இளைஞனுடன் போர்புரிய அனுப்பினர். என்ன அதிசயம்? அவ்விளைஞன் அரக்கனை அழித்து தன் வலதுபாதத்தை அவன் முதுகின்மீது வைத்து நடமிட தொடங்கினான். ஆச்சரியமாக அரக்கன் தன் தலையை மேற்புறம் திருப்பி மந்திரவயப்பட்டதுபோல் மகிழ்ச்சியுடன் இறைவன் முகத்தை நோக்கலானான். குழப்பமடைந்த முனிவர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். பரம்பொருளே நடராஜனாக வந்திருப்பதை உணர்ந்த மறுகணமே தங்கள் சுயரூபத்தையும் வாழ்வின் குறிககோளையும் நினைவு கூர்ந்து அந்த நடனத்தில் தங்களை மறந்தனர்.
ஸ்ரீரங்க மஹாகுருவின் கண்ணோட்டத்தில் இது முழுதும் ஆன்மீக தத்துவங்கள் அடங்கிய கதையாகும். வரையறுக்கப்பட்ட அனைத்து செயல்களும் ஞானத்தை அடவதற்கே. இறைவனை அனுபவித்து உணர்தலே ஞானம். இக்குறிக்கோளின்றி பழக்கத்தில் வந்ததென்று கடமையாற்றுவது வீண். நடராஜர் இவ்வுண்மையை(கொள்கையை) முனிவர்களுக்கு நினைவூட்டவே புவியில் தோன்றினார். ஆயின் அவர்களின் அகந்தை இறைவனை அறிய இயலாமல் மறைத்தது. எனினும் தூய, குற்றமற்ற மனமுடைய மனைவிமார்கள் இயற்கையாகவே அவரால் கவரப்பட்டனர். எத்தகைய அரக்க சக்தியும் அவ்வுயர்ந்த சக்தியின் முன் பயனற்று போகும். எனவே அவை அனைத்தும் அழிந்தன. முன்னரே கூறியவண்ணம் அவ்வரக்கனின் பெயர்(அபஸ்மாரன்) நினைவை இழந்தவன் என்று பொருள். அத்தூய பெருஒளியை மறந்தவர் அனைவரும் நினைவிழந்தவர், மறதி எனும் நோய்கண்டவர். நமது முதுகுத்தண்டு பகுதியில் அடியிலிருந்து தொண்டைவரை (மூலாதாரத்திலிருந்து விசுத்தி சக்ரம் வரை) இயற்கையின் (ப்ரக்ருதியின்) ஆதிக்கத்திற்குட்பட்ட செயல்கள் நடைபெறும் பகுதியாகும். ,அது ஒருவரை தன் உண்மைநிலையை மறக்க செய்கிறது. எப்போது இத்தகு இயற்கை இறைவனால் அடக்கப்படுகிறதோ அப்போது உண்மைநிலை நினைவுறுத்தப்பட்டு தன்னை வெளிப்படுத்துகிறது. தன் உண்மை நிலையை நினைவு கூர்ந்ததால் அபஸ்மாரன் மகிழ்ச்சியுடன் நடராஜன் திருமுகம் நோக்குகிறது.
இது நம் அனைவரின் கதையே. நாமும் அந்த அரக்கனைப்போல் நம் ஒளிமயமான தூய உண்மைதன்மையை மறந்திருக்கிறோம். தாருகாவனத்து முனிவர்களை போலவே நாமும் வாழ்வில் எவ்வித குறிக்கோளுமின்றி பயனற்ற உயிரற்ற செயல்களை செய்து வருகிறோம். நம் மறதியை நீக்கி
அவன் நினைவில் நிலைத்திருக்க அருளும்படி அன்பும், கருணையுமே வடிவான இறைவன் நடராஜனிடம் வேண்டுவோம்.