மூலம்: மைதிலி ராகவன்
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
புண்ணியம், பாவம் என்பவை virtue & sin எனும் பதங்களுக்கு ஒத்த பதங்களாக கருதப்பட்டு வருகின்றன. இப் பதங்கள் நீதி மற்றும் அநீதியான நடவடிக்கையை குறிக்கின்றன. கூன்று நோக்கினால் புண்ணியம் என்பதற்கு ஒத்த வார்த்தையே ஆங்கில மொழியில் இல்லை!
பாரத நாட்டில் இவ் வார்த்தைகளை சிறுவயது முதலே அறிமுகப்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. "தவறு செய்யாதே பாவம் வரும்", "நற்செயலை புரி புண்ணியம் வரும்" என்று சிறுவயதில் எச்சரிப்பது உண்டு. சென்ற தலைமுறையினர் இவ்வாறான எண்ணங்களை கௌரவித்தது போன்று இத்தலை முறையில் இதை ஏற்றுக் கொள்ள சம்மதிப்பார்கள் என உறுதியாக கூற முடியாது. பாவம் புண்ணியம் என்றால் என்ன எனும் கேள்வியே முதலில் எழுகிறது. தகுந்த பதில் கிடைக்காத போது இவையனைத்தும் மூட நம்பிக்கையாக கருதப்படுகின்றன. ஆகையால் இப் பதங்கள் எதை குறிக்கின்றன எனும் உறுதியான அறிவு அவசியம். இது பரந்த விஷயமாக உள்ள போதும் இங்கு சிலவற்றை மட்டுமே எழுதியுள்ளது.
புண்ணியம் எனும் சொல் ஏற்றத்தை குறிக்கிறது என கூறலாம். இதற்கு நேர்மாறான பாவம் எனும் சொல் வீழ்ச்சி என்பதற்கு ஒத்த வார்த்தை. வீழ்ச்சி- விழுவது என்றால் விழுவது எது? எங்கிருந்து எங்கே விழுகிறது ? பாவம் வருகிறது என்பதற்கு என்ன பொருள்? முதலிய கேள்விகள் எழுகின்றன. உணவு மற்றும் பழக்கங்கள் தவறான முறையில் இருத்தல், அளவுக்கு அதிகமான உணவு உட்கொள்ளல், குளிர்காற்று அல்லது கடும் வெப்பம் முதலியவை ஆரோக்கியத்திற்கு கேடு. இதையே 'முறையான ஆரோக்யத்திலிருந்து வழுவுகிறோம், வீழ்கிறோம" என்று கூறலாம். உடலைப் போன்றே மனமும் தன்னுடைய இடத்திலிருந்து நழுவும் போது அதை வீழ்ச்சி என்று கூறலாம். மனிதனின் வாழ்க்கையில் மனம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. மனம் நற்குணங்களுடன் கூடி உள்ள போது நியாயமான முறையில் வாழ்க்கை நடத்தி அனைவரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் பாத்திரமாகி உலகில் புகழுடன் திகழ்கிறான். மனம் கெடும்போது ஏற்படும் அநீதியான நடவடிக்கைகளால் சமூகத்தை சீர்குலையும் படி செய்வதால் அது கண்டிக்கப்பட வேண்டியது என்பது அனைத்து நாடுகளிலும் ஒப்புக் கொள்ள படுகிறது. மனம் தன்னுடைய நல்ல நிலையிலிருந்து நழுவும் படி செய்யும் தீய செயல்களே பாவம் என்று பெயரிடப்பட்டுள்ளன. பாவம் வரும் என்பது அதன் விளைவாக ஏற்படும் துன்பங்களையே குறிக்கும். அவ்வாறே அதற்கு நேர்மாறாக மனதின் உன்னதமான நிலைக்கு உதவும் செயல்கள் புண்ணிய செயல்கள் என்றும் அவற்றின் பயனான சுகம், இன்பங்களே புண்ணியம் என்றும் வழங்கப்படுகிறது.
இஹ ஜீவனம் மட்டும் அல்லாது இறையுலகையும் அறிந்த பாரத மகரிஷிகள் இவ் விஷயத்தில் கண்ட சிறப்பு அம்சங்களை ஸ்ரீ ரங்க மஹாகுரு அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். பரிசுத்தமான இதயத்தில் மலரும் நற்குணங்கள் ஆத்ம குணங்களாக மாறுபடும் போது மனம் தன்னுள்ளே ஒளி வீசும் பரம் பொருளை காட்டும் திறமை உடையதாகிறது. இங்கனம் மனதை அதன் உன்னதமான நிலையில் காக்க உதவும் விதிமுறைகளை அவர்கள் புண்ணிய -பாவம் எனும் சொற்களாலும் வழங்கியதுண்டு. ஆகையால் இஹ வாழ்க்கைக்காக மட்டுமன்றி ஆன்மீகவாழ்கையின் மேன்மைக்காகவும் பாவங்களிலிருந்து நம்மை விலக்கி புண்ணிய செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது உறுதியாகிறது.
ஞானிகள் பாவத்தை விடுவது மட்டும் அன்றி புண்ணியங்களையும் விட வேண்டும் என கூறுகின்றனர்! ஸ்ரீ சங்கர பகவத் பாதர் "ரத்யாகர்பட விரசித கந்த: புண்யாபுண்ய விவர்சித பந்த:" யோகியானவன் புண்ணிய-பாவம் இரண்டிலிருந்தும் விலகி யோக மார்க்கத்தில் பயணித்து தன்னுள்ளே சுடர்விடும் ஒளியில் (ஜோதியில்) திளைத்து ஆனந்திக்கிறான் என்று பாடியுள்ளார். பாவச் செயல்களை தவிர்த்து நற்செயல்களை மட்டுமே புரியவேண்டும். நாளடைவில் புண்ணிய கர்மங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து அதன்மூலம் புண்ணிய பலனிலிருந்தும் விடுபட வேண்டும். அப்போது யோக மார்க்கம் சுலபமாகி பின்பு இன்பத்தில் திளைப்பதும் நிச்சயம். இதையே கன்னட மொழியில் 'முராரி நின்னதே மூரனே தாரி'(முராரி! மூன்றாவதானதே உன்னடைய வழி) என்று கொண்டாடியுள்ளனர். அந்த மூன்றாவது வழியில் நடக்க முயற்சிப்பது புத்திசாலித்தனமன்றோ.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.