மூலம்: டா. என் எஸ் ஸுரேஷ்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
விருந்து என்றவுடன் நம் மனதிற்கு வருவது நம் நாவிற்கு சுவை கூட்டும் திருமணம், உபநயனம் போன்ற விழாக்களில் படைக்கப்படும் அறுசுவை(இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம், உப்பு) உணவு வகைகள். மேற்சொன்ன சுவை மிகுந்த உணவு புலன்களுக்கு த்ருப்தி, உடல், மனம், அறிவு போன்றவற்றிற்கு ஊட்டமளிப்பதோடல்லாமல் புலன்களுக்கப்பாற்பட்ட நிறைவையும் அளிக்கின்றன. தூய்மையான கபடமற்ற மனதுடன் தயாரித்து பரிமாறப்படும் இத்தகு தூய உணவு உயிரணுக்களை சுத்தம் செய்வதல்லாமல், அறிவை நிலைபடுத்துகிறது. இது தொடரும் போது உலக தளைகளிலிருந்து நீக்கி மூலத்துடன் இணையும் அனுபவத்தை அளிக்கும் என சாந்தோக்ய உபநிடதம் பறைசாற்றுகிறது.
ஒரு மிக சிறந்த இல்லத்தரசியால் அளிக்கப்படும் விருந்தே மூலத்திற்கு அழைத்து செல்லும் தகுதி பெறுவதால் ஸ்ரீராமனின் கதையை சுவைத்துணர்ந்த தவமுனி இல்லறத்தானான வால்மீகி அளிக்கும் விருந்தை குறித்து ஊகிக்க வாய்ப்புண்டு. விருந்தளிப்பவன் தன் விருந்தினருக்கு உயர்ரக உணவளிப்பதுடன் அவருடன் வரும் மற்றவர்க்கும் சேர்த்து விருந்து அளிக்கிறான். அவ்வாறே ஆதிகவியான வால்மீகி ஆத்மனுக்கு ஆனந்தம் அளிப்பதுடன் புலன்களுக்கும் த்ருப்தி அளிக்கிறார். தன் ராமாயணமென்னும் சுவையான விருந்தை ச்ருங்காரம்(அன்பு), நகைப்பு, வியப்பு, கருணை, கோபம், வீரம், அச்சம், வெறுப்பு, சாந்தம்(அமைதி) எனப்படும் ஒன்பது வகை உணர்வுகளுடன் கலந்து அளிக்கிறார்.
எல்லா நதிகளும் இறுதியில் கடலை சென்றடைவதை போல் எல்லா உணர்வுகளும் இறுதியில் அமைதியில் ஒன்றுகின்றன. நம் வணக்கத்திற்குரிய ஸ்ரீரங்கமஹாகுருவின் கண்ணோட்டத்தில் ஒன்பது குணங்களில் சாந்தமே உயர்வானது, அழிவற்றது, சாந்தமானது, தூய்மையானது, மாறாதது, வானத்தைப்போல் களங்கமற்றது. மற்ற குணங்கள் வானத்தில் உலவும் பல வண்ண மேகங்கள் போன்று மாறும் தன்மை கொண்டவை. ஆயின் சாந்த குணம் மேகங்களற்ற தூய வானத்தை போன்றது. அதே போன்று தன் மீது ப்ரதிபலிக்கும் பல வகையான வண்ண சித்திரங்களால் பாதிப்படையாத வெள்ளி திரையைப்போன்று ஆத்மாவும் தன் மீது படியும் ஏனைய குணங்களால் மாறாது தன் உண்மையான நிலையிலேயே நீடிக்கிறது.
நவரஸங்களால் கிட்டும் மனநிறைவு உடலையும் புலன்களையும் மட்டும் தழுவாமல் குணங்களின் கடலில்(ரஸ புருஷனில்) ஆழமாக மூழ்கும்படியும் வழி நடத்த வேண்டும். உபநிடதங்களின் கூற்றான "ரஸோவை ஸ:" என்பது போல் அந்நிலையில் நம்மை நிலைநிறுத்துதல் வேண்டும். அப்போது தான் "எலுமிச்சையை முழுதும் பிழிந்ததுபோல்" எனும் பழமொழியின் படி எல்லா வகையிலும் குணங்களை முழுமையாக அனுபவித்த மனநிறைவு ஏற்படும். மேற்கூறிய உண்மைகளுக்கு இச்சிறந்த கவியின் ராமாயணம் ஒரு உண்மையான சான்றாகும் என்பது ராமாயண இதிஹாஸத்தின் பெருமையை முழுதும் உணர்ந்தவர்களின் கூற்று.
ஸ்ரீ ராமனை நவரச நாயகனாக கொண்டாடும் 'ராம கர்ணாம்ருதம்' ('ச்ருங்காரம் க்ஷிதிநந்தனா விஹரணே') பெயர்பெற்ற ச்லோகமாகும். நவரஸங்களும் எவ்வாறு ஸ்ரீராமனின் வாழ்க்கையில் இடம்பெற்றன என்பதை இந்த ஸ்லோகம் விளக்குகிறது.