மூலம்: சுமுகன்
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
யுத்தத்தில் எதிரியை கொல்லும் இறுதி கட்டம். வீரனானவன் "இதோ பார் என்னால் விடப்படும் இந்த அம்பு உன் உயிரை பறிக்கப் போகிறது. உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்" என்று கூறுகிறான். கூறியபடியே விட்ட பாணம் எதிரியின் உயிரை பறிக்கிறது. வீரனின் கூற்று தன்னுடைய சாமர்த்தியத்தின் மீதான அபார நம்பிக்கையோ அல்லது ஆணவமோ என்று தோன்றும். மகாபாரதம் முதலிய காவியங்களில் பல இடங்களில் இவ்வாறான சொற்களை காண முடியும்.
காலில் முள் குத்தினால் அதை எடுத்து விடுகிறோம். க்யாங்கரின் போன்ற நோய் காலின் விரலில் உண்டாகும் போது அந்த விரலை எடுப்பது நன்று. அதுவே முழு பாதத்திற்கும் காலுக்கும் பரவும் போது உடல் முழுவதும் பரவாமல் காப்பதற்காக அந்த காலையே வெட்டி எடுப்பது புத்திசாலித்தனமான முடிவு. அவ்வாறே அதர்மத்தின் நடை சிறியதாக உள்ள போதே அடக்காவிடில் அது வளர்ந்து மனிதனை முழுமையாக ஆக்ரமித்து தர்மமற்றவனாக செய்து விடும். அவ்வாறு அதர்மியானவன் அரசனானால் குடிகளின் கதி என்னவாகும்? தர்மத்திற்கு அங்கே ஏது இடம்?
பண்டைய காலத்தில் ராஜ்யத்தை விரிவாக்கவோ, தன்னுடைய பலத்தை பறை சாற்றவோ, அல்லது நிதி சேகரிக்கவோ அல்லாது முக்கியமாக தர்மத்தை நிலைநிறுத்த யுத்தம் நடை பெற்ற்றுவந்தது.. தர்மத்திலிருந்து வழுவிய அரசனுடன் தர்மத்தையே குறிக்கோளாக கொண்ட அரசன் போர் புரிந்தான். உடல் முழுவதும் அதர்மமே நிறைந்து உலகிற்கு கேடு விளைவிப்பவனை திருத்துதல் மிகவும் கடினமானது. எவ்விதத்திலும் கேடு விளைவிப்பதிலேயே நோக்கமுள்ளவனாகின் அதனால் இப்பிறவியில் அடையும் பாவத்திற்கு பதிலாக அடுத்த பிறவியிலாயினும் நற்செயல்களை புரிந்து உய்ய வேண்டும் என்பது ஞானிகளின் நோக்கம். முட்கள், "சரணமடைந்தேன், உன் பாதசேவை புரிகிறேன்!" என்றால் அதை அப்படியே விட்டு விடுவது காலுக்கு ஆபத்தானது. ஆகையால் தர்மத்தை நிலைநிறுத்த அதர்மிகளை அழித்தே தீர வேண்டும் என்று ஸ்ரீரங்கமஹாகுரு எச்சரித்தார். ஆகையால் அழித்தல் தவிர்க்க முடியாதது.
உயிர் பிரிவதற்கு முன் ஜீவன் எதை ஆசைப்படுகிறதோ அதுவே அவனுடைய அடுத்த பிறவிக்கு வழி வகுக்கும். ஆகையால் கொல்லுவதற்கு முன் எதிரிக்கு "இந்த பாணத்தினால் உயிர் துறப்பாய்" என எச்சரிக்கை வழங்கி உன் இஷ்டதெய்வத்தை ப்ரார்த்தனை செய்துகொள் என அறிவுறுத்துவது வீரனுக்கு அடையாளம். யுத்தத்தின் விதிமுறையுமாம். அவ்வாறே, பயந்தவரையும், ஆயுதமற்றவரையும், சரணடைந்தவரையும் கொல்லக் கூடாது எனும் யுத்த நியமும் இதையே கூறுகிறது. சிறந்த வில்லாளிகளுக்கு எந்த மர்ம ஸ்தானத்தில் அடித்தால் உயிர் சுலபமாக பிரியும் மற்றும் நற்கதி அடையும் எனும் அறிவு உண்டு. ஆகையினாலேயே பீஷ்மர், அர்ஜுனன் முதலியவர்களின் பாணத்தால் உயிர் பிரிய வேண்டும் என விரும்பியவர்களை மகாபாரதத்தில் காண்கிறோம். இது பாரத தேசத்தின் பல வித்யைகளில் ஒன்றான வில் வித்தையின் சிறப்புமாகும்.
இவ்வாறு துன்புறுத்தலே முக்கியம் என மேலோட்டமாக கண்டாலும் தர்மத்தை காப்பது, ஜீவத்தின் மேல் கருணை ஆகியவை யுத்தத்தின் பிரிவுகள் என அறியும் போது மகரிஷிகள் அளித்துள்ள யுத்த நியமங்களும் மற்றும் தர்மத்தை காக்கும் சிந்தனையும் எத்துணை அழகானது என தோன்றுகிறதல்லவா?
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.