Thursday, October 15, 2020

மானிடருக்கு காட்டரசனின் செய்தி (Manidarukku kattarasanin seydi)

மூலம்: தாரோடி  சுரேஶ்

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)





காட்டின் அரசன் சிங்கம். அதனை  ஒருவரும் முடிசூட்ட வேண்டிய தேவையில்லை. விலங்குகளின் அரசன் என்பது அதனின் பட்டப்பெயர். பிறவியிலேயே அரசனாகும்படி ஆசீர்வதிக்கப்பட்டது. இத்தகைய சிங்கத்தினிடம் ஒரு அசாதாரண இயல்பை காணலாம். வெளியே பயணிக்கும்போது சிறிது தூரம் கடந்ததும்  பின் திரும்பி தான் கடந்து வந்த பாதையை ஆராயும். தன் இலக்கை அடையும் வரை இது தொடரும். இது 'சிம்ஹாவலோகனம்'- சிங்கத்தின் கண்ணோட்டம் எனப்படும். அநேகம் பேர்கள் இவ்வாறு செய்கின்றனர். அதை உள்னோக்குதல் அல்லது சுயவிமர்சனம் என்பர். அது தினந்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் தேவைக்கேற்ப மாறுபடும். அவர்கள் தங்கள் சாதனைகளை ஆராய்ந்து தங்கள் குறிகோளிற்கேற்ப புதிய திட்டங்களை வகுத்துக்கொள்வர்.  பொதுவாக இவை உலக விஷயங்களுக்காக இருக்கும். இதுவே 'சிம்ஹாவலோகனம்' என்று கூறப்படுகிறது.


மனிதனை குறிக்கும்   'மானவன்' என்னும் வடமொழி சொல் 'தொலைநோக்கு உள்ளவன்' எனும்பொருள்படும் 'மன-அவபோதனே' என்னும் இரு சொற்களின் கூட்டாகும். மனிதனின் வாழ்க்கை பௌதிகத்தில்   மட்டும் அடங்காது. மானசிகம், ஆன்மீகம் எனும் வேறு நிலைகளையும் கொண்டது. சொர்க்கம் மற்றும் அதையும் கடந்த பரமபதத்துடன் தொடர்புடையது. வடமொழியில் இவை முறையே "ஆதிபௌதிகம், ஆதிதெய்விகம், ஆத்யாத்மிகம்" - புலன்களுக்குட்பட்ட, மற்றும் (புலன்களுக்கப்பாற்பட்ட)தெய்வீக, ஆன்மீகத்துறை - இவற்றின் தொடர்புடையது. மனிதனின் ஆத்மா இம்மூன்று நிலைகளிலும் சஞ்சரிக்கவல்லது. உலகாயதமான செயல்களில் கிட்டும் இன்பத்தைக்காட்டிலும்  பலநூறுமடங்கு இன்பத்தை மற்ற இரு இடங்களிலும் அடையலாம். இவை  வாழ்கையின் உள்நோக்கும், வாழ்க்கை குறித்த முழுமையான பார்வையும் கொண்டவர்களின் கருத்தாகும். எனவே தான் திரு ஆதிசங்கரர் "என் நாடு மூவுலகிலும் பரவியுள்ளது(ஸ்வதேசோ. புவனத்ரயம்)' என பாடினார். ஏனெனில் நம் புலன்கள் பெரிதும் உலக விஷயங்களில் மட்டுமே ஈடுபடும். நம் கண்ணோட்டமும் குறுகியது. ஸ்தூல உலகிற்கு பின் உள்ள நுட்பமான சக்தியை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. நுட்பத்திற்கும்  பின்னுள்ள அளப்பரிய சக்தியையும் நாம் உணர்வதில்லை. நாம் தவ வாழ்க்கைமுறையை பின்பற்றாததே இதற்கு காரணம். மற்றொரு காரணம் என்னவெனில் நம் வாழ்க்கையின் பின்னிருந்து நடத்தும் சக்தியை குறித்து அறிய நாம் முயல்வதில்லை. சிங்கத்தின் கருத்தூன்றிய பார்வை  நமக்கு பாடம் புகட்டுகிறது.


ஸ்ரீரங்கமஹாகுருவின் கூற்றுப்படி அவதார புருஷர்களுக்கும், சாமானிய மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில்  அவதாரபுருஷர்கள் தங்கள் பிறவியின் குறிக்கோளை மறப்பதில்லை. இயற்கை நியதியின் தத்துவங்களின் மூலம் படிபடிப்படியாக உலகிற்கு வந்து அதே வழியில் திரும்பவும் ஏறிச்செல்கின்றனர். அவர்களின் வரவு மாடிபடியில் இறங்குவது போன்றது. சாமானிய ஜீவன்கள் தங்கள் முன்வினைபடி மேலிருந்து வீழ்ச்சி அடைகின்றன. சிங்கத்தின் பின்திரும்பி  நோக்கும் வழக்கம் நமக்கு உள்நோக்கி மனதை செலுத்தி  மூலத்தை அறியவும் இயற்கையின் நியதியை உணரவும் ஊக்கமளிக்கிறது. உண்மையை கண்டு  கொண்டவர்கள் தங்கள் உள்மனபார்வையை மூலத்தின்வரை செலுத்துகின்றனர். அத்தகையவரிடம் நாம் பயிற்சி பெற வேண்டும். நாம் பரம்பொருளிடமிருந்து தோன்றியவர்கள். ஆயின் நாம் மாயையினால்  சாமான்ய மனிதர்களாக உலகாயதமாகவே வாழ்கின்றோம்.  இத்தகு பின்னணியில் சிங்கத்தின் பின்நோக்கும் பழக்கம்  நம் மனதை உள்முகமாக செலுத்தி எங்கிருந்து வந்தோம் என்பதை நினைவுறுத்தும் செய்தியாக உள்ளது. இது நமது மூலத்திற்கு திரும்பும் பயணத்தில்  உதவுகிறது.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.