Thursday, October 1, 2020

தேவகி பரமானந்தம் ...(The Eternal jou of Devaki)

மூலம்: சுப்ரமண்ய சோமயாஜி
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in) 



கம்ஸனின்  சிறைச்சாலையின் இருளில் ஸ்ரீக்ருஷ்ணரின் அவதாரம் நிகழும் தருணத்தில்  ஒரு ப்ரகாசமான ஒளி தோன்றியது. தன் முழுமையான மகிமையுடன் தேவகி வஸுதேவர் முன் பிறப்பெடுத்தார். வஸுதேவர் அற்புதமான அக்குழந்தையை கண்டு இவ்வாறு வர்ணிக்கிறார் "தாமரை போன்ற கண்கள். நான்கு கரங்களில் முறையே  சங்கு, சக்கரம், கதை, தாமரை, மார்பில் உயர்ந்த ஸ்ரீவத்ஸம் எனும் மரு. ஒளி வீசும் கௌஸ்துபம் எனும் முத்துமாலை, மென்மையான ஆடை, வைர, வைடூரியம் பதிக்கப்பட்ட கிரீடம்,  ஒளிவீசும் காதணியின் ப்ரதிபலிப்பில் ஆதவனின்  தங்க கிரணங்களைப்போல் ஒளிரும் அலைபாயும் கேசம், இடை தங்க ஒட்டியாணத்தாலும், மேற்கை தங்க தோள்வளையாலும், கணுக்கால் தண்டையாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஸ்ரீமத் பாகவதம் வஸுதேவர் கண்ட அற்புத குழந்தையை குறித்து வர்ணிக்கிறது.

தேவகியும் வஸுதேவருடன் அற்புதமான அக்குழந்தையை கண்டாள். வஸுதேவர் விவரித்த அத்துணை அற்புதங்கள் அவள் முன் இருப்பினும் அக்குழந்தையைக் குறித்து இவ்வாறு சிலாகிக்கின்றாள்- "ஓ இறைவா, யோகிகளாலும், முனிவர்களாலும் விவரிக்கப்பட்ட படைப்பிற்கு காரணமான  பரம்பொருள், முக்குணங்களை கடந்த மாறுபாடற்ற ஒளிநிறைந்த சுத்த ஸத்வம். இயல்பிலேயே பாரபட்சமற்ற மஹாவிஷ்ணு." இவ்விரண்டு  கருத்துக்களையும் ஒப்பிட்டு ஸ்ரீரங்கமஹாகுரு அழகாக  கூறியுள்ளார் - "வஸுதேவர் இறைவனின் புறதோற்றத்தை கண்டு மகிழ்ந்தார். தவத்தில் முதிர்ந்த தேவகியின் நயனங்களோ தொடக்கமும் முடிவுமற்ற ஒளிநிறைந்த நிலையான இறைவனின் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தன. எனவேதான்  'தேவகி பரமானந்தம்' தேவகிக்கு அளப்பரிய ஆனந்தத்தை அளித்தவர் என்று அழைக்கப்படுகிறார். ஒளி மிகுந்த வரையறையற்ற  அழிவற்ற அவ்விறைவனின் தோற்றத்தைக் கண்டு அனுபவித்தாள். உடனுக்குடன் உருவமற்ற அத்தோற்றத்தைக் குறித்து  விவரிக்கிறாள்.

நம் நாட்டின் தாய்மார்கள் அத்தகு அனுபவத்தை உணர வேண்டும்" வஸுதேவனின் அனுபவமும் பாராட்டதக்கதே. அது சாமானியருக்கு கிட்டாது. ஆயின் தேவகி உணர்ந்த   எந்த நிலையான ஊற்றிலிருந்து ஏனைய புற தோற்றங்கள் தோன்றினவோ எது இறுதி குறிக்கோளோ அவ்வனுபவத்தை மறக்க இயலாது. முனிவர்களின் கூற்றுப்படி அனைத்து படைப்பிலும் ஸ்தூலம்(கண்ணிற்கு புலப்படுவது), சூட்சுமம்(கண்ணிற்கு புலப்படாதது), பரம்(அனைத்திற்கும் அப்பாற்பட்டது) என்று மூன்று நிலைகள்  உள்ளன. நாம் சாதாரணமாக அழிவதை மட்டுமே கவனிக்கிறோம். எதிரில் ஒரு மரத்தை காண்கிறேன். அதை தாங்கும் வேர்பகுதி நிலத்தினடியில் மறைந்திருக்கும்.  வேரிற்கு  கிடைக்கும்  வலிமையை படைத்தவன் மட்டுமே அறிவான்.  நாம் காணும் திட வடிவம் கண்ணிற்கு புலப்படாத  நுண்ணிய மற்றும் அழிவற்ற சக்தியால் தாங்கப்படுகிறது என்பதை மறவாதிருப்போமாக.  ஸ்ரீக்ருஷ்ணரின் புற தோற்றத்திற்கு பின்னுள்ள  நுண்ணிய அழிவற்ற தோற்றத்தைக் உணர்ந்தால் நம் பிறவி பயனடையும். தேவகி தன் பக்தி, தவம், ஆன்மீகத்தில் ஈடுபாடு முதலியவற்றால் நமக்கு தூண்டுகோலாக விளங்குகிறாள்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.