மூலம்: திரு. வரததேசிகாசார்யார்
தமிழாக்கம் : திருமதி வனஜா)
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
"இறைவன் ஒருவன் பெயர்கள் பல." இக்கருத்தை கன்னட நாட்டின் மகான்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். அதற்கும் முன்பே பற்பல நூற்றாண்டுகளுக்கும் முன்னரே பூவுலகில் பழமையான நூல் என்று எல்லா அறிஞர்களும் ஆமோதிக்கும் "ரிக் வேதம்" "நிலையான உண்மைப் பொருள் ஒன்றே. அதனையே ஆன்றோர்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள்" என இதே கருத்தை முழங்குகிறார்கள். "பல விதமான பெயர்களால் அழைக்கப்படும் அந்த இறைவன் ஒருவனே" என்கிறது யஜுர் வேதம். அவனை சிலர் ப்ரம்மா என்றும், சிலர் மனு என்றும், சிலர் அக்னி எனறும், வேறு சிலர் பரமாத்மாவே என்றும் கூறுவதாக மனுஸ்ம்ருதி கூறுகிறது.
சமய நூல்கள் இவ்வாறு அறிவுரை வழங்கினும் அவைகளை பொருட்படுத்தாமல் 'அந்த கடவுள் பெரியவன், இந்த கடவுள் சிறியவ'னென்று கடவுளின் பெயரை முன்னிட்டே சமரிடுகின்றனர். "நம் கடவுளுக்கும் உங்கள் கடவுளுக்கும் தொலைதூரம். நம் கடவுள் பேரரசர் உங்கள் கடவுள் மாவட்ட அதிகாரி. உங்கள் கடவுள் உயர்ந்தவனாக இருக்கலாம். ஆயினும் எங்கள் கடவுளைக்காட்டிலும் சிறிது குறைந்தவரே" இவ்வாறான வாதங்களால் மனதை குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் புழுதி இறைத்திருக்கின்றனர். அடிதடிகள் அனேகம் நடந்துள்ளன. இப்போதும் நடக்கின்றன.
இவற்றை தவிர்க்க சிலர் "எல்லா மதங்களையும் பிடுங்கி எறிந்து விடலாம்" என்கின்றனர். ஆனால் இதன் மூலம் ப்ரச்னை அதிகமேயாகும். இருக்கும் மதபிரிவுகளுடன் 'எம்மதமும் தேவையில்ல' என்ற பிரிவும் சேர்ந்து கொள்ளும்! அவ்வளவுதான். அப்புதுமதம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதிலும் பிரிவினை ஏற்படும். இதுவேயன்றி ஆன்மீக பெரியோர் சைவம் வைணவம் முதலிய வெவ்வேறு பிரிவுகளை ஏன் ஏற்படுத்தினார்கள் என்பதை ஆராயாமல் கண்ணிற்கு பட்டி கட்டிக்கொண்டு நடந்தது போலாகும்." 'இப்பிரிவுகளை ஏற்படுத்தினவர்கள் ஞானிகளே அல்ல' என்றால் 'அவ்வாறு கூறும் நீ ஞானியோ?' என்ற எதிர்ப்பு எழும்.' சத்தியத்தை கண்டறிந்த ஞானிகள் மட்டுமே இதைபற்றி விளக்கமளிக்க வல்லவர்கள்.
ஒரே இறைவனை பக்தர்கள் வெவ்வேறு பெயர்களில் ஏன் அழைக்கவேண்டும் என்றால் பொருத்தமும் தேவையும் இருந்தால் அவ்வாறே அழைக்க வேண்டி உள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள ஒருவரை ஒருவர் அண்ணன் என்றும், மற்றொருவர் தம்பி என்றும், ஒருவர் மகனென்றும், வேறு சிலர் வைத்தியர், ஆசிரியர் என்றும் அழைக்கின்றனர். ஒருவனுக்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் எனில் அவரவர்களின் உறவு முறை, தொழில், மற்றும் உலக வழக்கத்தை பொருத்து அமைகிறது. இறைவனின் விஷயத்திலும் அவ்வாறே.