Thursday, July 21, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 17 குழந்தை – தங்கம் - மிட்டாய் (Kuzhandai - tangam - mittai)

மூலம்:  திரு. சாயாபதி
தமிழாக்கம் : திருமதி ஜானகி 



தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு  மகிழ்ச்சிக்காகவும், அலங்காரத்திற்காகவும்  தங்க நகைகளை அணிவிப்பது வழக்கம். மோதிரம், வளையல், தோடு முதலியவைகளை சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அணிவிப்பது அழகு. ஆனால் விளையாட்டு பருவ குழந்தைகள் அணிந்திருப்பதை கண்டு அதை அபகரிக்கும் வஞ்சகர்களும் உண்டு. சிலர் கொடூரமான முறைகளை கைகொண்டால் பலர் அன்பாக வஞ்சிக்கிறார்கள். 


       சிறுவர்கள் விரும்பும் விளையாட்டு பொருட்கள், மிட்டாய் முதலிய இனிப்புகளை கொடுத்து அணிகலன்களை அபகரிக்கும் கதைகளை கேட்கிறோம். அவ்வாறு தங்கள் தோடு, மோதிரங்களை கொடுத்து மிட்டாய் போன்ற இனிப்புகளை பெற்ற குழந்தைகள் தாம் அதிக லாபத்தை அடைந்தோம் என உற்சாகமாக கூறுவதும் உண்டு.


       தங்கத்தின் விலை மதிப்பறியாத மழலைகள். மிட்டாயின் சுவையே அவர்களுக்கு தங்கத்தை விட இனியது. தங்கத்தின் விலை அறியமுடியாமல் மோசம் போய் மிட்டாயின் விலையே அதிகமென மகிழ்கின்றன அக்குழந்தைகள்.


            அவ்வாறே இந்திரியங்களின் ஈர்ப்புக்கு உட்பட்ட  ஜீவன் அதை காட்டிலும் மேலான இன்சுவையை அறிவதில்லை. அதையும் மீறிய சுகம், மனநிறைவு உண்டென்று ஆன்றோர் உரைத்திடினும் மனம் அதை நாடுவதில்லை.


             இந்திரியங்கள் எனும் திருடர்கள் தங்கள் கீழ்தரமான சுவையை காட்டி ஜீவன் அச்சுவைகளுக்கும்  மூலமான, தங்கமயமான ஆத்மனிடம் செல்லாமல் தடுத்து விடுகின்றன. ஜீவன் இந்திரியங்களின் சுவைக்கு தோற்காமல் மனம் பின்நோக்கி மூலத்தில் லயித்து சுவர்ண(தங்க) மயமான ஜோதியை கண்டதும்  இந்த்திரியசுவை  அற்பமானது என அறிகிறது. அப்போது அச்சுவைக்கு ஆளாகி தன் வாழ்வின் தங்கத்தை பறிகொடுப்பதில்லை.


         குழந்தை மிட்டாய்க்கு மயங்கி  தங்கத்தை  இழப்பதுபோல்  புலன்களின் வயப்பட்ட மனிதன் தன் வாழ்வின் இணையற்ற செல்வத்தை இழக்கிறான்.  வாழ்கையின் உண்மையான மதிப்பை உணரும் பொழுது தான் இந்திரியங்களின் கீழ்த்தரமான சுவைகளுக்கு ஜீவன் ஆளாக மாட்டான்.