Thursday, August 5, 2021

செல்வம் விரும்பதக்கதா அல்லது விலக்கதக்கதா? (selvam virumbattakkada? vilakkattakkada?)

 மூலம்: கெ.எஸ். ராஜகோபாலன்

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in) 

  



"அர்த்தம்" எனும் வடமொழி சொல் அநேக பொருள்களை

குறிக்கும். உலக இன்பங்களை அடைய கருவியாக உள்ள செல்வம் என்பது அவற்றுள் ஒன்றாகும்.

         வடமொழியில் ஒரு புகழ் பெற்ற சொற்றொடர் உண்டு. "தன மூலம் இதம் ஜகத்". (உலகத்திலுள்ள அனைத்திற்கும் பணமே அடிப்படை). செல்வந்தர்களின் எங்கும் பரவும் செல்வாக்கை காண்கையில் செல்வத்தை உயர்த்தி கொண்டாடும் எண்ணற்ற மேற்கோள்கள் உள்ளன. மற்றொருபுறம் அனேக ஞானிகளும் வேதாந்திகளும் செல்வம் ஈட்டுவதில் உள்ள துன்பங்களை அறிந்து அதனை துறக்கின்றனர். செல்வத்தை கண்டிக்கும் அநேக பழமொழிகளும் உள்ளன. ஒரு சாமானிய மனிதன் செல்வத்தைக் குறித்த இத்தகைய எதிர்மறையான கூற்றுகளால் குழப்பமடைகிறான். ஒரு புறம் புகழ்ச்சி மறுபுறம் ஏளனம்! எனவே செல்வம் முக்கியமா அல்லவா என்பது குறித்த ஆராய்ச்சி தேவைப்படுகிறது.


         ஸ்ரீ சங்கரபகவத்பாதர் தம் பஜகோவிந்த ஸ்தோத்திரத்த்தில் அக்கறையுடன் வினவுகிறார் "ஏன் செல்வத்தை குறித்து அதிகம் கவலைப்படுகிறாய்?"(காதே காந்தா தனகத சிந்தா) அதே பாடலில் எச்சரிக்கிறார். "செல்வம் பேரழிவை ஏற்படுத்துவது திண்ணம். ஐயத்திற்கிடமின்றி செல்வம் சிறிதளவும் மகிழ்ச்சி அளிப்பதில்லை. ஒரு செல்வந்தனுக்கு  தன் சொந்த மகனாலேயே ஆபத்து. இது உலகெங்குமுள்ள உண்மை." செல்வத்தின் பின் செல்பவர்களை எச்சரித்தபின் ஆசாரியர் சங்கரர் செல்வத்தை குறித்த தம் கருத்தையும் தெளிவாக உரைக்கின்றார். இத்தகைய உதாரணங்களை கொண்டு ஸ்ரீ சங்கர பகவத்பாதர் செல்வத்திற்கு எதிரானவர் என்று கருதலாம்.


      ஸ்ரீ ரங்கமஹாகுரு இதனை தெளிவுபடுத்தி இவ்வாறு விவரிக்கிறார்:

ஸ்ரீ சங்கரர் உலக வாழ்க்கை குறித்து நம்மை அக்கறையின்றியோ அல்லது அதனை நிராகரிக்கவோ அறிவுறுத்தவில்லை. உலகில் வாழுங்கள். வாழ்வாதாரத்தின்பொருட்டு பொருளீட்டுவது துன்பம் அளிக்காது. வாழ்க்கைக்கு செல்வம் தேவை ஆனால் பணத்திற்காக ஏங்கக்கூடாது.  மரண தறுவாயில் ஏற்படும் தாகம் தணிக்கவே முடியாதது. பணத்திற்கான தாகம் அவ்வாறு தணிக்க இயலாததாகக்கூடாது. சரியான அணுகுமுறை யாதெனில் "எனக்கு தாகமாக இருக்கிறது. ஒரு குவளை நீர் அருந்துகிறேன். என் தாகம் இப்போது தணிந்தது" என்பது நன்று. 


பணத்திற்காகவும் இதே போன்ற அணுகுமுறை அவசியம். வாழ்வாதாரத்திற்காக தேர்வு செய்துள்ள தொழிலில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு மகிழ்ச்சியும், நிறைவும் அடைதல் வேண்டும். இவ்வாறு ஸ்ரீ சங்கரர் உலக வாழ்க்கையை விலக்கவில்லை. செல்வம் ஈட்டுதலில் ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என் எச்சரித்துள்ளார்.


             பண்டைய முனிவர்கள் எவருமே செல்வமனைத்தையும் தானமாக அளிக்க வேண்டுமென கூறவில்லை. மாறாக சிறிது பணத்தை தன் குடும்பம் மற்றும் தன்னை சார்ந்தவர்களுக்கும் , சிறிதளவு தான் வாழும் சமூகத்திற்கும், சிறிதளவு இறைபணிக்கும் செலவிடல் வேண்டும். அனைத்து செல்வத்தையும் சுயநலத்திற்காக உபயோகித்தல் கூடாது என அறிவுறுத்தினர். ஸ்ரீ ரங்கமஹாகுரு தாராளமாக தன்னை சுற்றியுள்ள விலங்குகளையும் தவிர்க்காமல் செலவழித்ததை உறவினர்களும், சீடர்களும்கண்டுள்ளனர். இது அத்தகைய ஒரு சிறு நிகழ்வு.


          ஒரு முறை மஹாகுரு தன் சுற்றத்தாருடன் காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கபட்டினம் எனும் புனித ஸ்தலத்திற்கு சென்றார். முதலில் மீன்களுக்கு உணவளித்து பின்னரே தாம் உணவருந்த சென்றார். (யோகேச்வர ஸ்ரீ ரங்கா எனும் புத்தகம் 319ம்பக்கத்தில் உள்ள கட்டுரையிலிருந்து). இவ்வாறு செல்வத்தை செலவிடும்போது நம்மை சுற்றியுள்ள ப்ராணிகளையும் மனதில் கொண்டு செயல்படவேண்டும்.


           பணம் சம்பாதிப்பதை குறித்து பரிகசிப்பதற்கு பதில்

உயர்ந்த நோக்கத்திற்காக சம்பாதிக்க வேண்டுமென மஹாகுரு ஊக்கப்படுத்த்தினார். .ஸ்ரீ ரங்க வசனாம்ருதம்(vol-1 page)


59 என்னும் புத்தகத்திலிருந்து ஒரு அழகிய மேற்கோள். அர்த்தம் (செல்வம்) அனர்த்தத்திற்கு (அழிவுவிற்கு) கொண்டு செல்லாமல் பரமார்த்தத்திற்கு (முக்தி)கொண்டு சென்று அர்த்தமுள்ளமாவதாக இருப்பதானால்  ஒவ்வொரு கணமும் பொருளீட்ட முயற்சி செய்யலாம். நல்ல முறையில் சம்பாதித்து மேற்சொன்ன வண்ணம் நியாயமாக வினியோகிக்கபடுமாயின் ஒரு மனிதனின் வாழ்வு சரியாக/அர்த்தமுள்ளதாக  நிறைவுறும்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.