Thursday, August 19, 2021

அனைத்திலும் சமநோக்கு (Anaittilum samanokku)

மூலம்: கே. எஸ். ராஜகோபாலன் 

தமிழாக்கம் : வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



வித்யாவினயசம்பன்னே   பிராம்ஹணே  கவி  ஹஸ்தினி  

சுனிசைவ ச்வபாகேச பண்டிதா: சம தர்சின: (பகவத்கீதை 5-18) 


  "கற்றறிந்தவர்கள் இவையனைத்தையும் சமமாக கருதுகின்றனர் - கற்றறிந்த அந்தணன்,  ஒரு பசு, ஒரு யானை,  ஒரு நாய், நாயை உண்பவன்" இதுவே மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருளாகும்.


இக்கருத்து அடிக்கடி எழுத்தாளர்களாலும் பேச்சாளர்களாலும் மேற்கோள் காட்டப்படுகிறது

         

 இந்த செய்யுள் பரந்த மனப்பான்மையை  சித்திரிப்பதை  யாராகிலும் உணரலாம். இந்தியாவின் அரசியலமைப்பு அனைவரும் அனைத்திலும் சமம் என தெளிவாக கூறுகிறது. இதனை மீறுபவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தண்டனைக்குரியவர்.  நம்  பாரம்பரியபடி  பகவத்கீதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஒப்பிடுகையில் நம் அரசியலமைப்பு சமீப காலத்தில் உருவானது. எனவே ஒவ்வொரு இந்தியனும் நம் மூதாதையர்களின் பெருந்தன்மையான அணுகுமுறை குறித்து  கர்வமடைதல் வேண்டும். எனினும் ஒரு நல்ல விமர்சகர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயுள்ள உருவமைப்பு, அறிவாற்றல், உணவு பழக்கம் இவற்றிலுள்ள வேற்றுமையை எண்ணி அனைத்தும் எவ்வாறு  சமமாகும்  என வியக்கிறான்.


முற்காலத்திலும், இக்காலத்திலும்  அநேகர் செய்யுளின் விரிவுறையின் மூலம் தம் அறிவாற்றலை   வெளிப்படுத்த முயன்றுள்ளனர். இதன்   உட்பொருளை  புரிந்து கொண்டால்  சில விமர்சகர்கள் நம்மை தவறாக வழி நடத்துவதை உணரலாம்.  ஒரு அறிஞனுக்கு  புல்லை உணவாக கொடுத்தால், தான் சமநோக்குடையவனாக இருக்க வேண்டும் என்பதற்காக புல் மேய்வானோ? (சம தர்சின் )

மேலும் சமம் எனும் சொல் எவ்விடத்திலும் ஒரே பொருளை குறிப்பதில்லை. 


உதாரணமாக ஸ்ரீராமனின் அவயவங்களை குறிக்கையில் 'சம விபக்தாங்கன்(sama vibhakthanga)' என கூறப்படுகிறது. இங்கு  சமம் என்ற சொல்லிற்கு  அவரின் நாசியும் கையும் ஒரே அளவில் உள்ளன என்று பொருளல்ல.   சமவிபக்தாங்கா( sama vibhakthanga )எனில் எல்லா அவயவங்களும் குறிப்பிட்ட சரியான விகிதத்தில் அமைந்திருந்தன என பொருள்படும். 

        

ஒருவரின்  அறிக்கையை/கூற்றை விளக்குவதற்கு முன் அவர் சூழ்நிலையை அறிய வேண்டும். நாம் ஆராய முற்பட்டுள்ள அறிக்கையான பகவத்கீதை வசனங்களாக உள்ளது. அதற்கு முற்பட்ட மற்றும் பின்னுள்ள வசனத்தின் பொருளை அறிந்தால் மட்டுமே அதன் பொருளை முற்றும் அறிய இயலும். அடுத்த அடியிலேயே பகவான் கிருஷ்ணன் கூறுகிறார் ப்ரம்மம்  குற்றமற்றவர்,  மற்றும் சமமானவர்(நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம). நாம் ஆறாயும் கூற்றின் பொருளை எளிதில்  விளக்குகிறது  இது. இந்த சமமான பிரம்மத்தையே  உண்மையில் ஒரு அறிஞன் அனைத்து உயிரினங்களிலும் காண்கிறான். இவ்வழகிய எளிய உவமையை தெளிவுபடுத்துகையில் ஸ்ரீரங்க மஹாகுரு மேலும் ஒரு எளிய சோதனை மூலம் விவரிக்கிறார். மேற்கூறிய செய்யுளில்  கூறப்பட்ட வண்ணம்  ஒரு அந்தணன், ஒரு பசு, ஒரு யானை, ஒரு நாய், நாயை உண்பவன் இவ்வனைத்தையும் வரைந்தார். பின்னர் அவர் கூடியிருந்த சீடர்களிடம் அந்த சித்திரங்களில் ஏதாவது பொதுவாக இருப்பின் கண்டறியும்படி வினவினார். அவர்களால் ஒன்றும் கண்டறிய இயலவில்லை. அப்போது அவர் எல்லா சித்திரங்களிலும் தாம் இட்ட ஒரு சிறு புள்ளியை  சீடர்களின் கவனத்திற்கு கொணர்ந்து ஒரு புள்ளி அனைத்திலும் பொதுவாக உள்ளதுபோல் ஒரு அறிஞன் அனைத்திலும் பொதுவாக உள்ள ப்ரஹ்மத்தை கண்டறிகிறான்  என விளக்க முற்பட்டார்.

          

இங்கு பண்டிதன்(அறிஞன்) எனும் சொல்  படித்தவன் என்று குறுகிய பொருள்படாது. "பண்டா" என்றால் தன்னை(ப்ரஹ்மத்தை) அறிந்தவன் எனும் பொருள்படும். எனவே யாரொருவர் பரம்பொருளை உணர்ந்தவரோ அவரே பண்டிதர்.

        

பலவிதமான தங்கஅணிகலன்களில் தங்கத்தை பொதுவாக காண்பது போல் உண்மையான அறிஞன் பரம்பொருளை பொதுவாக அனைத்து படைப்பிலும் காண்கிறான். 


நம் நாட்டின் மக்களிடையே வேறுபாடிருக்கக்கூடாது என்பதற்காக உள்ளது  நம்  அரசியலமைப்பு. ஆயின் பகவத்கீதையோ மிக ஆழ்ந்த சிந்தனையுடன் வெளிப்பட்டுள்ளது. 


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.