மூலம்: நரசிம்ஹ பட்டா
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
நம் பாரத கலாசாரத்தில் இயற்கைக்கு, அதாவது படைப்பின் பெண்மை பகுதிக்கு, உயர்ந்த இடம் உண்டு. இறைவன் தன்னை விரிவாக்கிக்கொள்ள விரும்பியபோது தானே இரு பிரிவானான். ஒன்று படைப்பில் உறையும் சக்தி (ஆண் தன்மையுடையவன்), மற்றது அவ்வுறையும் சக்தியை விரிவாக்கி வெளிப்படுத்துவது(ப்ரக்ருதி- பெண்மை). புருஷன் ப்ரக்ருதியின்றி தன்னை வெளிப்படுத்த இயலாது. வெளிப்பாடு அனேக நிலைகளை கொண்டது. முதன்மையானது கன்னி(கன்யா) என அழைக்கப்படும். இங்கு நாம் நம் கலாசாரத்தில் 'கன்யா' என்பதை குறித்த சில விவரங்களை ஆராயலாம்.
வடமொழியில் (சம்ஸ்க்ருதத்தில்) கன்யா எனும் சொல் ப்ரகாசமான, கவர்ச்சிகரமான, ஒளிமிகுந்த என பொருள்படும் - 'கனி' எனும் மூலச்சொல்லிலிருந்து வந்தது. அச்சொல்லின் முழு பொருள் அதனுடன் இணையும் சொல்லை பொறுத்தே அமையும். உதாரணமாக "யக்" என்ற சொல்லை இணைத்தால் (கன்யகா)"குமாரி" திருமணமாகாத இளம்கன்னி எனும் சொல் கிடைக்கும். பாணினி இலக்கணத்தின் கூற்றுப்படி கன்யா என்றால் ஒளிமிகுந்தவள் என பொருள்படும். கன்யா என்பது ஒரு ராசியின் பெயரும், மருந்தின் பெயரும் ஆகும். இக்கட்டுரையில் இச்சொல் திருமணமான அல்லது ஆகாத ஒளிரும் பெண் எனும் பொருளில் வருகின்றது.
வடமொழியில் உள்ள ஒரு பாடல் என்ன கூறுகிறதெனில் "அதிகாலையில் அஹல்யா, த்ரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி எனும் இவ்வைந்து கன்னியரையும் நினைப்பது கொடிய பாபத்தையும் போக்கும்." இவ்வைவரிடமும் உள்ள சிறப்பு யாது? அவர்கள் ஏன் நமக்கு உயரிய சிறப்புடைய முன்னுதாரணம்? தலைசிறந்த யோகியும் "அஷ்டாங்கயோக விக்ஞான மந்திரத்தின்" தலையாய உறுப்பினருமான ஸ்ரீ ஸ்ரீரங்கமஹாகுரு இதனை இவ்வாறு விளக்குகிறார் - பொதுவாக பெண்களின் காந்தி திருமணத்திற்கு பின் குன்றும். ஆனால் சிறப்பான இப்பெண்களின் விஷயத்திலோ அது நாள்தோறும் வளர்ந்து வந்தது. அப்பேர்பட்டவர்களின் நினைவு ஆத்ம மார்க்கத்திற்கு ஒளி கூட்டும். எனவே குளிர்ச்சியான காலை பொழுதில் அவர்களை நினைவு கூர்தல் அவசியம்.
நம் நாட்டில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் திருமணங்களில் தெளிவாக விளங்கும். மணமகளின் கரத்தை மணமகனிடம் ஒப்படைக்கையில் தந்தை கூறும் மந்திரம் வருமாறு - "ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் உருவகத்தில்(அம்சமாக) உள்ள இக்கன்னியை (என் மகளை) ஸ்ரீ மஹா விஷ்ணுவின் உருவகத்தில்(அம்சமாக) உள்ள வரனிடம் (மணமகனிடம்) ஒப்படைக்கிறேன்." பெண்களையும். மனைவிமார்களையும் லக்ஷ்மி, ஸரஸ்வதி, பார்வதி எனும் இறை வடிவாகவே காண்கிறோம். 'எங்கு பெண்கள் வணங்கப்படுகின்றனரோ அங்கு தெய்வங்கள் மகிழ்வோடு நர்த்திக்கின்றன'' என கூறப்படுகின்றது. எனவேதான் நம் சமூகத்தில் முதலில் தாயை வணங்கும்படி அறிவுருத்தப்படுகிறது. நாம் "லஷ்மி-நாராயணன், பார்வதி-பரமேச்வரன், ஸரஸ்வதி-ப்ரம்மா, அருந்ததி-வஸிஷ்டர் என்றே வணங்குகிறோம். பெண்களுக்கு நம் சமூகத்தில் இத்துணை உயரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது ஏனெனில் நாம் அவர்களின் அமைதியான ஒளியின்மூலம் அற்புதமான ஆத்ம மார்க்கத்திற்கு உந்தப்படுகின்றோம்.