மூலம்: சுப்ரமண்ய சோமயாஜி
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
இது புராணத்தில் கூறப்பட்ட ஒரு கதை. யயாதி என்பவன் நஹுஷன் என்ற புகழ்பெற்ற ஒரு அரசனின் மகன். கசதேவன் என்பவன் தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதியின் மகன். இருவரும் ஒன்றாக படித்த நண்பர்கள். யயாதியின் மனம் புலனின்பங்களின்பால் சென்றது. ஆனால் கசனோ புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மானந்தத்தின்பால் மனதை செலுத்தினான். ஒருமுறை நண்பர்களிருவரும் அங்கிரஸ் எனும் சிறந்த முனிவரின் பர்ணசாலையில் உலவி வந்தனர். இளம்காற்று வீசுகையில் ஒரு மரத்திலிருந்து பழுத்த இலை ஒன்று நிலத்தை நோக்கி தவழ்ந்தது. கசன் அதனை கையில் எடுத்து வியப்புடன் கூறினான் "நேர்த்தியாக வாழ்ந்தவனே உன் முடிவை குறித்து நீ புலம்ப வேண்டிய அவசியமில்லை. நீ வாழும்போது மரத்திற்கு அழகூட்டினாய். அனேகருக்கு நிழலளித்தாய். வலிமை குன்றியதும் உன் இடத்தை இளையவர்களுக்கு விட்டுக்கொடுத்தாய். எத்தகு பயனுள்ள பற்றற்ற வாழ்வு உன்னுடையது! சொர்க்கத்தில் உனக்கு இடம் உறுதியானது." வாழ்க்கை குறித்து எத்தகு கண்ணோட்டம்! தினந்தோறும் இலைகள் உதிர்வதை எத்துணைபேர் காண்பதில்லை?! எத்துணைபேர் அதை கவனித்து அதன்பின் மறைந்துள்ள பொருள் குறித்து ஆராய்கிறார்கள்? அவ்விலை யயாதியின்
கண்முன்னும் விழவில்லையா? ஆயின் அவன் எண்ணங்கள் அத்துணை உயர்ந்தவையல்ல. மரத்திலிருந்து இலை உதிரும் நிகழ்வு நம் வாழ்க்கை பயனுள்ளதாகவும், பற்றற்றதாகவும் திகழ வேண்டும் எனும் உந்துதல் தருமன்றோ?
நிலையற்ற நம் உடலில் குழந்தைபருவம், சிறுவயது, இளமை, முதுமை
எனும் அனைத்து பருவங்களும் இயற்கையாகவே தோன்றி மறைவது தொடர்ந்து நடைபெறுகிறது. இத்தகைய உடலினுள் அழிவற்று விளங்கும் ஒளிவெள்ளம் ஒன்றுண்டு. இவ்வுண்மையை உடல் அழியுமுன்பே அனுபவத்தின்மூலம் கண்டறிந்தால் நிலையான இன்பத்தையும், நிம்மதியையும் அடையலாம். இவ்வாறன்றி நம் எண்ணங்களை நிலையற்ற இவ்வுடலை குறித்து மட்டுமே செலுத்தினால் துன்பத்தை தவிர்க்க இயலாது. அதனால் நம் உடலை கவனிக்காதிருக்கவேண்டுமென்பது பொருளல்ல. நாம் அந்த இலையைப்போல் மகிழ்ச்சியாக வாழ்ந்து நம் பங்கை நிறைவு செய்ய வேண்டும். தற்காலிகமானவற்றிற்கும் நிரந்தரமானவற்றிற்கும் உள்ள வேற்றுமையை கூர்ந்து நோக்கி அழிவற்றதை நோக்கி விரைய தற்காலிகமானவற்றை பயன்படுத்திக்கொள்ளும் முனிவர்களின் கலையை கற்றறிந்தால் நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.
இலை உதிர்வது போன்ற அனேக நிகழ்வுகள் இயற்கையில் அன்றாடம் நடக்கின்றன. அவற்றிலிருந்து பாடம் கற்று நம் வாழ்வை ஒளிமயமாக்க பொறுமையும், பகுத்தறிவும் தேவை. இவ்வாறு இயற்கையின் நிகழ்வுகளனைத்தையும் தம் உள்ஒளியின் மூலம் அளந்து மகிழ்வும் மனநிறைவும் கொண்ட வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்ட தவசீலர்களின் நாடு நம் நாடு.
நம் நாட்டின் கலாச்சாரம் வாழ்க்கையை பற்றிய இத்தகு சிறந்த கண்ணோட்டங்களால் நிறைந்தள்ளது. ஒருவர் ஸ்ரீரங்கமஹாகுருவை "வாழ்விற்கு ஏதேனும் பொருள் உண்டா?" என வினவிய போது "வாழ்க்கையில் பொருள் மட்டுமின்றி பரம்பொருளும் உண்டு" என்று பதிலளித்தார். வாழ்கையின் பின் ஒளிரும் சக்தியையும், அதனின்று விரிந்து பரந்த இவ்வாழ்கையையும் நோக்கும் கண்ணோட்டம் உள்ளவர்களிடமிருந்தே இத்தகைய கருத்துக்கள் தோன்றும்.
முனிவர்களின் சமூகத்தில் இலை உதிர்வது போன்ற நிகழ்வுகளை கூர்ந்து நோக்கி இயற்கையில் பொதிந்துள்ள ஆழ்ந்த உண்மைகளை கண்டறிந்த மகான்கள் அனேகர் உண்டு. இத்தகு முனிவர்கள் காட்டிய உயர்ந்த எண்ணங்களின் ஒளியில் நம் வாழ்க்கை பயணம் நடக்கவேண்டுமன்றோ?
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.