Thursday, November 5, 2020

வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக அருள்பாலித்தான் (Vamananaga vandu trivikramanagi arulpalittan)

மூலம்: மைதிலி ராகவன்

தமிழாக்கம்: ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பெயர்பெற்ற பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் பல புராணங்களில் இடம் பெற்றுள்ளது.


         பாகவதர்களில் சிறந்த ப்ரஹ்லாதனின் பேரனும்அசுரகுல அரசனுமான பலிசக்ரவர்த்தி என்பவன் (இந்த்ரசேன மஹாராஜன்) மகாத்மா,  பாகவதன் மற்றும் விஷ்ணு பக்தன். பரமபாகவதர்களின் பட்டியலில் இடம் பெற்றவன்.  பலி சுக்ராசாரியர் செய்வித்த யாகத்தின் பயனாக அடைந்த வரம் மற்றும்  அருளினால் இந்த்ரனையும் ஜெயித்து தேவலோகத்திலும் தன் அதிகாரத்தை செலுத்த தொடங்கினான். தேவமாதா அதிதியின் வேண்டுதலுக்கு இணங்கி ஸ்ரீ ஹரி ஆவணி(ச்ராவண) மாதம் ச்ரவண (திருவோண) நட்சத்திரம் கூடிய துவாதசியன்று  அவளுக்கு மகனாக பிறந்தான். சங்குசக்கர கதையுடன் அவளுக்கு காட்சி அளித்து உடனேயே குள்ளமான (வாமன) உருவம் கொண்டான். அச்சமயத்தில் பலிசக்ரவர்த்தி ஓர் யாகம் செய்து கொண்டிருந்தான். அனைவராலும் போற்றப்பட்ட அந்த வாமனப்ரஹ்மசாரி மிக்க காந்தியுடன் விளங்கி குடையை பிடித்தபடி பலியின் யாகமண்டபத்திற்கு வந்தான்.


           வாமனனை கண்ட ப்ருகு வம்ச ரிஷிகளனைவரும் பட்டென எழுந்து நின்றனர். அவனுடைய தேஜஸ்(காந்தி) அனைவரையும் எழச் செய்தது. வந்திருப்பது மகாவிஷ்ணு என அறிந்து சுக்ராச்சாரியார் அரசனை எச்சரித்தார். ஆயினும் பக்தர்களில் சிறந்த பலி "யாருக்கு தானம் வழங்க வேண்டுமாயினும் விஷ்ணுவின் ஸ்மரணையுடனே தரப்பட வேண்டும் என்றிருக்கையில் அம்மகாவிஷ்ணுவே நேரில் வந்து யாசிக்கும் போது கொடாதிருப்பது எவ்வாறு முறையாகும்?" என்றான். தானத்தில் சிறந்த பலிசக்ரவர்த்தி இன்முகத்துடன் வாமனனை வரவேற்று "தங்களுக்கு என்னால் ஆகவேண்டியது என்ன?" என வினவினான்.


                 வாமனன் தன்னுடைய கால்களினால் மூன்று அடி இடம் தர வேண்டுமென்று யாசித்ததும் பலிக்கு ஆணவம் தலைஎடுத்தது. "வேண்டுபவர்க்கு பொன்பொருள் என விலை உயர்ந்தவை அனைத்தையும் வழங்கும் என்னிடம் வந்து சிறுபிள்ளைத்தனமான இந்த வேண்டுதல் ஏன்?" என்றான். ஆனால் வாமனன் தன் விருப்பத்தையே வலியுறுத்தியதால் பலி அதற்கு ஒப்புதல் அளித்தான்.


        அவ்வாறே சங்கல்பித்து தானம் ஈன்றவுடன் அனைவரும் பார்த்திருக்க தன்னுடைய எங்கும் நிறைந்த த்ரிவிக்ரம உருவத்தை அடைந்தான் வாமனன். ஓர் அடியினால் மண்ணுலகையும் மற்றொன்றால் அந்தரிக்ஷத்தையும், வானுலகையும் அளந்து மூன்றாவது அடிக்கு இடமெங்கே என பலியை வினவினான். சத்யம் தவறாத பலி மூன்றாவது அடியை தன்தலை மேல் வைத்து அளக்கும்படி கூறினான். மகாவிஷ்ணு தன் திருவடியை அவன் முடியில் வைத்து அருள்பாலித்து சுதலலோகத்த்திற்கு அழுத்தினான்.


   அவ்விடம் இந்த்ரனுடைய போகங்களையும் மீறிய சுகங்களை அனுபவித்து தன் உற்றாருடன் வாழும்படி செய்ததல்லாமல் அவனுடைய காவலுக்கு தானே கதாபாணியாக அவன் வாயிலில் நின்றான்பலியை அசுர சக்திகள் தாக்காதவாறு சுதர்சன சக்கரத்தையும் நியமித்தான். இந்த்ரபதவியில் அவனுக்கிருந்த  விருப்பத்தால் அடுத்து வரும் சாவர்ணிக மன்வந்திரத்தில் அதை அடைந்து இறுதியில் தன்னையே வந்தடையும் படி அருள்பாலித்தான்.

 

கதையின் தத்துவம்

           இக்கதையை பற்றி ஸ்ரீரங்கமஹாகுரு அளித்த அற்புதமான விளக்கம் - இது இதிகாச கதையல்ல. தத்துவங்கள் அடங்கியதாகவும், தியானத்தில் அந்தரங்கத்தில் காணக் கிடைக்கும் அநுபவம் ஆகும். புராணங்களில் சரித்திரக்கதைகளுடன் புரியாத சில தத்துவங்களை சுலபமாக அறிவுறுத்த கதையாக  கூறுவதுண்டு. வாமனாவதாரமும் அப்பேர்பட்ட ஒன்று.


               தேவதைகள்-அசுரர்கள் இருவரும் நமக்குள்ளே உறையும் சக்திகள். நம்மை அறநெறியில் வழி நடத்த இறைவனால் நியமிக்கப்பட்ட சக்திகளே தேவதைகள். ரஜஸ் மற்றும் தமோ குணங்களுடன் கூடிய அசுரசக்தி நம்மை அதர்மத்தில் இழுத்துச் செல்லும். இயற்கையில் இவ்விரு சக்திகளுக்கும் எப்போதும் போராட்டம்  உண்டு. சில சமயங்களில் தேவதைகளுக்கும், சில சமயங்களில் அசுரர்களுக்கும் வெற்றி உண்டு. சிற்சில சமயங்களில் அவர்கள் சமாதானம் செய்து கொள்வதும் உண்டு. தேவதைகள் நம்மை மேல் நோக்கி இழுத்தால் அசுரர்கள் கீழ்நோக்கி இழுக்கின்றனர். இவ்விருவரின் நடுவில் இதயத்தில் கட்டைவிரல்கணுவளவு விளங்குபவனே வாமனன் என ச்ருதிகள் உரைக்கின்றன.


           அசுரசக்திகள் நம்மை முழுமையாக ஆக்ரமிக்கும் போது அதிலிருந்து விடுபட நாம் இதயத்தில் ஒளிவிடும் வாமனனை சரணடைந்து முழுமையாக நம்மை அவனுக்குப் அர்பணித்தால் அசுரசக்தியை பாதாளத்தில் தள்ளி தானே நம்மில் முழுமையாக வியாபித்து த்ரிவிக்ரம விஷ்ணுவாகி(விஷ்ணு என்பது வியாபித்து உள்ளவன் எனும் பொருள்) அருள்புரிகிறான். இவன் வியாபித்துள்ள உலகமென்றால் முதுகுத்தண்டில் உள்ள யோகமார்க்கம். மூலாதாரத்திலிருந்து தலையில் உள்ள ப்ரஹ்மரந்த்ரம் வரை முழுமையாக வியாபித்திருக்கும் போது பலியைப் போன்று தானாகவே தலை தாழ்ந்து வணங்கும். அப்போது தலையிலிருந்து அமுதம் போன்று  பெருகும் உள்அனுபவத்தையே "விஷ்ணு பாதத்தில் உண்டாகும் கங்கை" என ரிஷிகள் வழங்குகிறார்கள்.


            ஆணவம் தலை தூக்கி நிற்கும் போது இறைவனை காண இயலாது. ஆனால் அவனை சரணடைந்தால் பலியை அனுக்ரஹித்ததுபோல் நம் ஆணவத்தை போக்கி அருள் புரிகிறான். வாமனன் ஒரு சத்குருவின் வடிவத்திலும் இருக்கலாம். அப்பொழுது மனப்பூர்வமாக நம்மை குருவுக்கே அர்பணித்தால்அவன் சொற்படி நடந்தால் உன்னத நிலைக்கு உயர்த்தி காக்கிறான்.

 

 அனுக்ரஹ அவதாரம்  

இறைவன் நரசிம்மராமகிருஷ்ண அவதாரங்களில் அழிப்பதன் மூலம் அசுரர்களை காத்தான். ஆனால் வாமன அவதாரம் முழுமையாக அருள்வடிவானது. இந்த்ரனுக்கு மீண்டும் அவனுடைய பதவியை அருளினான்அதிதி தேவிக்கு அவள்வேண்டிய வரம் அளித்தான்பலிக்கு மேற்கூறிய பேரருள்பிரமனுக்கு த்ரிவிக்ரமனின் திருவடி பூஜிக்கும் அருள்கங்கை பூமியில் இறங்கி உலகனைத்துக்குமே அருள்புரிந்தான்.

                இவ்வாறு அருள்வடிவான வாமன-த்ரிவிக்ரமனை சிரம் தாழ்த்தி வணங்குவோம்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.