மூலம்: திரு சாயாபதி
தமிழாக்கம்: திருமதி ஜானகி
மைசூர் நகரத்தில் கிருஷ்ணராஜ வ்ருத்தம் எனும் ஓர் நாற்சந்தியில் நால்வடி கிருஷ்ணராஜ ஒடயர் எனும் ஒரு புகழ்பெற்ற அரசரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பளிங்கு சிலையில் செதுக்கபட்ட அச்சிற்பத்தை காணும்போது அவ்வரசனை நேரில் காணும் அனுபவத்தை அளிக்கும் வகையில் மிகவும் அழகுடன் கூடியதாக விளங்குகிறது.
'அங்கு செதுக்க பட்ட மீசை எத்துணை அழகு?", 'அதில் காணப்படும் ராஜ கம்பீரத்தை பார்" என்பவர் சிலர். ஒவ்வொரு அவயவத்தின் அழகையும் கண்டு ரசிக்கும் மக்கள் சிலர்.
அங்கே அரசருக்கே உரிய உடை, அவர் கத்தியை பிடித்துள்ள தோரணை முதலியனவற்றை ரசிப்பவர் பலர். இவ்வாறு அனைவரும் சிற்பத்தின் அழகை புகழ்ந்துபேசுபவர்களே.
ஆனால் அந்த அரசனுடன் சேர்ந்து வாழ்ந்த அரசி அச்சிற்பத்தை கண்டவுடன் தான் அவனுடன் வாழ்ந்த இனிய நாட்களுக்கே சென்று விடுகிறாள். அந்த இனிய நினைவுகளின்பால் மட்டுமே மனம் செல்கிறது. வெளியே காணப்படும் சிற்பத்தின் அழகு,தோரணை, அவயங்களின் மெருகு, உடையலங்காரம் முதலியவைகளை மனம் நாடுவதில்லை. இனிய நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு வெளிஉணர்வின்றி சிற்பத்தை அணைத்துக் கொள்கிறாள். உள்ளம் கரைகிறது. அவளுக்கு அது சிற்பமல்ல. உயிருள்ள உருவம்.
அவ்வாறே ஓர் தெய்வசிற்பத்தை காணும் போது அதன் உள்ளழகை அறியாதவர் மனம் அதன் ஆபரணங்களின் மெருகு, உடையலங்காரம், தோரணை முதலானவற்றில் மட்டுமே அலைகிறது.
ஆனால் தெய்வச்சிலை எந்த உள்உறையும் சக்தியின் ப்ரதிநிதியாக உள்ளதோ அவ்வுள்அனுபவத்தை அடைந்த ஞானிகள் அதை கண்டவுடனே இதயத்தில் கண்ட சத்தியத்தின் பால் அவர்கள் மனம் தாவுகிறது. வெளிப்பார்வைக்கு காணப்படும் எந்த அழகிலும் மனம் செல்லாது தாம் அனுபவித்த இறைஉணர்வில் மனம்ஒன்றி பரமானந்தத்தில் லயிக்கிறார்கள். ஆனந்த கண்ணீர் சொறிந்து, உடல் சிலிர்த்து நிற்கிறார்கள். அந்த மெய்பொருளின்பால் ஈர்ப்பதற்கே இந்த சிற்பம். தன் உள்உரையும் இறைவனிடம் இணைந்து அதற்கு வழிகாட்டும் ஞானிகள்தான் சிற்பங்களின் உண்மையை உணர்த்த முடியும். அவர்களுக்கு விக்ரகமென்பது உள் ஈர்க்கும் ஓர் கைகாட்டி மட்டுமே. அவர்களே இறைஉணர்வில் ஒன்றாய்திளைக்கும் பக்தர்கள்.