Thursday, June 30, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 14 அதர்மம் அநியாயத்திற்காக வேண்டுதலா?(Adharmam aniyayattirkaga vendudalA?)

மூலம்:  திரு.  வரததேசிகாசார்யார்

தமிழாக்கம் : திருமதி வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

    மிகவும் விமரிசையாக பூஜை தொடங்கியது. மந்திரங்களின் முழக்கமும், சங்கு, மணி, தாள வாத்யங்களின் ஒலியும்  மிகுந்திருந்தது.  வீட்டின் தலைவர் வழக்கத்தைவிட  அதிக தூய்மையான(மடியான) ஆடை அணிந்து மேடையில் அமர்ந்தார். கூடை நிறைய பூக்களாலும், (துளசி முதலான) தளங்களாலும்அர்ச்சனை நடந்தது. தூப, தீப, நைவேத்யம்,ஹோமம் மற்றும் ராமாயண பாராயணமும் நிறைவுற்றது.

"என்கோரிக்கைய  நிறைவேற்றும்படி  இறைவனை  வேண்டுங்கள் " என்று பூஜை செய்தவரிடம் எஜமானர் கட்டளை இடும் குரலில் கேட்டுக்கொண்டார். "உங்கள் விருப்பம் என்ன?" என்று வினவியபோது  "இந்த எல்லா சொத்தும் எனக்கே வந்து சேர வேண்டும்.  என் தம்பிக்கு சிறிதளவும்  கிடைக்க கூடாதென்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும்படி இறைவனிடம் வேண்டுங்கள் "என்றார்.

        பூஜை செய்தவருக்கு குழப்பம் ஏற்பட்டது.  அப்போதுதான் அனைவரும் ராமாயண கதையை கேட்டிருந்தனர். 'தந்தையார் அளித்த வாக்கின்படி அரசுரிமை தம்பி பரதனுக்கே சேர வேண்டும். இதுவே அறம். நான் அரசுரிமை ஏற்றால் அறம் கெடும். அதுவுமன்றி பரதன் அரசாள தகுந்தவன்.  அவன் என் அன்பிற்குரிய தம்பி. எனவே அவனே அரசனாகட்டும்' என்று தன் கைக்கு எட்டிய அரசுரிமையை  தம்பிக்கே விட்டு கொடுத்த தர்மவான், தியாகி  ஸ்ரீராமசந்திரன்.  ஆனால் இங்கோ தம்பிக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய சொத்தும் இந்த அண்ணனுக்கே  சேர வேண்டும்' என்று  அதர்மத்திற்கு துணை போகும்படி அந்த தர்ம ப்ரபுவை கோரவேண்டுமாம்! எத்தகைய நெருக்கடி.

முடிவில் பூஜை செய்தவர் தன் கட்சிகாரன் தவறானவனாயினும் அவனுக்காக வாதாடும் வக்கீலை போலவே நடந்து கொண்டு விட்டார். தன் எஜமானனின் கோரிக்கையை உரத்த குரலில் முறையிட்டார். இத்தகைய பூஜையை ஏற்றுக்கொள்பவனை  இறைவன் என்று எந்த அறநூலும் ஒப்புவதில்லை.