Thursday, June 2, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 10 துன்புறுத்தல் - துன்புறுத்தாமை (ஹிம்ஸை - அஹிம்ஸை)(Tunburuttudal - tunburuttmaiHimsai - Ahimsai)

மூலம்:  திரு.  வரததேசிகாசார்யார்

தமிழாக்கம் : திருமதி  வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


         

துன்புறுத்தல் மிகக்கொடிய தவறு. துன்புறுத்தாமை உயரிய அறம் என்று எல்லா அற நூல்களும் கூறுகின்றன. இது உயர்ந்த அறிவுரை என்பதில் ஐயமில்லை. ஆனால் அறிவுரை இருப்பது நடைமுறைக்காயினும் செயல்பாட்டிற்கு இல்லாமல்   அறிவுரையாகவே நின்றால் அதனால் எவ்வித  நற்பலனும் இல்லை. இந்த துன்புறுத்தாமையை முழுவதுமாக கடைபிடிப்பது இயலுமா? எனபதை அறிவுடன் ஆராய வேண்டும்.


        துன்புறுத்தாமை என்றால் எவ்வுயிரையும் மனம், மொழி, மெய்யால் துன்புறுத்தாது இருத்தல். ஆனால் இவ்வாறு எவருக்கும் எவ்வகையிலும் துன்பம் விளைவிக்காமல்  வாழ்வதென்பது இயலாது. ஏனெனில் நாம் கூறும் துன்புறுத்தாமை அறிவுரையே துன்பம் செய்வதையே வலியுறுத்தி, துன்புறுத்துவதையே வழக்கமாகக் கொண்ட  சில தீயவர்கள் மனதிற்கு துன்பமளிக்கும். எனவே ஒருவருக்குமே  துன்பமளிக்காமல் இருப்பது இயலாது. ஒரு வேலைக்கு நூற்றுகணக்கானோர் விண்ணப்பிக்கிறார்கள். அதில் ஒருவருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. அப்போது மற்றவர்களுக்கு  மனத்துன்பம் ஏற்படுவது இயற்கை. எனவே முழுமையாக ஒருவருக்கும் தீது செய்யாமல் வாழ இயலாவிடினும் முடிந்த வரை குறைந்த அளவு  துன்பமளித்து வாழும்படி ஆன்றோர்கள்  அறிவுருத்துகின்றனர். 'அத்ரோஹேணைவ பூதானாம் அல்ப த்ரோஹேண வாபுன'


       நாம் சைவஉணவையோ அல்லது மற்றெந்த வகை உணவையோ ஏற்றுக்கொண்டாலும் அதனால் துன்பம் ஏற்படும். எனவே உணவையே ஏற்காமல் தவிர்த்தால் நம்  உயிருக்கே¸ மிக்க கேடு. எனவே உணவிற்காக தவிர்க்க இயலாமல் குறைந்த அளவே துன்பம் தரலாம். தவிர்க்க இயலாமல் அளித்த துன்பத்தால் விளையும் பாவத்தை இறைவனை பூஜித்தல், விருந்தோம்பல் போன்ற நற்செயல்களால் போக்கி கொள்ளலாம். ஆராய்ந்து பார்க்கையில் அனைவருக்கும் உண்மையான  தேவை இன்பமும் மன அமைதியும்தான். அவற்றை அளிக்கவல்லவன் இறைவன். அவனை அடையும் முயற்சியில்  தடையாக உள்ளதே மிகப்பெரிய துன்பமாகும். இறைவனை அடைவதில் உறுதுணையாக உள்ளதே துன்புறுத்தாமை என்று  ஞான விஞானத்தில் உயரிய நிலை அடைந்த  ஸ்ரீரங்கமஹாகுரு உபதேசித்தருளினார்.