Thursday, July 1, 2021

வாழ்வின் வாயிலில் தேவரதம் (Vazhvin Vayilil Devaratam)

மூலம்: சுமேதா எம். ஏ

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)நாம் நம் அன்பிற்குரியவரின் இல்லத்திற்கு செல்கையில் அவர்களை நம் இல்லத்திற்கு வருமாறு அழைத்தல் இயற்கை. முக்கியமான நிகழ்வுகளில் நம் விருந்தினராக வரவேண்டுமென வற்புறுத்துவோம். சில நேரங்களில் அவர்களால் நேரில் வந்து கலந்து கொள்ள இயலாது. நாம் அன்புடன் அழைத்ததை மதித்து அச்சிக்கலுக்கு இணக்கமான ஒரு தீர்வை கண்டறிவர். குடும்ப தலைவர் தன் மகனை தன் ப்ரதிநிதியாக அனுப்புவார். நாம்     மகனுக்கு, தந்தைக்குரிய கௌரவத்தையும் மதிப்பையும் அளித்து தந்தைக்கே அவற்றை செலுத்தியது போன்ற நிறைவடைகிறோம். சாதாரணமாக நிகழும், நாம் வழக்கமாக கண்ணுறும்,  இத்தகைய நிகழ்வுகள் 'ரதோத்ஸவத்தின்' அதாவது இறைவனின் தேரோட்டத்தின் பின்னணியில் உள்ள கருத்தை விளக்கும். தினந்தோறும் இறைவனை (மூலவரை)கர்ப்பகிருஹத்தில் வழிபட்டாலும் அவனை இல்லத்திற்கு அழைத்து வழிபட விரும்புகிறோம். இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வரமே ரதோத்ஸவம். 


   பாரதத்தின் முனிவர்கள் இறைவனின் மூல மூர்த்திக்கு ப்ரதிநிதியாக உத்ஸவ மூர்த்திகளை நிறுவியதன் காரணம் இதுவே. இத்தகு உத்ஸவ மூர்த்திகள் பூஜிக்கப்பட்டு கிராமத்தின்/நகரத்தின் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து செல்லபடுவர். மூலமூர்த்தி தன் அளப்பரிய அருளை உத்ஸவ மூர்த்தியின் வாயிலாக தன் அடியவர்களின்மேல் பொழிகிறார். அதே போன்று அடியவர்களின் பக்தியும் அவருக்கு செலுத்தப்படுகிறது


 உத்ஸவம் என்பது ஒரு யக்ஞத்தை குறிக்கும். அதாவது ஜீவனை மூலத்திற்கு உயர்த்தும். அதன் பொருள்: பரம்பொருளை (பரஞ்ஜோதியை) அனுபவித்து உணரும் பாதையில் நடத்தி செல்வது. இந்நிலையை அடைய தேரோட்டங்கள் முக்கிய பங்காற்றுக்கின்றன. இவ்விழாவின் போது பல வண்ணத்துடன் பல வகையான கோலங்கள் வீடுகளையும், வீதிகளையும் அலங்கரிக்கும். வாழ்கையெனும் கொடியைப்போல் இக்கோலங்கள் இறைவனை வணங்கி வரவேற்கின்றன. தேர் செல்லும் பாதை நெடுகிலும் வரிசையான விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. மக்கள் இறைவன் தங்கள் இல்லத்திற்கே வருவது போன்று கோலாகலமாக வரவேற்பர். ரதமானது அனைத்து வகையான வேத மந்திரங்களாலும், ஜேங்காரத்தாலும், துதி பாடல்கள், நடனம், மற்றும் இசை கருவிகளின் முழக்கத்தாலும் ஒளிரும்.  அனைத்து அடியவர்களும் இறைவனுக்கு, பழங்கள் பூக்கள், மற்றும் தீபாராதனையை அர்ப்பணிப்பர். அனைத்து பக்தர்களும் இறைவன்பால் ஒன்றிய மனதுடன் ரதத்தை வடம் பிடித்து இழுப்பர். தன் பக்தர்களுக்கு காட்சி அளித்த பின் உத்ஸவ மூர்த்தி மூல மூர்த்தியுடன் சென்று இணைவார்.


இங்கு ஸ்ரீரங்கமஹாகுரு உத்ஸவத்தின் நுணுக்கங்களை குறித்து இவ்வாறு விளக்கியுள்ளார். ரதத்தின் வடத்தை பற்றி இழுக்கையில் நம் உலகாயதனமான விருப்பங்களை விடுத்து இறைவனின் இச்சை எனும் ரதத்தில் சரணடைதல் வேண்டும்.


நம் உடல் ஆலயங்களுக்கும், ரதத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. ரதத்தை செலுத்துபவன் பரம புருஷனன்றி வேறில்லை. நம் கால்கள் ரதத்தின் சக்கரங்களுக்கு இணையானது. நம் உள்ளம்(இதயம்) மண்டபத்தை குறிக்கும். சோம-சூர்ய-அக்னி மண்டலங்கள் கோபுரத்தை ஒக்கும். சிரத்தின் உச்சியில் ஒளிர்வது ப்ரணவம்(ஓம்/ஓங்காரம்). இறைவன் பரிசாக அருளிய இவ்வுடலை பகவத்ரதமாக மாற்றுவது நம் தலையாய கடமையாகும்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.